Take a fresh look at your lifestyle.

‘வில்’ – பரபரப்பான வழக்குகளை மையப்படுத்திய படம்!

இயக்குநர் எஸ்.சிவராமன் விளக்கம்

110

எஸ். சிவராமன் இயக்கத்தின் உருவாகியுள்ள ‘வில்’ திரைப்படத்தில் விக்ராந்த், சோனியா அகர்வால், அலேக்யா, பதம் வேணு குமார், மோகன் ராமன், ‘லொள்ளு சபா’ சுவாமிநாதன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். 

டி.எஸ். பிரசன்னா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத் திரைப்படத்திற்கு நடிகை சோனியா அகர்வாலின் சகோதரரான சௌரப் அகர்வால் இசையமைத்திருக்கிறார்.

நீதிமன்றப் பின்னணியில் உருவாகியிருக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் ஒரு பாடல் ஆகியவை வெளியாகி இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில் இப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது.

இதனை, நடிகர் அருண் விஜய் அவருடைய சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு, படக் குழுவினருக்கு வாழ்த்துத் தெரிவித்திருக்கிறார்.

இந்தப் படத்தின் டீஸர் குறித்து பேசிய இயக்குநர் எஸ். சிவராமன்: வில் படத்தின் டீஸரில் ஒரு கதாபாத்திரம் சனாதனம் வேண்டுமா? திராவிடம் வேண்டுமா? இந்த இரண்டும் வேண்டுமா? வேண்டாமா? என்பது தொடர்பாக விமர்சிக்கும் வகையில் உரையாடல் ஒன்று இடம் பிடித்திருக்கிறது.

இதற்கு தணிக்கை குழுவினர் எதிர்ப்புத் தெரிவித்தனர். அத்துடன் சர்ச்சையை ஏற்படுத்தும் அந்த இரண்டு சொற்களையும் நீக்க வேண்டும் என்றார்கள்.

இதற்கு உரிய விளக்கம் அளித்த பிறகு, மும்பையில் உள்ள தணிக்கைக் குழுவினர் ஆய்வு செய்து டீஸரில் இடம் பிடிப்பதற்கு அனுமதி அளித்தனர்.

இந்தப் படத்தில், நீதிமன்றத்தின் நடைமுறைகளை யதார்த்தமாகவும், இயல்பை மீறாமலும் பதிவு செய்திருக்கிறோம்.

‎உயர் நீதிமன்றத்தில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக வழக்கறிஞராகப் பணியாற்றி வருவதால், மக்களுக்கு நன்மை செய்வதில் நீதிமன்றத்தின் பங்களிப்பு குறித்த விவரங்களை முழுமையாக விவரித்திருக்கிறேன்.

‎நீதிமன்றத்தில் பரபரப்பாக நடைபெறும் வழக்கு குறித்த விவரங்களை விவாதமாகவும், விமர்சனமாகவும் பேச்சுரிமை மற்றும் கருத்துரிமை சுதந்திரத்தின் அடிப்படையில் முன் வைத்திருக்கிறோம்.

‎சொத்து வைத்திருப்பவர்கள் உயில் எழுதும் போது ‘வில்’ என்ற நீதிமன்ற மற்றும் சட்டப்பூர்வமான விசயத்தை மேற்கொள்ள வேண்டுமா? வேண்டாமா? என்பது குறித்தும் விரிவாக விளக்கமளித்திருக்கிறோம்.

‎சொத்தைக் காப்பாற்றிக் கொள்வதற்கு சட்டத்திற்கு உட்பட்ட முறையில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்தும் தெளிவுபடுத்தி இருக்கிறோம்.

‎ஒரு தலைமுறையினருக்கான சொத்து, அடுத்த தலைமுறைக்கு எப்படி சட்டபூர்வமாக உரிமையாகிறது என்பது தொடர்பான சட்ட நுணுக்கங்களையும் இடம்பெறச் செய்திருக்கிறோம்.

‎‎ஒருவர் தன்னுடைய சொத்தை, தன் விருப்பத்திற்குரிய ஒருவருடைய பெயருக்கு எழுதி வைக்கிறார் என்றால்,

அது அவருக்கு சட்டபூர்வமாக எப்படி சென்று சேரும் என்பதே இப்படத்தின் கதை.

‎இதனை நேரடியாக விவரிக்காமல் ஒரு குடும்பத்திற்குள் நிகழும் உணர்வு பூர்வமான சம்பவங்கள் மூலம் கமர்சியல் அம்சங்கள் கலந்து அனைத்து தரப்பு ரசிகர்களும் ரசிக்கும் வகையில் உருவாக்கி இருக்கிறோம்” என்றார்.

இப்படத்தின் டீசர் வெளியான குறுகிய கால அவகாசத்திற்குள் இணையவாசிகளின் கவனத்தைக் கவர்ந்து பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.