Take a fresh look at your lifestyle.

பவன் கல்யாணுக்குக் ‘குரல்’ கொடுத்த சிம்பு!

தெலுங்கு சினிமா உலகில் முன்னணி நடிகராக விளங்குபவர் பவன் கல்யாண். தனக்கென  முரட்டு ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர்.

சில ஆண்டுகளுக்கு முன்பு ஜனசேனா எனும் அரசியல் கட்சியை ஆரம்பித்தார், தனித்து போட்டியிட்டார். பிரயோஜனம் இல்லை.

இதனால் ஆந்திராவில் கடந்த முறை நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக – தெலுங்குத் தேசம் கூட்டணியில் சேர்ந்து போட்டியிட்டார். வெற்றி பெற்றார்.

இப்போது, அவர் ஆந்திர மாநிலத் துணை முதலமைச்சர். பதவி கிடைத்ததால், கொஞ்ச காலம் சினிமாவுக்கு இடைவெளி விட்டிருந்தார்.

பவன், நடிப்பில் உருவான பல படங்கள் கிடப்பில் போடப்பட்டிருந்தன. தயாரிப்பாளர்கள் நலன்  கருதி அந்தப் படங்களை தூசி தட்டி மீண்டும் நடிக்க ஆரம்பித்துள்ளார்.

அதில் ஒரு படம் ‘THEY CALL HIM – OG’. இந்தப் படத்தில் பவன் கல்யாண் கேங்ஸ்டராக நடிக்கிறார்.

மும்பையைக் கதைக்களமாகக் கொண்ட இந்தப் படத்தை சுஜித் டைரக்டு செய்கிறார். பவன், தவிர்த்து ஏனைய நடிகர் – நடிகைகள் சம்மந்தப்பட்ட காட்சிகள் ஏற்கனவே படமாக்கப்பட்டு விட்டன.

பவன் தொடர்பான காட்சிகள் மட்டும் பாக்கி இருந்தது. அந்தக் காட்சிகள் ஒரு வாரமாக படமாக்கப்பட்டு வருகிறது.

இரவு – பகலாக கால்ஷீட் கொடுத்து நடித்து வருகிறார், பவன். இந்தப் படத்தில் பவன் கல்யாணுக்காக, நம்ம ஊர் சிம்பு ஒரு பாடலைப் பாடியுள்ளார். இந்தத் தகவலை அவரே தெரிவித்துள்ளார்.

ஐதராபாத்தில் ‘தக்லைஃப்’ படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சி இரு தினங்களுக்கு முன்பு நடைபெற்றது.

இதில் பேசிய சிம்பு, ‘பவன் கல்யாண் காருக்கு, ஒரு பாடலாவது பாட வேண்டும் என்பது எனது கனவாக இருந்தது. ‘OG’ படத்தில் அந்தக் கனவு நனவாகி இருக்கிறது. தமன் இசையில், பவன் காருக்கு ஒரு பாடலைப் பாடியுள்ளேன்’ என சிம்பு தெரிவித்தார்.

– பாப்பாங்குளம் பாரதி.