உலகிலேயே முதல் முறையாக திரையரங்குகளில் தணிக்கை சான்றிதழ் உடன் முதல் பார்வை வெளியிடப்பட்டு சாதனை படைத்த இராதாகிருஷ்ணன் பார்த்திபனின் முற்றிலும் மாறுபட்ட, குழந்தைகளை மையமாகக் கொண்ட சாகச திரில்லரான ‘டீன்ஸ்’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் சென்னையில் சனிக்கிழமை வெளியிடப்பட்டது.
டிரெய்லரை இயக்குநர் மணிரத்னம் வெளியிட்ட நிலையில், ‘டீன்ஸ்’ திரைப்படத்தின் இசை சென்னை கமலா திரையரங்கில் நான்கு காட்சிகளாகத் தொடர்ந்து வெளியிடப்பட்டு புதிய உலக சாதனையைப் படைத்துள்ளது.
இதை தொடர்ந்து, ஒரே நாளில் ஒரே இடத்தில் அதிக இசை வெளியீட்டு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்ட படம் என்பதற்கான சான்றிதழ் ‘டீன்ஸ்’ திரைப்படத்திற்கு உலக சாதனைகள் சங்கத்தால் வழங்கப்பட்டது.
பதிமூன்று குழந்தைகளை மையமாகக் கொண்ட கதை என்பதால் பல்வேறு துறைகளில் சாதனைப் புரிந்த 13 இளம் வயதினருக்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் ‘டீன்ஸ்’ படக்குழு நேரில் பாராட்டு தெரிவித்தது.
கால்டுவெல் வேள்நம்பி, டாக்டர் பாலசுவாமிநாதன், டாக்டர் பின்ச்சி ஸ்ரீநிவாசன், ரஞ்சித் தண்டபாணி மற்றும் இராதாகிருஷ்ணன் பார்த்திபன் ஆகியோர் இப்படத்தை தயாரித்துள்ளனர்.

பயாஸ்கோப் டிரீம்ஸ் எல் எல் பி மற்றும் அகிரா ப்ரொடக்ஷன்ஸ் பேனரில் ‘டீன்ஸ்’ தயாராகியுள்ளது.
கீர்த்தனா பார்த்திபன் அக்கினேனி இதன் கிரியேட்டிவ் தயாரிப்பாளர் ஆவார்.
விரைவில் வெளியாகியுள்ள ‘டீன்ஸ்’ திரைப்படத்தை தமிழகம் எங்கும் உள்ள திரையரங்குகளில் (கோயம்புத்தூர் தவிர) சக்திவேலனின் சக்தி பிலிம் பேக்டரி வெளியிடுகிறது.
கோயம்புத்தூர் வெளியீட்டு உரிமையை எல்மா பிக்சர்ஸ் என். எத்தில்ராஜ் பெற்றுள்ளார்.
இத்திரைப்படத்திற்காக இசை அமைப்பாளர் D. இமான் மற்றும் ஒளிப்பதிவாளர் காவ்மிக் ஆரி ஆகியோருடன் முதல் முறையாக இராதாகிருஷ்ணன் பார்த்திபன் இணைந்துள்ளார். ஆர். சுதர்சன் படத்தொகுப்பை கையாண்டுள்ளார்.
‘டீன்ஸ்’ இசை வெளியீட்டு விழாவின் முக்கிய அம்சங்கள்:
விழாவில் பேசிய பாராட்டு பெற்ற 13 இளம் சாதனையாளர்களின் சார்பாக இசைக் கலைஞர் லிடியன் நாதஸ்வரம், “எங்களை இந்த நிகழ்ச்சிக்கு அழைத்து கௌரவித்த பார்த்திபன் அவர்களுக்கு மிக்க நன்றி.
‘டீன்ஸ்’ திரைப்படம் பற்றி கூற வேண்டும் என்றால் இது பார்த்திபனின் கனவு. அவரும் இசையமைப்பாளர் டி இமான் அவர்களும் முதல் முறையாக இணைந்துள்ளார்கள். பாடல்களை கேட்டேன், மிகவும் அருமையாக உள்ளன. உங்கள் அனைவரைப் போன்று நானும் இத்திரைப்படத்தை திரையரங்குகளில் காண ஆவலாக உள்ளேன்.”
