Take a fresh look at your lifestyle.

எம்.ஜி.ஆர் படத்துக்கு வசனம் எழுத மறுத்த கலைஞர்!

1952-ல், மணப்பாறையைச் சேர்ந்த ஒரு நாடக மன்றத்தின் நிர்வாகியான உறந்தை உலகப்பன் என்பவர் திருச்சியிலே நடைபெற்ற ‘அரும்பு’ என்ற நாடகத்திற்கு தலைமை தாங்குவதற்காக எம்.ஜி.ஆரையும் கலைஞர் மு.கருணாநிதியையும் அழைத்திருந்தார்.

அவர்கள் இருவருமே திரையுலகில் மிகவும் செல்வாக்கோடு இருந்த காலகட்டம் அது என்பதால் அந்த நாடக அரங்கம் மக்கள் வெள்ளத்தில் திணறியது.

அதுவரை கதர் ஆடை அணிந்து கொண்டிருந்த எம்.ஜி.ஆர். கருப்பு சிவப்பின் பக்கம் தன்னுடைய கவனத்தைத் திருப்ப அடித்தளம் அமைத்தது அந்த அந்த விழாதான்.

பல வகைகளில் காலத்தால் மறக்க முடியாத ஒரு முக்கியமான விழாவாக அந்த விழா அமைந்தது என்றாலும் அதிலே கலந்து கொண்ட எம்.ஜி.ஆர், கலைஞர் மு.கருணாநிதி உட்பட எவருக்கும் அப்படி ஒரு விழாவாக அது அமையப்போகிறது என்று அப்போது தெரியாது.

‘அரும்பு’ நாடகத்தின் இடைவேளையில் பேசுவதற்காக கலைஞர் மு.கருணாநிதி தயாராகிக் கொண்டிருந்தபோது “புரட்சி நடிகர்” என்ற பட்டத்தை எம்.ஜி.ஆருக்கு நீங்கள் தர வேண்டும் என்று அவரிடம் கோரிக்கை வைத்தார் உறந்தை உலகப்பன்.

அடுத்து பேசிய கலைஞர் “அன்பு மூன்றெழுத்து, பாசம் மூன்றெழுத்து, காதல் மூன்றெழுத்து, வீரம் மூன்றெழுத்து, வெற்றி மூன்றெழுத்து,” என்று முப்பதுக்கும் மேற்பட்ட மூன்றெழுத்துக்களை பட்டியலிட்டார்.

அதன் பின்னர் “தி.மு.க. என்பது மூன்றெழுத்து, அதை வழிநடத்திச் செல்கின்ற அறிஞர் அண்ணா மூன்றெழுத்து” என்று முத்தாய்ப்பு வைத்த அவர் “அந்த வரிசையில் வந்த இன்னொரு மூன்றேழுத்துக்காரரான எம்.ஜி.ஆர் அவர்களுக்கு இந்த விழா மேடையிலே “புரட்சி நடிகர்” என்ற பட்டத்தை சூட்டுகிறேன்” என்று அறிவித்தார்.

அப்படி அவர் அறிவித்தபோது அங்கே கூடியிருந்த ரசிகர்கள் கைதட்டல்கள் அடங்க பல நிமிடங்கள் ஆகின.

அடுத்து மைக்கைப் பிடித்துப் பேச வந்த எம்.ஜி.ஆர். தனது உணர்ச்சிமிக்க உரையினால் அங்கிருந்த கூட்டத்தினரின் உற்சாகத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் சென்றார்.

“புரட்சி நடிகர் என்ற பட்டத்தை இந்த மேடையிலே இன்று வழங்கியிருக்கிறீர்கள். அதை வெளிப்படுத்தும் விதமாக புரட்சி நடிகராகவே என்னை கழகத்துக்கு அர்ப்பணித்துக் கொள்கிறேன்.

கதராடை அணிந்திருந்தாலும் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா ஆகியோரின் கொள்கைகளுக்காக நான் அயராது பாடுபடுவேன்.

கலைஞரோடு நெருக்கமாகப்பழகத் தொடங்கிய பிறகுதான் இயக்கக் கொள்கைகளில் எனக்கு ஈடுபாடு வந்தது.

என் உடலில் ஒரு சொட்டு ரத்தம் இருக்கும் வரை அறிஞர் அண்ணாவிற்காகவும் திராவிட முன்னேற்றக் கழகத்துக்காகவும் உழைப்பேன் என்று உறுதியளிக்கிறேன்” என்றார்.

எம்.ஜி.ஆர். பேசி முடித்தபோது அங்கே கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் உணர்ச்சி வெள்ளத்தில் மிதந்தனர்.

அந்த மேடையிலே அன்று வழங்கப்பட்ட “புரட்சி நடிகர்” என்ற பட்டம் கர்ணனது கவச குண்டலம் போல திரையுலகில் எம்.ஜி.ஆர். ஆட்சி செய்தவரை அவருடைய பெயருடன் இணைந்து இருந்தது.

