ஒரு திரைப்படத்தின் வெற்றி என்பது அதில் காட்டப்படுகிற உலகினுள் நாம் பிரவேசிப்பதைச் சார்ந்தே அமையும்.
அந்த உலகில் உலாவும் கதாபாத்திரங்களில் ஒன்றாக அல்லது அந்தக் கதாபாத்திரங்களாகவே மாறுவது அந்த வெற்றியின் உயரத்தை இன்னும் அதிகமாக்கும். அப்படிப்பட்ட படைப்புகளே திரை வரலாற்றில் இடம்பெற்றிருக்கின்றன.
அந்த வகையில், தான் கற்பனையில் உருவாக்கிய ஒரு கதைக்கு ‘வருணன்’ படத்தில் உருவம் தர முயன்றிருக்கிறார் புதுமுக இயக்குநர் ஜெயவேல்முருகன்.
போபோ சஷி இசையமைத்திருக்கும் இப்படத்தில் துஷ்யந்த் ஜெயபிரகாஷ், கேப்ரியலா சார்ல்டன், ஹரிப்ரியா இசை, பிரியதர்ஷன், ராதாரவி, சரண்ராஜ், மகேஸ்வரி சாணக்யன், ஜீவா ரவி, சங்கர்நாக் விஜயன், டும்கான் மாரி உட்படப் பலர் நடித்துள்ளனர்.
‘வருணன்’ காட்சியாக்கத்தில் வெளிப்படுகிற உலகம் எந்த அளவுக்கு நம் வாழ்வுக்கு நெருக்கமாக இருக்கிறது?
காதலும் மோதலும்..!
சென்னையில் ‘தண்ணீரை’ வியாபாரம் செய்யத் தொடங்கியது 1995 வாக்கில்தான் என்பது போன்ற சில தகவல்களுடன் தொடங்குகிறது ‘வருணன்’ திரைப்படம்.
‘ஐம்பூதங்களில் ஒன்றான நீரை விற்பனை செய்யத் தொடங்கியது அழிவுக்கான ஆரம்பம்’ என்பது போன்று அப்பகுதி அமைந்திருக்கிறது.
ஆனால், அந்த வார்த்தைகளில் மறைந்திருக்கும் ‘சர்வதேச அரசியலை’ வருணன் பேசவில்லை. மாறாக, ‘வாட்டர் கேன்’ வியாபாரத்தில் ஈடுபடும் இரண்டு பெருந்தலைகள் சமரசப் போக்கைக் கடைப்பிடிக்க, அவர்களிடம் வேலைப் பார்க்கும் சிலர் எதிரெதிராக மோதுவதால் ஏற்படும் விளைவுகளைச் சொல்கிறது.
கூடவே, அந்த மனிதர்கள் சிலரது காதலையும் பேசுகிறது.
‘கேங்க்ஸ்டர் ஆக்ஷன் ட்ராமா’ என்று வகைமைப் பிரிக்கிற அளவுக்கு இதன் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.
வடசென்னையிலுள்ள ராயபுரம் பகுதியில் ஆண்டவர் வாட்டர் கேன் சர்வீஸை நடத்தி வருகிறார் அய்யாவு (ராதாரவி). இன்னொரு புறம் தனது பெயரில் தண்ணீர் கேன் வியாபாரத்தைச் செயல்படுத்துகிறார் ஜான் (சரண்ராஜ்).
அய்யாவு மதுரை பகுதியைச் சேர்ந்தவர் என்பதால் தென்மாவட்டங்களில் இருந்து சிலரை வேலைக்கு அமர்த்தியிருக்கிறார்.
திருநெல்வேலியைச் சேர்ந்த தில்லை (துஷ்யந்த் ஜெயபிரகாஷ்), மதுரையைச் சேர்ந்த மருது (பிரியதர்ஷன்) போன்று இருபதுகள், முப்பதுகளில் இருக்கும் பலர் அவரிடம் வேலை செய்து வருகின்றனர்.
ராயபுரத்தைப் பூர்விகமாகக் கொண்ட ஜானுக்கு அவரது மனைவி ராணியும் (மகேஸ்வரி) மச்சினன் டப்பாவும் (சங்கர்நாக் விஜயன்) உறுதுணையாக இருக்கின்றனர்.
சட்டவிரோதச் செயலான ‘சுண்டகச்சி’ தயாரிப்பில் டப்பா ஈடுபடுவதால், அப்பகுதிக்கான போலீஸ் உயரதிகாரி மதுரை வீரன் (ஜீவா ரவி) அவர் மீது கண் வைக்கிறார். ஆனாலும், ஆதாரங்கள் இல்லாததால் அவர் மீது வழக்கு தொடுக்க முடியாமல் போகிறது.
மருதுவும் தில்லையும் ஒருவரையொருவர் முறைத்தவாறே திரிகின்றனர். இருவரது வாழ்விலும் ஒரே நேரத்தில் இரண்டு இளம் பெண்கள் வந்து போகின்றனர். அது அவர்களது முறைப்பையும் முறுக்கையும் குறைக்கிறது; காதல் கிறக்கத்துடன் திரிய வைக்கிறது.
