Take a fresh look at your lifestyle.

பொதுவெளிக்கு வரும் பிரபலங்களின் தனிப்பட்ட வாழ்க்கை!

144

தமிழ் சினிமாவில் நடிகர் – நடிகைகளின் விவாகரத்துகள் சர்வ சாதாரணமானவை. அண்மையில் பொதுவெளியில் அதிகம் பேசப்பட்டது தனுஷ் – ஐஸ்வர்யா மனமுறிவு.

கமல், சரத்குமார், சமந்தா, சோனியா அகர்வால், அமலா பால், யுவன் சங்கர் ராஜா, ஜி.வி.பிரகாஷ் குமார் என வாழ்க்கைத் துணைகளைப் பிரிந்தவர்கள் எண்ணிக்கை கணக்கில் அடங்காதது.

ஆனால், இவர்களின் பிரச்சினை பொதுவெளிக்கு வந்ததில்லை. நான்கு சுவர்களுக்குள் முடிந்துள்ளது. குடும்ப நல நீதிமன்றங்களில் சுமூகமாக தீர்க்கப்பட்டுள்ளது. இவர்கள் யாருமே ஊடகங்கள் வாயிலாக நியாயம் கேட்டதில்லை.

சுருங்கச் சொன்னால், பிரிவுக்கான காரணங்களை விவரித்து, தங்களைப் பற்றிய மதிப்பீடுகளைக் குறைத்துக்கொள்ளவில்லை.

ஆனால் ரவி மோகன் – ஆர்த்தி விவகாரம் அப்படியல்ல.

ஜெயம் ரவி என அறியப்பட்டு, இப்போது மோகன் ரவியாக பெயர் மாற்றம் செய்துள்ள ரவியின் விவாகரத்து விவகாரம், ஊடகங்களில்  பெரிதும் பேசப்பட்டது.

படத்தின் ‘புரமோஷன்’ நிகழ்ச்சி போல், குடும்ப குஸ்தியை பகிரங்கமாக வெளிப்படுத்தி தினமும் சண்டை போட்டுக்கொள்கிறார்கள்.

மனைவி ஆர்த்தியை பிரிவதாகக் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடிகர் ரவி மோகன் தனது சமூக வலைதளத்தில் அறிவித்தார்.

நீண்ட கால யோசனைக்கு பிறகு, ஆர்த்தி உடனான தனது திருமண வாழ்வில் இருந்து விலகுவதாக அவர் கூறியிருந்தார்.

ரவி மோகன் – ஆர்த்தி பிரிவுக்கு காரணம் பாடகி கெனிஷா என்று பலரும் கூறிய நிலையில், ரவி மோகன் அதற்கு மறுப்பு தெரிவித்திருந்தார்.

இந்தச் சூழலில், அண்மையில் நடந்த தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் மகள் திருமண விழாவில் கெனிஷாவும் ரவிமோகனும் ஜோடியாக வருகை தந்தனர்.

இதனையடுத்து, ரவி வெளியிட்ட அறிக்கையில், ஆர்த்தி மீது குற்றம் சாட்டி இருந்தார்.  ‘பொன் முட்டையிடும் வாத்தாக நான் நடத்தப்பட்டேன் – வாங்கிய கடனுக்காக நடிக்க வைத்தார்’ என ஆர்த்தி மீது புகார் சொன்னார்.

இதற்கு ஆர்த்தி பதில் சொல்லவில்லை. அவரது தாயாரும், ரவியின் மாமியாருமான சுஜாதா விளக்கம் கொடுத்து, விவகாரத்தை மேலும் பற்ற வைத்தார்.

தன் பங்குக்கு அவர், மகளுக்கு ஆதரவாக ஓர் அறிக்கை வெளியிட்டு, தன் இருப்பைத் தக்க வைத்தார்.

‘எப்போதும் உங்களை ஹீரோவாகவே பார்க்கிறோம் – உங்கள் பொய்கள், உங்களை தரம் தாழ்த்தி விடுகின்றன’ என அவர் ரவியை கழுவி ஊற்றினார்.

கணவன் – மனைவி சண்டையில் மாமியார், ஊடகங்கள் துணையோடு தலையிட்டது இந்திய சினிமா வரலாற்றில் இதுதான் முதன் முறையாக இருக்கும்.

இந்த விவகாரத்தில் அண்மையில் கிளைமாக்ஸ் வெளியானது. நீண்டநாட்களாக மவுனம் காத்து வந்த ஆர்த்தி ரவி, முதல் முறையாக நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அது – அறிக்கை அல்ல – கணவன் மீது வீசப்பட்ட வெடிகுண்டுகள்.

அதிலிருந்து சில சிதறல்கள்: 

“இப்போது உண்மையை அறிவீர். இதுதான் இறுதியும் அச்சமற்றதுமான விளக்கம்’ என்ற குறிப்புடன் ஆர்த்தி ரவி பகிர்ந்தவை:

எங்களது திருமண வாழ்வு இந்த நிலைக்கு வந்ததற்குப் பணமோ, அதிகாரமோ, பிறர் தலையீடோ அல்லது கட்டுப்பாடோ காரணமல்ல.

எங்கள் வாழ்வில் வந்த ஒரு மூன்றாவது நபரே காரணம்.

தனது சொத்துகளை, கவுரவத்தை இழந்து வெறும் காலோடு அவர் ஒன்றும் வீட்டை விட்டு வெளியேறிப் போகவில்லை.

நன்றாக முன்கூட்டியே மிகத் தெளிவாகத் திட்டமிட்டு விலையுயர்ந்த ஆடைகள், காலணிகள் அணிந்து, தனக்கு தேவையான அனைத்து பொருட்களையும் எடுத்துக் கொண்டு, ஐந்து கோடி ரூபாய் மதிப்புள்ள RANGE ROVER காரில்தான் வீட்டை விட்டுச் சென்றார்.

அவரை யாரும் துரத்தவில்லை. அவர் அமைதியாகவும், மிகுந்த நிதானத்தோடும் திட்டமிட்டு தான் வீட்டை விட்டு வெளியேறினார் – வெளியேறியதன் காரணம் பயம் அல்ல, அதற்கு மேல் அவருடைய ரகசிய வாழ்வைக் காப்பாற்ற முடியாமல் போனதே.

நான் பலவீனமானவள் இல்லை. என் மீது நம்பிக்கை கொண்டு அன்புக்குரியவர்களின் துணையோடு இன்னும் உயர்ந்து நிற்பேன், ஒரு போதும் தாழ்ந்து போக மாட்டேன்.

இதற்கு மேல் நான் பேச எதுவும் இல்லை. ஏனென்றால் நான் இன்னும் நீதிமன்றத்தின் சட்டத்தை நம்புகிறேன். எனக்கு நீதி கிடைக்கக் காத்திருக்கிறேன்” என்று ஆர்த்தி ரவி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அதைத் தொடர்ந்து, நேற்று, விவகாரத்து வழக்கில் ஆஜரான ஆர்த்தி, தனக்கு ஜீவனாம்சமாக ரவி மோகன் மாதம் 40 லட்சம் தர வேண்டும் என கோரியுள்ளார்.

ரவி அண்ணன் பதிலுக்காக ஊடகங்கள் ‘வெயிட்டிங்’.

– பாப்பாங்குளம் பாரதி.