திரையுலகத்தை ஆண்டு விட்டு தமிழகத்தை அவர் ஆளத் தொடங்கிய போது “புரட்சி நடிகர்” என்ற பட்டம் “புரட்சித் தலைவர்” என்று மாற்றம் பெற்றது.

கலைஞரை பங்குதாரராகக் கொண்டு மேகலா பிக்சர்ஸ் என்ற நிறுவனத்தைத் தொடங்கிய எம்.ஜி.ஆர். அந்த நிறுவனத்தின் சார்பில் எடுத்த முதல் படமாக ‘நாம்’ திரைப்படம் அமைந்தது.

எம்.ஜி.ஆர் – ஜானகி ஜோடியாக நடித்த அந்தத் திரைப்படத்திற்கு கலைஞர் திரைக்கதை வசனம் எழுத அந்த நிறுவனத்தில் இன்னொரு பங்குதாரராக இருந்த ஏ.காசிலிங்கம் இயக்கினார்.

அந்தப் படத்திலே இடம்பெற்ற ஒரு காட்சியில் பாட்டாளிகளுக்காக எம்.ஜி.ஆர். வாதாடும்போது அவரை முறைத்துப் பார்க்கும் ஜமீந்தார் “என்னடா ஆச்சர்யக்குறி போடுகிறாய்” என்பார்.

அதற்கு எம்.ஜி.ஆர்., “ஆச்சர்யக்குறிதான் ஜமீந்தார் அவர்களே. கொஞ்சம் வளைந்தால் கேள்விக்குறியாக மாறிவிடும். ஞாபகம் இருக்கட்டும், அரிவாளுக்கும் கேள்விக்குறிக்கும் அதிக வித்தியாசம் இல்லை” என்பார்.

இப்படி அந்தப் படம் முழுவதும் பல இடங்களில் கலைஞரது வசன வரிகள் தெறித்தன.

மலைக்கள்ளன் உருவான கதை:

எம்.ஜி.ஆரும், கலைஞரும் இணைந்து பணியாற்றிய பல திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றியை அடைந்திருந்தது.

அதனால் ‘மலைக் கள்ளன்’ படத்திற்கு கலைஞர் கருணாநிதி வசனம் எழுத வேண்டும் என்று பெரிதும் விரும்பிய அப்படத்தின் தயாரிப்பாளரும் இயக்குனருமான ஸ்ரீராமுலு நாயுடு கருணாநிதியை அணுகி படத்திற்கு வசனங்களை எழுத வேண்டும என்று கேட்டார்.

அந்த வாய்ப்பை ஏற்க மறுத்த கலைஞர் அதற்கு ஒரு நியாயமான காரணத்தைக் கூறினார்.

“மலைக்கள்ளன் நாவலை எழுதிய நாமக்கல் கவிஞர் வெ.ராமலிங்கம் பிள்ளை மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. ஆனால், அவர் காங்கிரஸ்காரர்.

அப்படிப்பட்ட சூழ்நிலையில் அவர் கதைக்கு நான் வசனம் எழுதினால், இரு தரப்பு ரசிகர்களும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அதனால் என்னை மன்னித்துக் கொள்ளுங்கள்” என்று பணிவுடன் அவர் கூறினார்.

கலைஞர் அப்படி சொன்னதையடுத்து எம்.ஜி.ஆரை சந்தித்த ஸ்ரீராமுலு நாயுடு, “மலைக்கள்ளன் படத்திற்கு கலைஞர் வசனம் எழுத வேண்டும், நீங்கள் நடிக்க வேண்டும் என்பது என் விருப்பம்.

ஆனால், அவர் வசனம் எழுத மறுக்கிறார். நீங்கள் அவரை சம்மதிக்க வைத்தால், நான் மலைக்கள்ளனைத் தயாரிக்கிறேன். நீங்கள்தான் கதாநாயகன்” என்றார்.

கலைஞர் வசனம் எழுதவில்லை என்றால் நான் படத்தைத் தயாரிப்பதாக இல்லை என்று அவர் நேரடியாகச் சொல்லவில்லை என்றாலும் அவர் பேசிய பேச்சு அப்படிப்பட்ட முடிவைத்தான் அவர் எடுப்பார் என்று எம்.ஜி.ஆருக்கு சொல்லாமல் சொல்லியது.

‘மலைக்கள்ளன்’ கதை நிச்சயமாக வெற்றிப் படமாக அமையும் என்று எம்.ஜி.ஆர். திடமாக நம்பியதால் அந்த வாய்ப்பை இழக்க அவர் தயாராக இல்லை.