நிகழ்ச்சியில் பேசிய ‘டீன்ஸ்’ தயாரிப்பாளர்களில் ஒருவரான டாக்டர் பின்ச்சி ஸ்ரீநிவாசன், “நான் ஒரு குழந்தைகள் மருத்துவர். குழந்தைகளை மையப்படுத்திய ‘டீன்ஸ்’ திரைப்படத்தின் கதையை பார்த்திபன் எங்களிடம் சொல்லும் போதே நான்கு தயாரிப்பாளர்களுக்கும் மிகவும் பிடித்திருந்தது.
சொல்லப்போனால் பார்த்திபனே ஒரு டீன் ஏஜர் தான். இத்திரைப்படத்தில் 13 டீன் ஏஜர்கள் உடன் பணியாற்றியதால் அவர் இன்னும் இளமையாக, அவர்கள் அனைவரின் உற்சாகத்தையும் தன்னகத்தே கொண்டு திகழ்கிறார்.
இசையமைப்பாளர் இமான் மிக அருமையான பாடல்களை இத்திரைப்படத்திற்கு தந்துள்ளார். சிறுவர்கள் மட்டுமில்லாது அனைத்து தரப்பினரும் பார்த்து ரசிக்கக்கூடிய இத்திரைப்படம் அனைவரின் ஆதரவையும் பெற்று வெற்றி பெறும் என்று நம்புகிறேன்.”
இதை அடுத்து பேசிய கவிஞர் மதன் கார்கி “தமிழ் சினிமாவுக்கு ஒரு புதுமையான படைப்பாக ‘டீன்ஸ்’ இருக்கும். பார்த்திபன் சார் இந்த கதையை என்னிடம் விவரிக்கும் போதே அவ்வளவு புதுமையாக இருந்தது. அதை திரையில் பார்க்க ஆவலாக உள்ளேன்.
ஒவ்வொரு பாடலையும் ஒவ்வொரு விதமாக இமான் இசையமைத்துள்ளார். ஒரு புது இசையமைப்பாளரின் படைப்புகள் போல பாடல்கள் அவ்வளவு பிரஷ்ஷாக உள்ளன. படத்தில் பணியாற்றிய இளம் கலைஞர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் வாழ்த்துகள்.”
இந்தப் படத்தைப் பற்றி பேசிய இயக்குநர் கே எஸ் ரவிக்குமார் “புதுமை என்றாலே பார்த்திபன் தான். குழந்தைகளை வைத்து படம் எடுப்பது என்பது அத்தனை சுலபமான விஷயம் இல்லை. ஆனால் பார்த்திபன் அதை சாதித்து காட்டியுள்ளார்.
கடின உழைப்பாளியும் இறைபக்தி அதிகம் கொண்டவருமான இமான் இனிமையான பாடல்களை இப்படத்திற்கு வழங்கி உள்ளார். படத்தை பார்த்துவிட்டு இதில் பங்காற்றிய ஒவ்வொருவரையும் தனித்தனியாக வாழ்த்த காத்திருக்கிறேன், நன்றி.”
இயக்குநர் கௌரவ் நாராயணன்: “பார்த்திபன் சார் என்னுடைய மானசீக குருவாக ஏற்றுக் கொண்டுள்ளேன். சாதனை மேல் சாதனைகளாக படைத்து இளம் இயக்குநர்களுக்கு உற்சாகமாகவும் போட்டியாகவும் திகழ்கிறார்.
‘அஞ்சலி’க்கு பிறகு இத்தனை சிறுவர்கள் நடித்துள்ளது ‘டீன்ஸ்’ திரைப்படத்தில் தான் என்று நினைக்கிறேன். டிரெய்லர் மிகவும் ரசிக்கத்தக்க வகையில் உள்ளது இப்படத்தை காண ஆவலுடன் காத்திருக்கிறேன் படக்குழுவினர் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.”

