‘பதினாறு வயதினிலே’ படம் போல் தமிழில் அதிரடித் திருப்பத்தை உருவாக்கிய படம் ‘ஒரு தலை ராகம்’. இரு படங்களுக்கும் பல ஒற்றுமைகள் உண்டு.
பாரதிராஜாவும், டி. ராஜேந்தரும் முறையே இந்தப் படங்கள் வாயிலாகவே அறிமுகம் ஆனார்கள். இரண்டு படங்களும் விநியோகஸ்தர்களால் ஆரம்பத்தில் சீண்டப்படவில்லை.
ஒரு வழியாக ரிலீஸ் ஆகி பிரமாண்ட வெற்றியையும் வசூலையும் குவித்தன இந்த இரு சினிமாக்களும்.
இயக்குநர், நடிகர், பாடகர், இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர், பாடல் ஆசிரியர், தயாரிப்பாளர் என பன்முகத் திறமைக் கொண்ட ராஜேந்தர்தான் ‘ஒரு தலை ராகம்’ படத்தை டைரக்டு செய்தார். ஆனால், படத்தின் தயாரிப்பாளர், இயக்குநர் என டைட்டிலில் தனது பெயரைப் போட்டுக்கொண்டார்.
இதனால் டி.ஆர். கவலைப்படவில்லை. இந்தப் படத்தைத் தொடர்ந்து, ரயில் பயணங்களில், நெஞ்சில் ஒரு ராகம், உயிர் உள்ள வரை உஷா, மைதிலி என்னை காதலி என ஏராளமான ஹிட் படங்களைக் கொடுத்து, தன்னை நிலை நிறுத்திக்கொண்டார் ராஜேந்தர்.
‘ஒரு தலை ராகம்’ படத்தில், கல்லூரி மாணவர் கேரக்டரில் ஒரு காட்சியில் நடித்திருப்பார், டி.ஆர். அதன் பின் தனது படங்களில் சிறிய கேரக்டரில் நடித்து வந்த டி.ராஜேந்தர், தான் தயாரித்து இயக்கி நடித்த ‘உயிருள்ளவரை உஷா’ என்ற படத்தின் மூலம் ஹீரோவாக களமிறங்கினார்.
அந்தப் படத்தில், அவர் நடித்த ஜெயின் ஜெயபால் கேரக்டர் இன்றுவரை பேசப்படுகிறது. அந்தக் கேரக்டரில் ரஜினிகாந்தை நடிக்க வைக்கவே ராஜேந்தர் முதலில் விரும்பினார்.
இந்தப் படத்தின் கதையை எழுதிய ராஜேந்தர், படத்தில் வரும் ஜெயின் ஜெயபால் கேரக்டரில் நடிக்க ரஜினிகாந்த்திடம் கேட்டுள்ளார்.
ரஜினிகாந்துக்கு, அந்தக் கதையில் நடிக்க விருப்பம் இல்லை. டி.ராஜேந்தர் அழைப்பை நிராகரித்து விட்டார் சூப்பர் ஸ்டார்.
இதனால் ஜெயின் ஜெயபால் கேரக்டரில் ராஜேந்தரே நடிக்க நேர்ந்தது. அதன்பின், தான் தயாரித்த படங்களில் எல்லாம் ஹீரோ அல்லது நாயகனுக்கு நிகரான வேடங்களில் நடித்து, உச்சம் தொட்டார்
– பாப்பாங்குளம் பாரதி.