அண்மையில் ‘shoplifters’ என்ற பெயர் கொண்ட ஜப்பானிய திரைப்படம் ஒன்றைப் பார்த்தேன். நிஜ உலக யதார்த்தத்தை அச்சொட்டாகப் பிடித்துக் காட்டும் அருமையான திரைப்படம் இது.
படத்தின் தலைப்பு எதைச் சொல்லுகிறது?
கடைகளில் சில்லறைத் திருட்டுகளை செய்பவர்களைத்தான் இப்படி (SHOPLIFTERS) அழைக்கிறார்கள்.
இந்தத் திரைப்படத்திற்கு ‘The Palme d’ என்ற உயர்ந்த பிரெஞ்சு சினிமா விருது கிடைத்துள்ளது என்பதை அறியவரும் போது, படத்தின் தரம் எப்படியானது என்பதைச் சொல்லி விட முடியும்.
இது ஒரு ஜப்பானிய திரைப்படம். ஒரு விசித்திரமான ஜப்பானிய குடும்பத்தைச் சுற்றிக் கதை நகர்கிறது. வீட்டின் ஆணுக்குத் தெரிந்தது இந்தக் கடைத் திருட்டு ஒன்றுதான்.
அதையே வீட்டிலுள்ள சிறுசு பெரிசெல்லாம் செய்ய ஆரம்பித்து, வயிற்றை நிரப்பிக் கொள்ளவும், ஏனைய தேவைகளை தினமும் பூர்த்தி செய்யவும் பழகிக் கொண்டிருக்கின்றன.
ஹிரோகாசு கோரேடா என்ற ஜப்பானியர் தான் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். ஜப்பானிய குடும்பங்களின் கதைகளைப் படமாக்குவதில் இவர் கில்லாடி.
சென்ற வருட ஆரம்பத்தில் நடந்த கேன்ஸ் திரைப்பட விழாவில்தான் இதற்கு விருது அளித்து கௌரவித்திருந்தார்கள்.
I Wish, Nobody Knows (2004), Like Father Like Son (2013) போன்றவை இவர் பெயர் சொல்லும் வேறு சில பிரபல்ய திரைப்படங்கள்.
இந்த விநோதமான குடும்பத்தில் இருப்பவர்கள் நடுத்தர வயதுடைய ஓர் ஆண், அவன் மனைவி, ஒரு டீன்ஏஜ் பெண் (இது இவர்கள் மகளாகவும் இருக்கலாம், மனைவியின் சகோதரியாகவும் இருக்கலாம்) மகனாக ஒரு சிறுவன், இவர்களோடு பாட்டி – இந்த வாடகை வீட்டில் மொத்தம் ஐந்து பேர் குடித்தனம்!
(வீட்டின் சொந்தக்காரன் வரி ஏய்ப்பிற்காக, வீட்டின் உரிமையாளரின் பெயரை அடிக்கடி மாற்றிக் கொண்டிருந்தான்)
ஒரு கட்டடப் பணியில் பெயருக்கு வேலை செய்து கொண்டு ஒஸாமு, தனது சிறுவனுடன் (ஷொட்டா என்பது சிறுவனின் பெயர்) இணைந்து கடைகளில் திருடிக் கிடைப்பதை, விற்று பணம் சம்பாதித்துக் கொண்டிருந்தான்.
இவனுடைய மனைவி Noboyu-க்கு ஹோட்டல் லாண்டரியில் வேலை. அங்கு வரும் உடுப்புகளின் பைகளில் கிடப்பதை திருடி வீட்டுக்குக் கொண்டுபோய் விடுவது இவள் வழமை!
Aki எனப்படும் இளம்பெண், வீடியோக் காட்சி மூலம், காதல் வசம் சொட்டப் பேசி, உடல் அங்கங்களைக் காண்பித்து, (soft-porn peep show) வாடிக்கையாளர்களின் விரசத்தைப் போக்கும் ஒரு நிறுவனத்தில் பணி செய்து சம்பாதிக்கிறாள்.
பாட்டி தன் பங்கிற்கு தன் பென்சன் பணம் மூலம் குடும்பத்திற்கு உதவி செய்வதோடு, இறந்து விட்ட கணவனின் இரண்டாவது மனைவியின் பிள்ளைகளிடம் சென்று மாதமாதம் பணமும் பெற்று வருகிறாள்.
இந்தப் பணத்தை அவள் சூதாட்டக் கிடங்கிலேயே செலவழித்து விடுவது இவளின் வழமை!
குளிரில் நடுங்கியபடி, அனாதரவாக தெருவில் நிற்கும் ஒரு சிறுமியை காணும்போது, வீட்டிற்கு அவளைக் கொண்டு போக முடிவெடுக்கிறான் Osamu.
ஒரு சில நாட்கள் என்று முதலில் நினைத்தவன், பின்பு தலைமுடியை வெட்டி, முக அடையாளத்தை மாற்றி, அந்தச் சிறுமியை வீட்டோடு வைத்துக் கொள்கிறான். அவளுக்கும் திருடக் கற்றுக் கொடுக்கின்றது இந்த அழகான குடும்பம்.
Hatsue என்பவர்தான் பாட்டியாக வருகிறார். இவர் இடைநடுவே இயற்கையாக மரணிக்கிறார். அதன்பின் எல்லாமே தலை கீழாக மாறுகின்றது. எதிர்பாராத திருப்பங்கள்.
இதையெல்லாம் அறிய விரும்பினால் நீங்கள் இந்தத் திரைப்படத்தை பார்த்தே தீர வேண்டும்
– நன்றி: முகநூல் பதிவு