இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் ஆண் பெண் உறவின் பேசாத பக்கங்களைப் பேசும் திரைப்படமாக உருவாகியிருந்த திரைப்படம் ஹாட் ஸ்பாட்.
மார்ச் 29 ஆம் தேதி வெளியான இப்படம் திரையரங்குகளில் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில் இப்படத்தின் வெற்றிவிழா சென்னையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் பேசிய நடிகர் திண்டுக்கல் சரவணன்: “டோண்ட் ஜட்ஜ் த புக் பை இட்ஸ் கவர்” என்பது விக்கிக்கு தான் பொருந்தும், அவர் மிகச்சிறந்த மிமிக்ரி ஆர்டிஸ்ட். தன் பாதையை மாற்றி இயக்குநராக ஆகி, நல்ல படம் தந்துள்ளார்.
என்னை எப்படி இந்தப்படத்திற்கு செலக்ட் செய்தார் என்று தெரியவில்லை. நாங்கள் எல்லாம் சினிமாவை நம்பி தான் இருக்கிறோம், எங்களையெல்லாம் ஞாபகம் வைத்து, கூப்பிட்டு நடிக்க வைக்கும் விக்கிக்கு நன்றி.
செவன் வாரியர்ஸ் சுரேஷ்குமார்: விக்னேஷ் என் தம்பி மாதிரி, ஷார்ட்ஃபிலிம் காலத்திலிருந்து தெரியும். ஒரு படத்தின் நெகட்டிவ் மட்டுமே காட்டி டிரெய்லர் வெளியிட்ட ஒரே டீம் நாங்க தான். ஆனால் படம் பார்த்த பிறகு மக்கள் தந்த ஆதரவு மகிழ்ச்சி.
என்னிடம் நாலு கதை சொன்னார் விக்னேஷ், அதில் ஏன் இரண்டு கதை எடுக்கவில்லை, படத்தின் பேர் மாற்றினார். அதையும் என்னிடம் கேட்கவில்லை. இப்போது அவரிடம் கேட்காமல் ஒன்று சொல்கிறேன் எனக் கூறிய தயாரிப்பாளர், விக்னேஷ் கார்த்திக்கு அடுத்த படத்திற்கான அட்வான்ஸ் செக்கைத் தந்து அசத்தினார்.
இதைத் தொடர்ந்து பேசிய நடிகர் சுபாஷ்: திட்டம் இரண்டு படத்திற்குப் பிறகு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு, இதில் நடித்த அனைவரும் சூப்பராக நடித்திருந்தனர்.
அமர், சரவணன் இருவரும் கலக்கியிருந்தார்கள்.
நடிகை ஜனனி: ஒரு படம் பெரிய படமா?, சின்னப் படமா? என பாரபட்சம் காட்டாமல், படம் நன்றாக இருந்தால் பாராட்டி, அதை ஜெயிக்க வைக்க உங்கள் ஆதரவைத் தருகிறீர்கள், உங்களுக்கு நன்றி. இயக்குநர் விக்னேஷுக்கு நன்றி.
கதை கேட்டதிலிருந்து ஷூட்டிங் வரை, அவரை நிறைய டார்ச்சர் செய்துள்ளேன். ஆனால் பொறுமையாக இருந்து, என்னை நம்புங்கள் என ஆதரவு தந்து, இந்தப் படத்தை எடுத்தார்.இந்தப் படத்தில் எல்லோரும் அட்டகாசமாக நடித்துள்ளனர்.
இயக்குநர் விக்னேஷ் கார்த்திக்: திரையரங்கில் இப்போது படம் நன்றாக போய்க் கொண்டிருக்கிறது. ஆனால் வீக் டெஸில் தியேட்டரில் ஹவுஸ்ஃபுல் ஆனால் தான் அடுத்த வாரம் ஷோ தருகிறார்கள், ஆனால் வார நாட்களில் பெரிய ஹீரோக்ளுக்கே கூட்டம் வராது.
இந்த நிலை மாற வேண்டும். ஊடகங்கள் ஆதரவு தந்தால் அடுத்த வாரமும் படம் ஓடும். அடுத்த வருடம் ஹாட் ஸ்பாட் 2 வோடு, எங்கள் குழுவோடு உங்களைச் சந்திக்கிறோம்.
படக்குழுவினர் இதே தயாரிப்பில் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் ஹாட்ஸ்பாட் 2 உருவாகவுள்ளதை இந்த வெற்றி விழாவில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.
மார்ச் 29 ஆம் தேதி உலகமெங்கும் வெளியான இப்படம் இப்போதும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.