கமர்ஷியல் சினிமா எப்படிப்பட்ட பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டாலும், இதுவரை சொல்லப்படாத கதையைத் திரையில் சொல்வதென்பது இயலாத காரியம்.
காட்சியாக்கத்தில், கதை சொல்லும் முறையில் சில புதுமைகளைச் செயல்படுத்தலாம். தவிர, ‘முழுப்படமும் புதிதாகத் தெரியும்’ என்பதெல்லாம் அதீத தன்னம்பிக்கையின் வெளிப்பாடாகவே இருக்கும்.
அதேநேரத்தில், அரைத்த மாவையே திரும்பவும் அரைக்காமல் இருக்கச் சில விஷயங்கள் புத்தம்புதிதாக அமைய வேண்டும்.
அந்த வகையில், நம்மை ஈர்க்கக்கூடிய கமர்ஷியல் சினிமா உள்ளடக்கத்தைக் கொண்டிருக்கிறதா என்ற கேள்வியை எழுப்பியது ‘ராஜபுத்திரன்’ ட்ரெய்லர்.
மகா கந்தன் இயக்கியிருக்கிற இப்படத்தில் பிரபு, வெற்றி, கிருஷ்ணபிரியா உடன் மன்சூர் அலிகான், ஆர்.வி.உதயகுமார், தங்கதுரை, இமான் அண்ணாச்சி, லிவிங்ஸ்டன் உட்படப் பலர் நடித்துள்ளனர்.
கன்னட நடிகர் கோமல் குமார் இதில் வில்லனாக அறிமுகம் ஆகியிருக்கிறார்.
தற்போது இப்படம் தியேட்டர்களில் வெளியாகியிருக்கிறது. எப்படி இருக்கிறது ‘ராஜபுத்திரன்’ தரும் திரையனுபவம்?
கதை என்ன?
ராமநாதபுரம் வட்டாரத்திலுள்ள ஒரு வறட்சியான கிராமம். அங்கு வாழும் மனிதர்களில் ஒருவர் செல்லையா (பிரபு). ஓரளவு வசதியான குடும்பம். இருந்தாலும், தேடி வந்தவர்களுக்கு உதவிகள் செய்து செல்வத்தை இழந்து நிற்கிறார்.
மனைவியை இழந்த செல்லையா தனது மகன் பட்டமுத்து (வெற்றி) மகள், தாய் உடன் வசித்து வருகிறார்.
மகள் மீது பிரியம் இருந்தாலும், மகன் மீது இருக்கும் அன்பு ஒரு படி அதிகம். சிறு வயதில் கொண்ட அந்தப் பாசம் வளர வளர அதிகமாகிறதே தவிரக் குறையவில்லை.
அதன் காரணமாக, மகன் பட்டனை எந்த வேலைக்கும் அனுப்பாமல் இருக்கிறார் செல்லையா. அதேநேரத்தில், விவசாயத்திற்காக வாங்கிய கடனுக்காகச் சில நிலங்களை அடமானம் வைக்கிறார்.
தந்தை படும் கஷ்டத்தைக் கண்டு, அவருக்குத் தெரியாத இடத்தில் வேலை செய்ய முடிவெடுக்கிறார் பட்டன்.
அதற்காக, வெளிநாட்டில் வேலை செய்யும் தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்தினருக்கு அனுப்புகிற சம்பளப் பணத்தை வாங்கித் தருகிற லிங்காவிடம் (கோமல் குமார்) வேலையில் சேர்கிறார்.
பெருமளவு கருப்பு பணத்தை வெளிநாடு வாழ் தொழிலாளர்களின் சம்பளமாக மாற்றி, பெரும் தொகையை லவட்டுகிற கும்பலைச் சேர்ந்தவர் லிங்கா. கிட்டத்தட்ட இருபதாண்டுகளுக்கும் மேலாகச் செல்வாக்குடன் திகழ்கிறார்.
இந்த நிலையில், சிண்டிகேட்டில் அவருக்கு இருக்கிற செல்வாக்கை அடைய ஆசைப்படுகிறார் தேவராஜ் (ஆர்.வி. உதயகுமார்).
