ஸ்வர்ணலதா, தனிப்பாடல்களில் எந்த அளவு ஒரு பாடலைத் தனதாக்கிக் கொள்வாரோ அதைவிட இரண்டு மடங்கு முனைப்போடு டூயட் பாடல்களிலும் மெட்டினை தனதாக்கிக் கொள்ளும் போராட்டக் குணத்தோடு இயங்கும் இயல்பைக் கொண்டவர்.
எஸ்.பி.பிக்கே டஃப் கொடுத்த பாடகி என்பது பல பாடல்களை உதாரணமா அடுக்க முடியும்.
பளிச்சென்ற உதாரணங்களாக, “நன்றி சொல்லவே உனக்கு என் மன்னவா”, “மாயா மச்சிந்திரா”, “காதலெனும் தேர்வெழுதி”, “வண்டியில மாமன் பொண்ணு” பாடல்களைச் சொல்லலாம்.
இப்படி வேட்கையோடு மெட்டினை அணுகும் ஸ்வர்ணலதா, ஃபீமேல் டூயட் என்று வருகிற போது, அந்தத் தீவிரத்தை இன்னும் உச்சமாகக் காட்டுவார். அவ்ளோ ரசிக்கலாம்.
எப்படிப்பட்ட டாமினேட்டிங் குரலையும் அநாயசமாக எதிர்கொள்ளும் பாங்கு அவருக்கு உண்டு. அந்த வகையில், ராஜஸ்தானி நாட்டுப்புற பாடல்களில் கொடிகட்டிப் பறந்த இலா அருணை அவர் எதிர்கொண்ட பாடல் பற்றிப் பார்க்கலாம்.
ரஹ்மான் இசையில் ‘மிஸ்டர் ரோமியோ’ படத்தின் ‘முத்து முத்துமலை முத்தாடுதே’ பாடல் மூலம் தமிழுக்கு வருகைத் தந்திருந்த இலா அருணோடு, ஸ்வர்ணலதாவை தனது ‘காதல் கவிதை’ படத்தின் “தத்தோம் தகதிமிதோம்…” பாடலில் ராஜா களம் இறக்கிவிட்டிருந்தார்.
ராஜஸ்தானி நாட்டுப்புற பாடல்கள் பாடுகிற குரல்வளம் கொண்டவர்கள் ஒரு பாடலுக்குள் இருக்கிறார்கள் என்றால் இணைந்து பாடும் ஆண் குரலே அமுங்கித்தான் தெரியும்.
அப்படியிருக்க ராஜஸ்தானி நாட்டுப்புற பாடல்களில் புகழ்பெற்ற இலா அருண், இப்பாடலில் சென்சுவலான விநோத ஒலிகளையெல்லாம் எழுப்பி எரோட்டிக் ஃபீலில் முனகி ரகளை செய்துகொண்டிருக்கையில், காதலுக்கு வேலையேயில்லாமல் காமம் மட்டுமே விரவிய நெஞ்சத்தின், போதையேறிய குரலில் “யுத்தம் செய்யாத தேகம் நீ மோகம் கொண்டு போராடு” என்று ஸ்வர்ணலதா சரணத்தில் நுழைகிறபோதே ராஜாவின் இம்மாதிரி மெட்டினை எப்படி அணுக வேண்டும் என்று பாடம் எடுக்க ஆரம்பித்துவிடுவார்.
இப்பாடலின் வெளித்தோற்றத்திற்கு இலா அருண் அழகென்றால், ராஜாவின் மெட்டின் உள்ளே உள்ள சூட்சுமங்களைப் புரிந்து நுணுக்கமான சங்கதிகள் மற்றும் எக்ஸ்பிரஷன்கள் வழி சரணத்தில் படையல் வைத்திருக்கும் ஸ்வர்ணலதா ஒட்டுமொத்த பாடலுக்குமான பேரழகு என்பேன்.
அன்றைய நாளின் ட்ரெண்டாக இருந்த ஜாஸ் இசைப் பின்னணியில் பழங்குடி மக்களின் கோரஸ் ஒலிகளோடு ஆரம்பிக்கும் இப்பாடலில், ரிதம் அரேஞ்ச்மெண்ட்ஸ் சர்வதேச தரத்தில் இருக்கும்.
நன்றி: முகநூல் பதிவு.