பொட்டு வைத்தல் என்பது மதம் சார்ந்த ஒன்றாக இருந்தாலும், அது மக்களின் நம்பிக்கையாகவும் இருக்கிறது. பொட்டு என்பது திருநீறு மற்றும் குங்குமம் ஆகியவையே பிரபலமாக இருந்துள்ளது.
பக்தி இயக்க காலத்தில் திருநீற்றுப் பதிகம் என்று சைவ அடியார்கள் பாடியுள்ளார்கள். காலங்கள் மாற்றத்தால் ஸ்டிக்கர் பொட்டு வந்துள்ளது இருப்பினும் திருநீறு மற்றும் குங்குமம் பயன்பாட்டில் இருக்கிறது.
நடு நெற்றியில் பொட்டு வைக்கும்போது விரலின் தூண்டலால் அங்கே உள்ள பிட்யூட்டரி சுரப்பி உடல் முழுவதும் சீராக இயங்கும் என்று சொல்லப்படுகிறது. இன்றைக்கும் கிராமப் புறத்தில் திருமணமான பெண்கள் குங்குமம் வைப்பதைக் காண முடியும்.
இவ்வளவு சொல்வதால் எல்லோரையும் பொட்டு வைக்க சொல்லப்போகிறேன் என்று கருத வேண்டாம். அது அவரவர் விருப்பம். நான் சொல்ல வருவது பொட்டு வைக்காத சமூகத்தில் இருந்து வந்த பெண்மணி பொட்டைப் பற்றி எழுதியதை.
1968 ல் கே.சங்கர் இயக்கத்தில் எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் ‘குடியிருந்த கோயில்’ அதில் இடம்பெற்ற பாடல்களில் ஒன்று,
“குங்குமப் பொட்டின் மங்கலம்
நெஞ்சம் இரண்டின் சங்கமம்”
எனத் தொடங்கும் பாடல். இப்பாடலை எழுதியவர் இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த ரோஸ்னரா பேகம் என்பவர். இஸ்லாமிய சமூகத்தின் முதல் பெண் திரைப்பட பாடலாசிரியராக இவரே விளங்குகிறார்.
துரதிர்ஷ்டவசமாக இவரின் முதலும் இறுதிப் பாடலாக இதுவே அமைந்துள்ளது. இந்தப் பாடல் எனக்குப் பிடித்த வரிகளாக இவற்றைக் கூற வேண்டும் ”
“மனம் சிந்திக்க சிந்திக்க துன்பம்
தினம் சந்திக்க சந்திக்க இன்பம்”
காதலில் ஒருவரை நினைத்துக் கொண்டு இருக்கும்போது துன்பந்தான் நேரும் அதுவே அவரைச் சந்தித்து விட்டால் அத்தனை துன்பங்களும் நீங்கிவிடும். இது காதலுக்கு மட்டும் அல்ல அனைத்து விதமான உறவுகளுக்கும் பொருந்தும்.
“கற்பனை கடலான போது
சென்றதே பூந்தென்றல் தூது”
தூது என்பது பழங்காலத்தில் இருந்து தொடரக்கூடிய ஒன்று. பக்தி இயக்க காலத்திற்குப் பிறகு சிற்றிலக்கிய காலத்தில் தூது என்ற தனி இலக்கிய வகையே உருவாகியுள்ளது.
அதில் பல உயிருள்ள உயிரற்ற பொருட்களைத் தூதாக அனுப்பிய குறிப்புகள் கிடைக்கின்றன.
இவர் பூந்தென்றல் தூதாகச் சென்றது என்கிறார். தென்றல் என்பதே மென்மையை குறிப்பது தான் இவர் அதனை பூந்தென்றல் என்று இன்னும் மென்மையாக்கியிருக்கிறார்.
ஒருவேளை மலரினும் மெல்லியது காமமென்பதால் பூந்தென்றல் என்று உபயோகிக்கிறாரோ!
ஆனால், சில இடங்களில் இப்பாடலை எழுதியது வாலி என்று பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தக் குளறுபடி இன்று வரை நிகழ்ந்த வண்ணமே தான் உள்ளன.
-நன்றி: முகநூல் பதிவு.