வெண்ணிற ஆடை மூர்த்தி 1936-ம் ஆண்டு ஜூலை மாதம் 25-ம் தேதி சிதம்பரத்தில் பிறந்தவர். இவரின் தந்தை, கே.ஆர். நடராஜன் கடலூர் மாவட்டத்தில் பிரபலமான வழக்கறிஞர்.
தந்தை வழியில் இவரும் வழக்கறிஞருக்குப் படித்தார். ஆனால், ஜோதிடர் ஒருவர் நீங்கள் வக்கீலாக இருந்தாலும் அந்தத் தொழிலில் நீங்கள் ஈடுபடமாட்டீர்கள் என்று கூறவே அப்படியே நடந்தது.
அதிலிருந்து மூர்த்திக்கு ஜோதிடத்தின் மீது அளவு கடந்த ஆர்வம் ஏற்பட்டு, இவரே மற்றவர்களுக்கு ஜோதிடம் சொல்லும் அளவுக்குத் தன்னை வளர்த்துக்கொண்டார். அதன்பிறகுதான் இவர் சினிமாத் துறைக்கு வந்தார்.
வெண்ணிற ஆடை மூர்த்தி, இயக்குநர் ஸ்ரீதரை சந்தித்ததே சுவாரஸ்யமான ஒன்று.
‘சினிமாவில் என்ன ரோல் பண்ணுவ’ என ஸ்ரீதர் கேட்டிருக்கிறார். அதற்கு மூர்த்தி, ‘காமெடி பண்ணுவேன்’ எனக் கூறியிருக்கிறார்.
முர்த்தி, “பார்ப்பதற்கு ஹீரோபோல இருக்கியே, உனக்கெதுக்கு காமெடி” எனக் கேட்க, “ஏன்னா, எனக்குக் காமெடிதான் நல்லா வரும்னு நம்பிக்கையிருக்கு. அழகா இருந்தா அதிர்ஷ்டம்னு சொல்வாங்க.
என்னுடைய அழகே எனக்கு துரதிர்ஷ்டமாகி, கிடைக்கிற வாய்ப்பைக் கெடுத்துடும் போலிருக்கே!” என்று கூற, வாய்விட்டுச் சிரித்த ஸ்ரீதர் ‘வெண்ணிற ஆடை’ படத்தில் அவரை நடிக்க வைத்தார்.
வெண்ணிற ஆடை மூர்த்தி, நாகேஷுடன் ஶ்ரீதரின் ‘வெண்ணிற ஆடை’ தமிழ் சினிமாவில் ஒரு வித்தியாசமான படைப்பு.
உளவியல் சார்ந்த இந்தக் கதையில் ஜெயலலிதா, நிர்மலா, மூர்த்தி எனப் பல புதுமுகங்கள் அறிமுகம்.
புகழ்பெற்ற படத்தின் பெயரைத் தங்கள் பெயருடன் இணைத்துக்கொள்ளும் விதமாக வெண்ணிற ஆடை நிர்மலா, வெண்ணிற ஆடை மூர்த்தி என இணைத்துக்கொண்டனர்.
இவர் ஜோதிடர், எழுத்தாளர் எனப் பன்முகத்தன்மை கொண்டவர். பல படங்களுக்குத் திரைக்கதையாசிரியராகவும் பணியாற்றி இருக்கிறார்.
சி.வி. ராஜேந்திரன் இயக்கத்தில் கமல்ஹாசன் ஹீரோவாக அறிமுகமான `மாலை சூடவா’ படத்துக்கு இவர்தான் கதை, வசனம்.
வெண்ணிற ஆடை மூர்த்தி, மேடை நாடகங்களில் 600 முறைக்குமேல் நடித்திருக்கிறார். எல்லா முன்னணித் தொலைக்காட்சியிலும் பல சீரியல்களில் நடித்தவர். சில திரைப்படங்களுக்குக் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இருக்கிறார்.
நன்றி: ஆனந்த விகடன்