அதனால் நிகழ்கிற சில குழப்பங்களால் ஜான் ஆட்களோடு தில்லையும் மருதுவும் மோத வேண்டியதாகிறது. ஒருகட்டத்தில் டப்பாவை சிறைக்கு அனுப்ப அவர்கள் காரணமாகும் அளவுக்கு நிலைமை மோசமாகிறது.
போலீஸ் பிடியில் இருந்து வெளியே வந்தவுடன், ‘தில்லை மற்றும் மருதுவுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் நான் தான் காரணம்’ என்று டப்பாவிடம் எழுதி வாங்குகிறார் மதுரை வீரன். அதுவே அய்யாவுக்கு உறுத்தலை ஏற்படுத்துகிறது.
அது போதாதென்று ஜானுக்குப் பதிலாக வியாபாரத்தில் களமிறங்கத் தனக்கு உதவுமாறு அவரிடம் கேட்கிறார் மதுரை வீரன். ஆனால், அதற்கு அவர் சம்மதிப்பதில்லை.
ஏற்கனவே இருக்கிற குழப்பங்கள் போதாதென்று புதிதாகச் சில விஷயங்கள் சேர்கின்றன. அதனால் தில்லை, மருதுவுக்குத் தனிப்பட்ட வகையில் சில இழப்புகள் நேர்கின்றன. அதன்பின் என்னவானது என்று நீள்கிறது ‘வருணன்’.
முழுக்க இரு தரப்புக்கு இடையிலான மோதலை விரிவாகக் காட்டினாலும், அவற்றினூடே வருகிற தில்லை, மருது பாத்திரங்களின் காதலே இப்படத்திற்கு ‘ஜீவனாக’ இருக்கின்றன.
‘ஓகே’ ரக திரையனுபவம்!
துஷ்யந்த் ஜெயபிரகாஷ் இதில் தில்லையாக நடித்திருக்கிறார். ஒரு சாதாரண இளைஞனுக்கே உரிய அனைத்து உணர்வுகளையும் திரையில் வெளிப்படுத்தியிருக்கிறார். என்ன, அவரது பிட்டான ‘ஜிம் பாடி’தான் ஹீரோ என்று உணரச் செய்கிறது.
இன்னொரு நாயகனாக நடித்துள்ள பிரியதர்ஷன், பெரும்பாலான காட்சிகளில் ‘சிரித்த முகமாக’ வந்து போயிருக்கிறார். தோற்றத்திற்காக மெனக்கெட்டவர் ‘ஓகே’ எனு சொல்லும் அளவுக்கு நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
துஷ்யந்த் ஜோடியாக வரும் கேப்ரியேலா, பிரியதர்ஷன் ஜோடியாக வரும் ஹரிப்ரியா இருவருமே இதில் ‘ஸ்லிம்’மாக தோன்றியிருக்கின்றனர்.

இந்த படம் தயாராகி நெடுநாட்களாகின்றன என்பதற்கான அளவுகோலாகவும் அந்த ஒரு விஷயமே இருக்கிறது.
இருவரது நடிப்புமே ‘க்யூட் அண்ட் ஸ்வீட்’ என்று சொல்லும்படியாக உள்ளது.
ராதாரவிக்கு இதில் குணசித்திரப் பாத்திரம். ‘இதெல்லாம் ஜூஜுபி’ என்பது போல வந்து போயிருக்கிறார். சரண்ராஜும் அப்படியே.
‘திக்குவாய்’ குறைபாடுடைய பாத்திரமாக இதில் அவர் வெளிப்பட்டிருக்கிறார்.
சரண்ராஜ் ஜோடியாக வரும் மகேஸ்வரி, அவரது சகோதரராக வரும் சங்கர் நாக் விஜயன் இருவருமே வில்லத்தனத்தை வெளிப்படுத்தும் பாத்திரங்களில் நடித்துள்ளனர். கதைக்குத் தேவையான அளவுக்கு அவர்களது வில்லத்தனம் இருக்கிறது.
வில்லத்தனத்தில் மிரட்ட வேண்டிய அளவுக்குத் தோற்றம் தரும் ஹைடு கார்த்தி ஓரிரு காட்சிகளில் அதனைச் செயல்படுத்தியிருக்கிறார்.
இவர்களோடு ஜீவா ரவி, ‘சுப்பிரமணியபுரம்’ மாரி, கோகுல் என்று சுமார் ஒரு டஜனுக்கும் மேற்பட்டோர் இதில் முகம் காட்டியிருக்கின்றனர்.
ஸ்ரீராமசந்தோஷின் ஒளிப்பதிவு ‘ஒரு கலர்ஃபுல் படம்’ பார்க்கும் உணர்வைத் தருகிறது. அவரது பங்களிப்பே ஒட்டுமொத்தப் படத்தையும் எளிதாக உள்வாங்கச் செய்திருக்கிறது.