அதற்காக, லிங்காவிடம் வேலைப் பார்க்கும் மீசையை (லிவிங்க்ஸ்டன்) தன் வலையில் விழ வைக்கிறார். அவர் வழியே லிங்காவின் செயல்பாடுகளை முடக்குகிற வேலைகளைக் கவனிக்கிறார்.
அதற்காக, சில நபர்களிடம் அதிகப் பணத்தைக் கொடுத்தனுப்புகிறார் மீசை. அடியாட்கள் சிலரை ஏவி அவர்களிடம் இருக்கிற பணத்தை ‘அபேஸ்’ செய்யச் சொல்கிறார்.
பணத்தை எடுத்துச் சென்றவர்கள் வந்து புலம்ப, அவர்களைக் கொலை செய்கிறார் மீசை. அதோடு, அந்தக் குடும்பத்தினரின் நிலம், வீடு பறிக்கப்படுகிறது.
அந்த வரிசையில் பட்டன் கொண்டு செல்லும் பணத்தின் மீது கண் வைக்கிறது அந்த நயவஞ்சகக் கும்பல்.
அவர்களிடம் பட்டன் பணத்தை இழந்து ஏமாந்தாரா? விஷயம் அறிகிற லிங்கா என்ன செய்தார்? தேவராஜ் இந்த விஷயத்திற்காக மீசையை எப்படிப் பயன்படுத்தினார்? இத்தனைக்கும் நடுவே ஹீரோயின் என்ற ஒருவர் பூச்செண்டு என்கிற பாத்திரத்தில் திரைக்கதையில் இடம்பிடிக்கிறாரே, அவரது பங்களிப்பு என்ன என்பது போன்ற பல கேள்விகளுக்குப் பதிலளிக்கிறது ‘ராஜபுத்திரன்’.

பழைய வாசனை!
தொண்ணூறுகளில் நிகழ்வதாகவே ‘ராஜபுத்திரன்’ படத்தின் காட்சிகள் அமைந்திருக்கின்றன.
ஏனென்றால், வெளிநாடுகளில் வாழ்கிற தொழிலாளர் வர்க்கம் பணத்தைத் தமது குடும்பத்தினருக்கு அனுப்பத் தற்போது எத்தனையோ வழிமுறைகள் உள்ளன.
ஆனால், இதில் காட்டப்படுகிற உத்தி குறுக்கு வழியைக் கொண்டது.
வரிகள் ஏதுமில்லாமல் பணம் அனுப்ப முடியும் என்று அவர்களது சம்பளத்தொகையையும் மீறி அதிகளவிலான கருப்பு பணத்தை கணக்கில் காட்ட வைக்கிற வகையில் செய்யப்படுகிற மோசடி அது.
ஆனால், திரைக்கதையில் விலாவாரியாக விளக்கப்படவில்லை. ‘எதுக்கு தியேட்டர்ல பாடம் எடுக்கணும்’ என்று இயக்குநர் மகா கந்தன் நினைத்திருக்கலாம்.
இந்தப் படத்தில் நாயகன், நாயகி, வில்லன், இதர பாத்திரங்கள் என்று எதுவுமே புதிதல்ல. ஆனால், வில்லன் மற்றும் அவரிடம் நாயகன் வேலைக்குச் சேர்கிற அந்தப் பணியிடம் நம்மில் பெரும்பாலானோர் அறிந்திராதது.
அதுவே கிட்டத்தட்ட முக்கால்வாசி படத்தைக் கண் இமைக்காமல் பார்க்கச் செய்கிறது.
காட்சிகளில் புதுமை இல்லாதபோதும், போரடிக்காமல் திரைக்கதை நகர்கிறது. ஆனால், இரண்டாம் பாதியில் வரும் ஒரு ‘உம்மா’ பாடல் அந்த நகர்வுக்குப் பெரிதாக ‘பிரேக்’ போடுகிறது.
