1990 களில் ‘பிரமாண்ட இயக்குநர்’ ஷங்கரை முதன் முதல் சந்தித்தேன். சந்தித்த இடம் – கோடம்பாக்கத்தில் எம்.ஜி.ஆர். பள்ளிக்கு எதிர் தெருவில் இருந்த ‘சூரியன்’ பட அலுவலகம்.
அந்த படத்தை டைரக்ட் செய்தவர் பவித்ரன். அவரிடம் இணை இயக்குநராக பணியாற்றிக் கொண்டிருந்தார், ஷங்கர்.
உதவி இயக்குநராக வேலை பார்த்தார், டைரக்டர் ஏ. வெங்கடேஷ்.
மகாபிரபு, ஏய், பகவதி, உள்ளிட்ட படங்களின் இயக்குநர் வெங்கடேஷும் நானும் சேலத்தில் நாளிதழ் ஒன்றில் பணியாற்றினோம்.
கொஞ்ச நாட்களில் அவர் சென்னை வந்து சினிமாவில் நுழைந்துவிட்டார். கனவு தொழிற்சாலை மீதான கனவில் இருந்த நான், சென்னை வந்து வெங்கடேஷை சந்தித்தேன்.
அவர் சூரியன் ஆபீசில் என்னை ஷங்கரிடம் அறிமுகம் செய்தார். ஷங்கர் அப்போது, ஜென்டில் மேன் படத்தை இயக்குவதற்கான ஆயத்த பணிகளில் இருந்தார். சூரியன் ரிலீஸ் ஆனதும் ஜென்டில்மேன் தொடங்க இருந்தது.
“சூரியன் ரிலீஸ் ஆனதும் என்னை வந்து பாருங்க.. நாம வொர்க் பண்ணலாம்” என இன்ப அதிர்ச்சிக் கொடுத்தார்.
நினைப்பதெல்லாம் நடப்பதில்லையே!
‘ஜென்டில்மேன்’ தாமதம் ஆனதால் ‘என்றும் அன்புடன்’ படத்தை இயக்கிய பாக்யநாதனிடம், நான் உதவி இயக்குநராக சேர்ந்தேன். அவர் எங்கள் ஊர்ப்பக்கத்தைச் சேர்ந்தவர்.
லிங்குசாமி, பிருந்தா சாரதி ஆகியோரும் பாக்யநாதனிடம் உதவியாளர்களாக இணைந்தனர்.
வெங்கடேஷ், ‘ஜென்டில்மேன்’ படத்தில் இணை இயக்குநராக பணியாற்றினார். அந்தப் படத்தின் வெற்றி ஷங்கரை, உச்சத்துக்குக் கொண்டு சென்றது.
ஷங்கரின் இரண்டாவது படமான ‘காதலன்’ படத்தில் கொஞ்ச நாள் பணியாற்றிய வெங்கடேஷ், ஷங்கரிடம் இருந்து விலகி, மகாபிரபு படத்தை இயக்கும் முஸ்தீபுகளில் இறங்கி, அவரும் ஜெயித்தார்.
பாக்யநாதனின் இரண்டாவது படம் அப்போதைக்கு தொடங்குவதற்கான அறிகுறிகளே இல்லை. லிங்குசாமியும், பிருந்தாவும், வெங்கடேஷிடம் அசிஸ்டெண்டாக சேர்ந்து கொண்டனர்.
பிழைப்பு வேண்டுமே!
நான் பல பத்திரிகைகளில் ‘ஃபிரிலேன்ஸ்’ நிருபராக பணியாற்ற ஆரம்பித்தேன். எனது சினிமா கனவுகள் சிதைந்து போயிற்று.
‘ஜென்டில்மேன்’ படப்பிடிப்பில் மீண்டும் ஒருமுறை ஷங்கரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த ஷுட்டிங் பரங்கிமலையில் உள்ள மலை உச்சியில் நடைபெற்றது.