முத்தையனின் படத்தொகுப்பு முக்கால்வாசி படம் வரை ‘ஓகே’ ரகத்தில் இருக்கிறது. கிளைமேக்ஸ் 20 நிமிடக் காட்சிகள் மற்றும் மிகச்சில இடங்களில் விஎஃப்எக்ஸ் பங்களிப்போடு வரும் வாய்ஸ் ஓவர் காட்சிகள் தெளிவில்லாமல் இருப்பதை கவனிக்கத் தவறியிருக்கிறார்.
இசையமைப்பாளர் போபோ சஷி தந்திருக்கும் பாடல்கள் கேட்டவுடன் பிடித்துப்போகிற ரகம். பின்னணி இசையும் காட்சிகளின் தன்மையைத் தாங்கிப் பிடிக்கிற வகையில் இருக்கின்றன.
இவர்கள் தவிர்த்து கலை இயக்குநர் பத்து, ஒலி வடிவமைப்பாளர் தபஸ் நாயக் உட்படப் பல தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பு, இயக்குநர் ஜெயவேல்முருகனின் கதை சொல்லலுக்குப் பக்கபலமாக உள்ளது.
இப்படத்தில் வசனம் எழுதியிருக்கிறார் ரமண கோபிநாத். ஒரே கதையில் சென்னை, மதுரை, திருநெல்வேலி வட்டார வழக்கைப் புகுத்தும் சவாலை எதிர்கொண்டிருக்கிறார்.
சின்ன பட்ஜெட்டில் எடுக்கப்பட்டாலும், ஒவ்வொரு காட்சியையும் அழகியலுடன் இழைப்பது என்று கங்கணம் கட்டிக்கொண்டு வேலையில் இறங்கியிருக்கிறார் இயக்குநர் ஜெயவேல்முருகன். அவரது குழுவினரும் அதற்கேற்ப பணியாற்றியிருக்கின்றனர்.
இந்தப் படத்தில் ஒவ்வொரு கதாபாத்திரத்தின் குணாதிசயங்களை, சிறப்புகளை உணர்த்தும் வகையில் அவற்றின் அறிமுகக் காட்சியை வடிவமைத்திருக்கிறார்.
கதையில் நிகழ்கிற முரண்களைச் சிறப்பாக வடிவமைத்திருக்கிறார். அந்த வகையில் ‘ஓகே’ ரக திரையனுபவத்தைத் தருகிறார்.
அதையெல்லாம் நுட்பமாகக் கவனித்தவர், இறுதியாக வரும் காட்சிகள் அவசரகதியில் அமைந்திருப்பதை உற்றுநோக்கத் தவறியிருக்கிறார். அதுவே இப்படத்தின் மைனஸ்.
அதேநேரத்தில், இந்தப் படத்தின் கதாபாத்திரங்களோடு, களத்தோடு நம்மை எளிதாகப் பொருத்திப் பார்த்துக்கொள்ள முடிவதே இதன் வெற்றி.
அதனை நிகழ்த்துவதற்குத்தான் இன்று பல திரைப்படங்கள் பெரும் பிரயத்தனப்படுகின்றன. அந்த வரிசையில், இப்படம் ஓரளவு வெற்றி பெற்றிருக்கிறது.
சத்யராஜின் குரலில் ஒலிக்கும் ‘தண்ணீர் அரசியல்’ தொடர்பான வாய்ஸ் ஓவரும் இப்படத்தின் கதையோடு பொருந்தவில்லை.

‘தண்ணி கேன் போடுறவங்களுக்கு இடையிலான சண்டையைத் தீர்க்குற இடத்துல ‘கேன் வியாபாரமே வேண்டாம்’கற மாதிரியான பேச்சு எதுக்கு’ என்று சொல்லும் வகையில் அந்த வாய்ஸ் ஓவர் இருக்கிறது.
இயக்குநர் அதற்கெனத் தனிக்கதையை உருவாக்கலாம். போலவே, ‘வருணன்’ என்ற டைட்டிலும் கூடப் பொருத்தமாகத் தெரியவில்லை. வேறேதேனும் பெயர் வைத்திருக்கலாம்.
குறைகளைப் புறந்தள்ளிவிட்டால் நிறைகள் கணிசமாகத் தேறும் என்பதுவே இப்படத்தின் சிறப்பு. அந்த வகையில், திரையரங்கில் நின்று நிதானித்து ரசிக்கும்படியான காட்சியாக்கம் இதில் இருக்கிறது.
அது போதுமே என்பவர்கள் ‘வருணன்’ கண்டு ரசிக்கலாம். இதற்கு முன் பார்த்திராத ‘காஸ்ட்டிங்’ என்பதை மறந்துவிட்டால் இப்படம் நல்லதொரு திரையரங்கு அனுபவத்தையும் கூடத் தரும்..!
– உதயசங்கரன் பாடகலிங்கம்