இயக்குநர் பேரரசு: “பார்த்திபன் சாரின் ‘புதிய பாதை’யே இன்னும் பழைய பாதையாகவில்லை, 33 வருடங்களுக்கு பின்னாலும் இன்னும் புதுமையாகவே உள்ளது ஆனால் அவர் மேலும் பல புதிய பாதைகளை போட்டுக்கொண்டே செல்கிறார்.”
நடிகர் யோகி பாபு: “பார்த்திபன் சார் உடன் பணியாற்ற வேண்டும் என்று நீண்ட நாட்களாக அவரிடம் கேட்டு வந்தேன். இறுதியாக ‘டீன்ஸ்’ படத்தில் அந்த ஆசை நிறைவேறி உள்ளது. அவருடன் இன்னும் நிறைய திரைப்படங்களில் பணியாற்ற ஆவலாக உள்ளேன்.”
இயக்குனர், நடிகர் கே பாக்யராஜ்: “நாளைய சூப்பர் ஸ்டார்களாக வளரப்போகும் ‘டீன்ஸ்’ படத்தில் நடித்துள்ள 13 இளம் கலைஞர்களுக்கும் அவர்களது பெற்றோர்களுக்கும் வாழ்த்துகள்.
என்னுடன் உதவி இயக்குநராக பணிபுரிந்த பார்த்திபன் இவ்வளவு பெரிய உயரத்தை தொட்டு இருப்பது மிகவும் பெருமை.
எப்போதுமே வித்தியாசமாகவும் புதுமையாகவும் சிந்திப்பவர் பார்த்திபன். அவரது இந்த ‘டீன்ஸ்’ திரைப்படம் மாபெரும் வெற்றி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.”
நடிகர் தம்பி ராமையா: நடிகர், இயக்குநர் என்பதையும் தாண்டி பார்த்திபன் சார் ஒரு மிகச்சிறந்த கவிஞர். இந்த படத்தில் ஏழு பாடல்களையும் அவரே எழுதியுள்ளார்.
எதைச் செய்தாலும் புதுமையாக செய்யும் பார்த்திபன், பதிமூன்று முத்துக்களை இப்படத்திற்காக தேர்ந்தெடுத்து நடிக்க வைத்துள்ளார். அவர்கள் அனைவரும் நாளைய திரை வானில் சிறகடித்து பறக்க போவது உறுதி.”
இசையமைப்பாளர் D. இமான்: “இப்படி ஒரு இசை வெளியீட்டு விழாவை இதுவரை நான் பார்த்ததில்லை. அதற்காக பார்த்திபன் சாருக்கு நன்றி. இப்படத்தில் புதுமையான விஷயங்களை நிறைய முயற்சித்துள்ளோம்.
முதலில் ஒன்று அல்லது இரண்டு பாடல்கள் போதும் என்று இருந்த நிலையில் தற்போது அது ஏழு பாடல்களாக வளர்ந்துள்ளது. பார்த்திபன் சாரும் நானும் எப்போதோ இணைந்து பணியாற்றி இருக்க வேண்டியது, அது இப்போதுதான் கைகூடி உள்ளது. அவருடன் பணியாற்றியது மிகச்சிறந்த அனுபவம்.”
#இராதாகிருஷ்ணன்_பார்த்திபன் #Radhakrishnan_Parthiban #டீன்ஸ் #Teenz_Trailer #கீர்த்தனா_பார்த்திபன்# Keerthana_parthiban #இயக்குநர்_மணிரத்னம் #Director _manirathnam #உலக_சாதனை #World_Record #D_இமான் #D_Imaan #ஒளிப்பதிவாளர்_காவ்மிக்_ஆரி #Cameraman_Guavmik_Aari #கவிஞர்_மதன்_கார்கி #Madhan_kaargi #இயக்குநர்_பேரரசு #Director_Perarasu #இயக்குநர்_சரண் #Director_Saran #நடிகர்_ரோபோ_சங்கர் #Actor_Robo_shankar #நடிகர்_யோகிபாபு #Yogibabu #நடிகர்_தம்பி_ராமையா #Thambi_Ramaiya #இயக்குனர்_கே_பாக்யராஜ் #Director_K_Backiyaraj