ஆகவே உடனடியாக கருணாநிதியை சந்தித்த அவர் “நாமக்கல் கவிஞர் காங்கிரஸ்காரர் என்றாலும், ‘மலைக்கள்ள’னில் எந்த இடத்திலும் கட்சிப் பிரசாரத்தை அவர் முன்னிறுத்தவில்லை. ஆகவே நீங்கள் மறுக்காமல் படத்திற்கு வசனம் எழுதவேண்டும்” என்று கலைஞரிடம் கேட்டுக் கொண்டார்.

‘மலைக்கள்ளன்’ கதையை கலைஞரும் ஏற்கனவே படித்திருந்ததால் நிச்சயமாக அது வெற்றிப்படமாக அமையும் என்று அவருக்கும் தெரிந்திருந்தது.

அது மட்டுமின்றி அப்போது எம்.ஜி.ஆருக்கும் கருணாநிதிக்கும் இடையே மிக நெருக்கமான உறவு இருந்ததால் அந்த உறவுக்கு மதிப்பளித்து அந்தப் படத்திற்கு வசனம் எழுத அவர் ஒப்புக்கொண்டார்.

‘மலைக்கள்ளன்’ படத்திலே அவர் எழுதிய வசனங்களில் அனல் பறக்கவில்லை. அதற்குப் பதிலாக தென்றல் வீசியது.

கதைக்கும், கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து அந்தப் படத்திற்கான வசனங்களை மிகவும் எளிய நடையில் எழுதித் தந்தார் அவர்.

‘மலைக்கள்ளன்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடையும் கட்டத்தை நெருங்கியபோது கலைஞருக்கும் படத்தின் தயாரிப்பாளரான ஸ்ரீராமுலு நாயுடுவிற்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

அந்தப் பிரச்சனையில் மனம் புண்பட்டிருந்த கலைஞர், “மலைக்கள்ளன் படத்தின் விளம்பரங்களில் வசனம் மு.கருணாநிதி என்று என் பெயரைப் போடக்கூடாது” என்று கண்டிப்பாக ஸ்ரீராமுலு நாயுடுவிடம் சொல்லி விட்டு திருவாரூருக்கு கிளம்பி விட்டார்.

‘மலைக்கள்ளன்’ படம் மிகப்பெரிய வெற்றியை தனது நிறுவனத்துக்குத் தேடித் தரப் போகிறது என்று எண்ணிக் கொண்டிருந்த ஸ்ரீராமுலு நாயுடு கலைஞரின் கோபத்தால் நிலை தடுமாறிப்போனார்.

படத்தின் நாயகனான எம்.ஜி.ஆரின் நிலையும் அதுவாகவே இருந்தது.

கலைஞரின் பெயர் இல்லை என்றால் நாம் எதிர்பார்க்கின்ற வெற்றியை நிச்சயமாக அடைய முடியாது என்று எண்ணிய எம்.ஜி.ஆர். நடிப்பிசைப் புலவர் கே.ஆர்.ராமசாமியை அழைத்துக் கொண்டு கலைஞரை சந்திக்க திருவாரூருக்கு உடனடியாக புறப்பட்டார்.

கலைஞருடன் நீண்ட நேரம் பேசி கே.ஆர்.ராமசாமி அவரை சமாதானப்படுத்தியபோது,

“உங்கள் பெயர் திரையில் இடம் பெறவில்லை என்றால் இந்தப் படம் நாம் எதிர்பார்க்கின்ற வெற்றியை நிச்சயமாக அடையாது” என்று கலைஞரிடம் கூறினார் எம்.ஜி.ஆர்.

அவர்கள் இருவரும் அப்படி மாறி மாறிப் பேசியவுடன் சாந்தமடைந்த கலைஞர் ஸ்ரீராமுலு நாயுடுவை சந்திக்க அவர்களுடன் புறப்பட்டார்.

1954 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 22 ஆம் தேதியன்று வெளியான ‘மலைக்கள்ளன்’ மிகப் பெரிய வெற்றிப் படமாக அமைந்தது.

“அப்போது தமிழ்த் திரையுலகில் முதல் வரிசையில் நான் இடம் பிடித்திருந்தாலும் அந்த வரிசையில் எனக்கு எந்த இடம் என்ற கேள்விக்கு முதலிடத்தையும் கொடுக்கலாம் என்று சிலராவது எனும் தகுதிக்கு என்னை உயர்த்திய படம் அது” என்று ‘மலைக்கள்ளன்’ படத்தின் வெற்றியைப் பற்றி குறிப்பிட்டிருக்கிறார் எம்.ஜி.ஆர்.

கலைஞர் – எம்.ஜி.ஆர். ஆகிய இருவருக்குமிடையே அப்போது இருந்த அழுத்தமான நட்புதான் அந்த வெற்றியை சாத்தியமாக்கியது.

– சித்ரா லட்சுமணன் முகநூல் பதிவு