திரிசூலம் ரயில் நிலையத்தில் இறங்கி நடந்தே, மலை உச்சிக்குச் சென்றேன்.
அர்ஜுன், கவுண்டமணி, நம்பியார், மதுபாலா ஆகியோர் படப்பிடிப்பில் இருந்தனர்.
அவ்வளவு கூட்டத்திலும் என்னை ஷங்கர், அடையாளம் கண்டு கொண்டார்.
“சவுக்கியமா” – நலம் விசாரித்தார்.
அது, உணவு இடைவேளை நேரம்.
“வாங்க..சாப்பிடலாம்” என அழைக்க அவருடன் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டே படம் தொடர்பான செய்திகள் கேட்டேன்.
படம் குறித்து கொஞ்சம் பேசியவர் பாடல்கள் பற்றி விரிவாகவே, தகவல்களை பகிர்ந்து கொண்டார்.
“ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார் –ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு ரகம்” என சிலாகித்தவர், சாப்பாடு முடிந்த பின்னரும் கொஞ்ச நேரம் உரையாடினார்.
ஷங்கருக்கு நிறைய முகங்கள் உண்டு, அதில் ஒரு முகம் – அவர் ஒரு நாடக நடிகர் என்பது.
ஷங்கர் சினிமாவில் நுழைவதற்கு முன்பு, தில்லை ராஜன் என்பவர் நடத்திய நாடகக்குழுவில் பணியாற்றியுள்ளார்.
நாடகக் குழுவில் இடம் பெற்றிருந்த இன்னொரு நடிகர் ‘ஓமகுச்சி நரசிம்மன்’.
அப்போதே ஷங்கருக்கும், ஓமகுச்சிக்கும் நெருக்கம் உண்டு.
அந்த நட்பை மறக்காமல், தனது படங்களில் எல்லாம் ஓமகுச்சி நரசிம்மனுக்கு ஏதாவது ஒரு வேடத்தை ஒதுக்கி வைத்து விடுவார், ஷங்கர். ஓமகுச்சியின் இல்லத்தில் நடந்த கல்யாணத்துக்கு தாராளமாக பணம் கொடுத்ததாக, ஓமகுச்சியே என்னிடம் சொல்லியதுண்டு.
‘எஸ்.பிக்சர்ஸ்’ எனும் பெயரில் சொந்த பட நிறுவனம் தொடங்கி, தன் உதவியாளர்களை வைத்து காதல் வெயில், இம்சை அரசன் 23-ம் புலிகேசி போன்ற படங்களை தயாரித்தவர், ஷங்கர்.
ஜென்டில் மேன், காதலன், இந்தியன், ஜீன்ஸ், முதல்வன் என தொடர்ச்சியாக சூப்பர் ஹிட் சினிமாக்களை தந்த ஷங்கர், ‘பாய்ஸ்’ படத்தில் சற்று சறுக்கினார்.
எனினும் தனது அடுத்த படமான ‘அந்நியன்’ படத்தில் தன்னை நிரூபித்தார்.
இப்போது ஒரே நேரத்தில் அவர் இயக்கிய ‘இந்தியன் -2’, ‘கேம் சேஞ்சர்’ ஆகிய இரு படங்களும் வெற்றி இலக்கை எட்டவில்லை.
இதையும் ஷங்கர் கடந்து செல்வார் என நம்புவோம். இப்போது அவர் கைவசம் ‘வேள்பாரி’, நாவல் இருக்கிறது.
அதனை எப்போது தொடங்குவார் என தெரியவில்லை.
– பாப்பாங்குளம் பாரதி.
#இயக்குநர்ஷங்கர் #ஷங்கர் #ஜென்டில்மேன் #காதலன் #இந்தியன் #அந்நியன் #வேள்பாரி #தமிழ்சினிமா #திரைப்படஇயக்கம் #DirectorShankar #Gentleman #Indian2
