Take a fresh look at your lifestyle.

மீண்டும் மதுபாலாவின் ‘சின்ன சின்ன ஆசை’!

163

‘சின்ன சின்ன ஆசை சிறகடிக்க ஆசை’ பாடல் எப்படி ஏ.ஆர். ரஹ்மானை நினைவுக்குக் கொண்டு வருமோ, அதே அளவுக்கு அதில் இடம்பெற்ற மதுபாலாவையும் நம் கண் முன்னே நிறுத்தும்.

‘ரோஜா’ படத்தின் அடையாளங்களில் ஒன்றாகத் திகழ்கிறது அப்பாடல்.

அந்த ‘சின்ன சின்ன ஆசை’ மீண்டும் மதுபாலாவை வந்தடைந்திருக்கிறது. இம்முறை ஒரு படத்தின் டைட்டிலாக.

இந்தி நடிகை ஹேமாமாலினியின் உறவினரான மதுபாலா, தமிழில் கே.பாலச்சந்தர் இயக்கத்தில் ‘அழகன்’ படத்தில் அறிமுகம் ஆனார். கவிதாலயா புரொடக்‌ஷன்ஸ் தயாரித்த ரோஜா, வானமே எல்லை படங்களில் அடுத்தடுத்து நடித்தார்.

தமிழில் மதுபாலா என்ற இயற்பெயரிலேயே அழைக்கப்பட்டாலும், இந்தித் திரையுலகில் அவர் ‘மது’ என்றே அறியப்பட்டார். காரணம், அறுபதுகளில் மதுபாலா என்ற புகழ் பெற்ற நடிகை விட்டுச் சென்ற ஆழமான தடம் தான்.

1993இல் வெளியான ஷங்கரின் ‘ஜெண்டில்மேன்’ மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. அதன் தொடர்ச்சியாக தொண்ணூறுகளில் இந்தி, மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் என்று கலந்து கட்டி நடித்தார் மதுபாலா.

செந்தமிழ் செல்வன், மிஸ்டர் ரோமியோ, பாஞ்சாலங்குறிச்சி படங்களில் நடித்தவர் இருவர் படத்தில் ஒரு பாடலில் தோன்றியிருந்தார்.

கிட்டத்தட்ட 17 ஆண்டுகள் கழித்து, ‘வாயை மூடிப் பேசவும்’ படத்தில் மீண்டும் தமிழில் நடித்தார்.

அக்னி தேவி, காலேஜ் குமார், தேஜாவூ படங்களில் நடித்தபோதும் அவரால் மீண்டும் அந்தப் பழைய வரவேற்பைப் பெர முடியவில்லை.

இந்த நிலையில், ‘வாயை மூடிப் பேசவும்’ மலையாளப் பதிப்புக்குப் பிறகு அவர் அம்மொழியில் நடிக்கிற படமாக அமைந்திருக்கிறது ‘சின்ன சின்ன ஆசை’.

இந்தப் படத்தில் மதுபாலாவின் ஜோடியாக நடிப்பவர் இந்திரன்ஸ். ஒருகாலத்தில் நகைச்சுவை நடிகராக மலையாளத் திரையுலகில் அறியப்பட்டவர் இன்று குணசித்திர பாத்திரங்களில் வெளுத்து வாங்கி வருகிறார்.

அன்வேஷிப்பின் கண்டதும், சிஐடி ராமச்சந்திரன் ரிட்டயர்டு எஸ்.ஐ., ஆனந்த் ஸ்ரீபாலா, ரேகாசித்ரம் என்று அவரது சமீபத்திய படங்கள் நல்லதொரு பெயரைத் தந்திருக்கின்றன.

அந்த வரிசையில் சேருமா என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது ‘சின்ன சின்ன ஆசை’.

வர்ஷா வாசுதேவ் எனும் புதுமுக இயக்குநர் இயக்குகிற இப்படமானது முழுக்க காசியில் படமாக்கப்பட்டிருக்கிறது. இவர் மலையாளத்தில் ‘எண்ட நாராயணிக்கு’ எனும் குறும்படத்தின் வழியே புகழ் பெற்றவர்.

இப்படத்திற்கு இசையமைப்பவர் ‘96’ புகழ் கோவிந்த் வசந்தா.

இப்படத்தின் ‘பர்ஸ்ட் லுக்’கை வெளியிட்டிருக்கிறார் இயக்குநர் மணிரத்னம். அவர் படத்தின் நாயகி மீண்டும் நடிக்கிற படைப்பானது, அவர் படத்தின் புகழ் பெற்ற பாடலைத் தாங்கியிருக்கிறது. இதைவிடப் பொருத்தம் வேறென்ன இருக்க முடியும்?

‘சின்ன சின்ன ஆசை’ பர்ஸ்ட் லுக் போஸ்டரில் இந்திரன்ஸும் மதுபாலாவும் ஒரு பெஞ்சில் அமர்ந்திருக்கின்றனர்.

இந்திரன்ஸ் காதலோடு நோக்க, அதனை ஏற்றுக்கொண்டது போல மௌனமாகப் புன்னகைக்கிறார் மதுபாலா.

இதுவே வயோதிகத்தில் நிகழ்கிற காதலை இப்படம் பேசுவதாகப் புரிந்துகொள்ளத் தூண்டுகிறது.

மதுபாலா இப்படத்திற்குக் கொடுக்கிற முக்கியத்துவத்தைப் பார்த்தால், தமிழிலும் இது ‘டப்’ ஆக வாய்ப்பிருப்பதாகத் தெரிகிறது. அது சரி, ‘சின்ன சின்ன ஆசை’யை தமிழ் ரசிகர்கள் எப்படி மறப்பார்கள்?

– மாபா