Take a fresh look at your lifestyle.

‘துடரும்’ ஹீரோவான வில்லனின் கதை!

175

ஜோர்ஜு சார்.

கேரளாவின் பத்தனம்திட்டாவின் ஒரு மலைக்கிராமக் காவல் நிலையத்தின் சர்க்கிள் இன்ஸ்பெக்டர். உச்சந்தலை முதல் கால் நுனி வரை குற்றம் செய்யத் தயங்காத ரத்தம் கொண்ட ஒரு மனிதன்.

‘இதெல்லாம் நான் இந்த சர்வீஸ்ல பல வாட்டி பண்ணினதுதான். இதப் பண்றதுல கொஞ்சமும் பயமோ குற்றவுணர்வோ எனக்கு இல்லவே இல்லை.

நாளைக்கே மெடல் வாங்கிட்டு கெத்தா நடப்பேன்’ என்கிறார் ஜோர்ஜ். அவருக்கும் டாக்ஸி டிரைவரான சண்முகத்துக்கும் நடக்கும் cat & mouse கதைதான் ‘துடரும்’. (தொடரும்)

டாக்ஸி டிரைவர் சண்முகம் கேரக்டரில் மோகன்லால். சரி, அவர்தான் ஹீரோ. ஆனால் பதினாறு வயதிலே படத்தில் சப்பாணியை விட, பரட்டையை ரசித்தது போல இப்படத்தில் ஜோர்ஜாக நடித்திருக்கும் ப்ரகாஷ் வர்மாதான் மிரட்டுகிறார். ஒருவகையில் அவர்தான் இப்படத்தின் ஹீரோ. படத்தில் இல்லாவிட்டாலும் படத்திற்கு வெளியே.

ஆலப்புழா சொந்த ஊர். அப்பா கல்லூரி இயற்பியல் பேராசிரியர். அம்மா, டீச்சர் டிரெய்னிங் கல்லூரியின் முதல்வர். இப்படி கல்விப் பின்புல வீட்டில் சினிமாக்கனவில் ஒருவன் என்றால் என்ன நடக்குமோ அதுதான் ப்ரகாஷுக்கும் நடக்கிறது.

வீட்டில் திட்டுவார்கள் என்று ஃபார்மாசூட்டிகல் கம்பெனியில் வேலை செய்து கொண்டே விடுமுறை தினங்களில் சான்ஸுக்கு அலைகிறார்.

ஃபாஸில், சத்யன் அந்திக்காடு, லோகிததாஸ் என்று மலையாள சினிமாவின் எல்லா சீனியர் இயக்குநர்களையும் அடிக்கடி சந்தித்து வாய்ப்பு கேட்கிறார். கிடைக்கிறது.

விஜி தம்பி இயக்கிய, ‘மாந்திரிகக் குதிர’ படத்தில் உதவி இயக்குநராகப் பணிபுரிகிறார். இஸ்மாயில் ஹாசன் இயக்கிய ‘சயாமிஸ் இரட்டகள்’ படத்திலும் பணிபுரிகிறார். அடிக்கடி லோகிததாஸை சந்தித்து வாய்ப்புக் கேட்டுக்கொண்டே இருக்க, அவர் இயக்கிய ‘ஓர்மச்செப்பு’ படத்தில் பணிபுரிகிறார்.

ஒரு திரைப்படம் முடிந்து இன்னொரு திரைப்படத்திற்கு வாய்ப்பு கிடைக்க நிறைய இடைவெளி. ஆறேழு மாதங்கள் சும்மா இருக்க வேண்டியதாக இருக்கிறதே என்று பிரபல Trends Ad Filmன் நிறுவனர் வி.கே.பிரகாஷை சந்தித்து அவரது விளம்பர நிறுவனத்தில் பணிபுரிகிறார்.

பின்னர் அதே வி.கே.பிரகாஷ் இயக்கிய ‘புனரதிவாசம்’ படத்தில் அசோசியேட் டைரக்டராகப் பணிபுரிகிறார்.

