Take a fresh look at your lifestyle.

கார் பந்தயத்திற்காக 42 கிலோ எடை குறைத்த அஜித்!

‘அல்டிமேட் ஸ்டார்’ அஜித், ஒரே நேரத்தில் ‘விடாமுயற்சி’, ‘குட் பேட் அக்லி’ ஆகிய இரு படங்களில் நடித்து முடித்து விட்டு, சில மாதங்களுக்கு முன், கார் ரேசில் பங்கேற்க வெளிநாடுகளுக்குp பறந்து போனார்.

முதலில் ரிலீஸ் ஆன விடாமுயற்சி, தோல்விப் படமாக அமைந்தது. இதனைத் தொடர்ந்து இரண்டு மாதங்களில் வெளியான குட் பேட் அக்லி ரசிகர்களைk கவர்ந்தது.

விமர்சனங்கள் கலவையாக இருந்தாலும் வசூல் ரீதியாக இந்தப் படம் மாபெரும் வெற்றி அடைந்தது. வெளியான குறுகிய காலத்திலேயே, உலகம் முழுவதும் சுமார் 300 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்தது.

கார் பந்தயங்களில் பிசியாக இருப்பதால், அஜித் எப்போது மீண்டும் வெள்ளித்திரையில் தோன்றுவார் என்பது மூடு மந்திரமாக இருந்தது.

இந்த நிலையில் தனது அடுத்த படம் குறித்து அவர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

ஆங்கில நாளிதழுக்கு அஜித் அளித்த பேட்டியில், ‘ரேசை ஓரளவு முடித்து விட்டு நவம்பர் மாதம் முதல் மீண்டும் நடிக்க போகிறேன் – அந்தப் படம் அடுத்த ஆண்டு மே மாதம் ரிலீஸ் ஆகும்’ என தெரிவித்துள்ளார். இயக்குநர் யார் என்பது தெரியவில்லை.

இதனிடையே அஜித், பந்தயங்களில் கலந்துகொள்ள ஏதுவாக தனது எடையைக் குறைத்து விட்டார். இது குறித்து செய்தி ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் அஜித் கூறியிருப்பதாவது:

“கார் பந்தயத்தில் பங்கேற்க எனக்கு நிறைய உடற்தகுதி தேவை. எட்டு மாத கால இடைவெளியில் நான் 42 கிலோ எடையைக் குறைத்தேன்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் எனது எடை இழப்புப் பணியைத் தொடங்கினேன். உணவு கட்டுப்பாடு, நீச்சல் மற்றும் சைக்கிள் ஓட்டுதல் போன்ற பயிற்சிகளில் ஈடுபட்டேன்.

நான் ஒரு டீடோட்டலராகவும் வெஜிடேரியனாகவும் மாறிவிட்டேன். பந்தயத்துக்கு என் இதயத்தையும் ஆன்மாவையும் கொடுக்க வேண்டும்.

அதை நான் தொடர்ந்து செய்வேன். பந்தயத்துக்காக திரைப்பட படப்பிடிப்புகளிலிருந்து ஓய்வு எடுத்துக் கொள்வேன். கார் பந்தயத்துக்காகவே எனது உடற்தகுதியை நான் பராமரித்து வருகிறேன்” என அஜித் தெரிவித்துள்ளார்.

  • பாப்பாங்குளம் பாரதி.