“1976. செப்டம்பர் 16 ஆம் தேதி. கேரளாவில் பாரதப் புழை நதி நுங்கும் நுரையுமாக வெள்ளம் பெருக்கெடுத்தது.
இரவு ஏழு மணி இருக்கும்.
மோகன், லட்சுமி, நான் ஆகியோர் ஆற்றில் குளித்துக் கொண்டிருக்கிறோம்.
கண்ணுக்கெட்டிய தூரம் வரை காக்காய், குருவி கூடக் கிடையாது. நல்ல மையிருட்டு. சொல்ல மறந்துவிட்டேன் – சுட்டுப் போட்டால் கூட எனக்கு நீச்சல் வராது.
இடுப்பளவு நீரில் நின்று முங்கி முங்கிக் குளித்துக் கொண்டிருந்தவன், திடீரென்று உள்ளே இழுக்கப்படுகிறேன்.
நீரின் அடியில் உள்ளே… உள்ளே அதல பாதாளத்தை நோக்கி அடித்துச் செல்லப்படுவதாக உணர்வு.
மூச்சுத்திணற செவிப்பறைகளிலிருந்து ‘ணங் ணங்’ என்று காது செவிடுபடும்படி ஒரு சத்தம் கிளம்ப, வாய் வழியே – மூக்கு வழியே ஆற்று நீர் வயிற்றில் நிரம்ப, சாவுக்கு முன்னுள்ள சகல பயங்களும், ஏக்கங்களும், திணறல்களும் நெஞ்சில் நிறைய…
ஐயோ! நான் செத்துப் போகப் போகிறேன்!
முப்பது, நாற்பதடி ஆழத்தில் போய் ஆற்றின் அடி மணலில் காலை உந்தி, கையை வீசி, உடலை நெம்பி, திக்கித் திணறி மேலே வந்து, மூச்செடுப்பதற்குள் மறுபடியும் கீழே இழுக்கப்பட்டு, மீண்டும் தண்ணீர் குடித்து, சாகப்போகிறேன் என்ற திகைப்பில் தன் நினைவிழந்து தவித்துத் திணறிக் கொண்டிருந்த கடைசி விநாடியில்… ஒரு வலுவான கரம் என்னைத் தாங்கிப் பிடிக்கிறது.
“பாலு.. பதற வேண்டாம். கடைசி வரையும் நான் உங்களை விட்டுப் போக மாட்டேன். கெட்டியாக என்னைப் பிடித்து அழுத்த வேண்டாம். மெதுவாக என் இடுப்பைப் பற்றிக் கொள்ளுங்கள். பயப்பட வேண்டாம். நான் இருக்கிறேன்’’.
மோகனின் குரல் காதில் விழுந்து கரைந்து தேய்கிறது. நான் நினைவிழக்கிறேன்.
மூர்ச்சையான என் முழுப் பாரத்தையும் தன் மார்பில் தாங்கி, நிமிர்ந்து படுப்பது போன்ற நிலையில் மோகன் நீந்தத் துவங்கியிருக்கிறார்.
எத்தனை முயன்றும் அந்தச் சுழியிலிருந்து அவரால் வெளியேற முடியவில்லை. இருபது, முப்பது நிமிடங்கள் போராடியும் இயலாத நிலை.
களைத்துப் போகும் நேரத்தில் லட்சுமி தன் புடவையைக் களைந்து, கழுத்து வரை நீரில் வந்து மோகனிடம் வீச, அவர் அதைப்பற்றிக் கொள்ள, எங்கள் இருவரையும் கரைக்கு இழுத்துப் போனவர் லட்சுமி.
வயிறு நிறைந்த நீரோடு நினைவிழந்து கரையில் கிடந்த என்னைக் குப்புறப் போட்டு மிதித்து, நீரை வெளியேற்றி செயற்கைச் சுவாசம் மூலம் மறுபடியும் எனக்கு உயிர்க் கொடுத்த அந்த அன்புத் தம்பதிக்கு நான் என்ன கைமாறு செய்யப் போகிறேன்…
நான் வெற்றியடையும் சமயங்களில் எல்லாம் முதல் வாழ்த்து லட்சுமியுடையதாகத் தானிருக்கும். கனத்த நெஞ்சும், கண்ணீருமாய் நான் கலங்கி நின்ற சமயங்களில் எல்லாம் கனிவான ஒரு தாயின் பரிவோடு என் அருகிருந்து தேற்றியவரும் அவரே…
இரண்டு தங்கைகளோடு பிறந்தவன் – இருவர் மீதும் இணையற்ற பாசத்தைச் சொரிந்தவன்.
ஒருத்திக் கூட இப்போது என் அருகில் இல்லை. சமுத்திரத்திற்கு அப்பால்.. எங்கோ காணாத தொலைவில்…
ஒரு சகோதரியின் உரிமையோடு இங்கு என்னைக் கண்டிக்கவும், திட்டவும், அதட்டவும், அன்பு செய்யவும் முழுச் சுதந்திரமுள்ளவர் லட்சுமி ஒருவரே’’.
08.08.1984-ல் வார இதழ் ஒன்றில் வெளிவந்த பாலுமகேந்திராவின் டைரிக் குறிப்புகள் என்ற பகுதியிலிருந்து.
*
– இயக்குநர் பாலு மகேந்திராவின் டைரியிலிருந்து.