டிரென்ட்ஸில் பணிபுரியும்போது Sneha Iype-ஐக் காதல் மணம் புரிகிறார். இருவருமாக பெங்களூரில் நிர்வாணா ஃப்லிம்ஸ் என்ற விளம்பர நிறுவனத்தைத் தொடங்குகிறார்கள்.

இதுவரை நடந்தது இடைவேளை. இதற்குப்பின்தான்.. ப்ரகாஷ் வர்மாவின் வாழ்க்கை மாறுகிறது.

‘Wherever you go our network follows’ என்ற கேப்ஷனுடன் Hutch நெட்வொர்க்கையும், Pug நாயையும் ஒருசேரப் பிரபலப்படுத்தியது இவர்களின் நிர்வாணா ஃப்லிம்ஸின் விளம்பரம்தான்.

முட்டைத் தலையுடன் வோடஃபோன் ZooZoo விளம்பரங்கள்… ஆம்.. இவர்களுடையதுதான். Be My Guest என்று துபாய்க்கு வரச்சொன்ன ஷாரூக் நடித்த விளம்பரம், ‘பழசு நினைவுக்கு வந்து தமிழ் பேசும் சிங் பையன்’ வரும் கிரீன்ப்ளை ப்ளைவுட், கேட்பரிஸ், தாஜ்மஹால் டீ, கோகோகோலா, பெப்சி, பிஸ்லரி, ஐஃபோன், நெட்ஃப்ளிக்ஸ், அமேசான் ப்ரைம், ஐஃபோன், ஃபோன் பே, கிட்காட் என்று செய்த விளம்பரங்களெல்லாம் சூப்பர் டூப்பர் ஹிட்.

ராஜஸ்தான் டூரிஸம், கேரளா டூரிஸம், ஏன்.. ‘Incredible India” என்ற கேப்ஷனுடன் வந்த இந்தியா டூரிஸம், சமீபத்தில் ஃபகத் ஃபாஸிலும் நஸ்ரியாவும் நடித்த Camerry IceCream விளம்பரங்கள் என்று எல்லாமே ஹிட்தான்.

சின்ன நடிகர்கள் தொடங்கி அமிதாப் வரை அனைவரையும் இந்த 25 வருடங்களில் இயக்கியிருக்கிறார் ப்ரகாஷ் வர்மா. ஆனாலும் விளம்பரம் எடுத்துக்கொண்டிருக்கும்போதே கொடுத்த பேட்டியில் சொல்கிறார். “ம்ஹும்.. இது என் களமல்ல. லாங் ஃபார்மெட்டான சினிமாதான் என் கனவு!’

சென்ற வருடம், தருண் மூர்த்தி, தனது ‘துடரும்’ படத்துக்காக ஆடிஷன் அறிவிப்பு வெளியிட வீடியோ அனுப்புகிறார். என்ன கேரக்டர் என்று சொல்லாமலே பேசி, நடிக்க வைக்கிறார் இயக்குநர்.

படத்தில் நமக்குத் தெரிவதுபோல ஷூட்டிங்கில் கொஞ்சம் கொஞ்சமாகத்தான் இது இவ்வளவு பெரிய கேரக்டர் என்று தெரிகிறது அவருக்கும்.

படத்தில் அவர் காட்டியிருக்கும் நடிப்பும், ‘ஹலோ’ சொல்லும் விதமும் மோகன்லால் என்ற சூப்பர் ஸ்டார் நடிகனை அசால்டாக எதிர்கொள்ளும் உடல்மொழியும்… அபாரம்.

படத்திலேயே அவர் சொல்வார்: “இது எண்டெ கதயாடா… ஈ கதையிலெ நாயகன்… ஈ ஜோர்ஜூ சாராடா!”

உண்மைதான்!

நன்றி: பரிசல் கிருஷ்ணா முகநூல் பதிவு.