அதன்பிறகு வருகிற காட்சிகள் அனைத்தும் ‘க்ளிஷே’வின் உச்சமாக அமைந்து நம்மை படாத பாடு படுத்துகின்றன.
கிராமத்துச் சூழலை அதன் இயல்போடு பதிவு செய்ய முயற்சித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஆலிவர் டெனி. படத்தொகுப்பாளர் கமலகண்ணன் முன்பாதியில் காட்டிய கெடுபிடியைப் பின்பாதியில் பின்பற்றத் தவறியிருக்கிறார்.
கலை இயக்குநர் அய்யப்பன், இது ஒரு கிராமத்துப் படம் தான் எனும்படியாகத் திரையில் சில உள்ளடக்கத்தை நிறைத்திருக்கிறார்.
இது போக விஎஃப்எக்ஸ், சவுண்ட் எபெக்ட்ஸ் உள்ளிட்ட சில அம்சங்கள் கவர்கின்றன.
நவ்ஃபால் ராஜாவின் பின்னணி இசையானது சில இடங்களில் ரசிக்க வைக்கிறது. பாடல்கள் நம் காதுகளைத் தாண்டி கடந்து செல்கின்றன.
நடிப்பில் வெற்றி காட்டியிருக்கும் வித்தியாசம் அபாரம். ஒரு கிராமத்து இளைஞனாகவே திரையில் தெரிகிறார்.
நாயகியாக வரும் கிருஷ்ணபிரியா தனது பாந்தமான நடிப்பால் ஈர்ப்பு கொள்ள வைக்கிறார். ஓரளவுக்கு நடிக்கவும் செய்கிறார். என்ன, உயரம்தான் ரொம்பவும் கம்மி.
மிகச்சில இடங்களில் மிகை நடிப்பு வெளிப்பட்டாலும், ‘சீனியரான நம்மை அழைத்த காரணம் என்ன’ என்பதறிந்து நடித்திருக்கிறார் பிரபு.
இந்தப் படத்தில் மன்சூர் அலிகான் பாத்திரம் ஏன் வருகிறதென்று தெரியவில்லை.
ஆர்.வி. உதயகுமார் முதல் காட்சியில் தலைகாட்டிவிட்டு, அதன்பின் ‘பெப்பே’ என்கிறார். இறுதியாக, கிளைமேக்ஸில்தான் முகம் காட்டுகிறார்.
இது போக லிவிங்ஸ்டன், இமான் அண்ணாச்சி உட்படச் சிலர் படத்தில் உண்டு.
வில்லனாக நடித்திருக்கிறார் கன்னட நடிகர் ஜக்கேஷின் மகன் கோமல் குமார். அவரது நடிப்பு சில இடங்களில் நம்மை மிரள வைக்கிறது.
என்னதான் பத்து அல்லது இருபதாண்டுகளுக்கு முன் நிகழ்வதாகத் திரைக்கதையை வடிவமைத்தாலும், அதைவிடவும் பழைய வாசனையைக் காற்றில் கலக்கச் செய்கிறது ‘ராஜபுத்திரன்’.

மகளை விட ஒருபடி அதிகமாக மகன் மீது பாசம் கொள்கிறது பிரபு பாத்திரம் என்பது போன்ற விஷயங்கள் நம்மைப் பழங்காலத்திற்கு இழுத்துச் செல்கின்றன.
அதையும் தாண்டி, நம்மை ஈர்ப்பதுடன் கிளைமேக்ஸில் என்னதான் நடக்கிறது எனப் பார்ப்போம்’ எனக் காத்திருக்கச் செய்கிறது ‘ராஜபுத்திரன்’.
இப்படம் பெரிய கொண்டாட்டத்தை நிகழ்த்தவல்லதல்ல. அதேநேரத்தில், ‘இந்தப் படம் பார்க்கலாமா’ என்று தியேட்டருக்குள் நுழைபவர்களை நிச்சயம் ஏமாற்றாது இந்த ‘ராஜபுத்திரன்’.
– உதயசங்கரன் பாடகலிங்கம்