‘கபீர்சிங்’, ‘அனிமல்’ ஆகிய வெற்றிப் படங்களைக் கொடுத்த சந்தீஷ் ரெட்டி வாங்கா இயக்கத்தில் ‘ஸ்பிரிட்’ படம் உருவாக இருக்கிறது.
பிரபாஸ், இதில் கதாநாயகனாக நடிக்கிறார். பான் இந்தியா படம் என்பதால் இந்தியா முழுவதும் அறிந்த தீபிகா படுகோன், பிரபாஸ் ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
ஜவான், கல்கி ஆகிய சூப்பர் டூப்பர் படங்களில் நடித்திருந்த தீபிகா படுகோனுக்கு இப்போது கிராக்கி ஏற்பட்டுள்ளது. இதனால் ‘ஸ்பிரிட்’ படத்தில் நடிக்க ரூ.20 கோடி சம்பளம் கேட்டார்.
தயாரிப்பாளரும் ஒப்புக்கொண்டார். செப்டம்பர் மாதம் ‘ஷுட்டிங்’ தொடங்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில் அந்தப் படத்தில் இருந்து தீபிகா திடீரென விலகி விட்டார்.
இயக்குநருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ‘ஸ்பிரிட்’ படத்தில் இருந்து விலகி இருக்கிறார் என பொத்தாம்பொதுவாக சொல்லப்பட்டாலும், என்ன வேறுபாடு என தெரிவிக்கப்படவில்லை.
‘லாபத்தில் பங்கு கேட்டார்’ என தீபிகா மீது, படக்குழு தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.
‘தொழில்முறை’ அல்லாத தேவைகள், இயக்குநர் தரப்பில் வலியுறுத்தப்பட்டதால், தீபிகா ‘ஸ்பிரிட்’ படத்தில் இருந்து விலகிக் கொண்டதாக தெலுங்கு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தீபிகா படுகோனுக்கு பதிலாக வேறொருவரை நடிக்க வைக்கப் படக்குழு பேச்சுவார்த்தையை தொடங்கியிருக்கிறது.
இந்தியா முழுவதும் அறிந்த நடிகையை ஒப்பந்தம் செய்யும் முயற்சியில் இயக்குநர் ஈடுபட்டுள்ளார்.
– பாப்பாங்குளம் பாரதி.