Take a fresh look at your lifestyle.

வெற்றிப் படங்களை கை நழுவ விட்ட நட்சத்திரங்கள்!

137

நடிகர்களை ஆட்டுவிக்கும் ‘டான்ஸ் மாஸ்டர்’ ஆகத்தான் வெள்ளித்திரைக்குள் பிரவேசித்தார் பிரபுதேவா.

பின்னர் ‘ஏப்ரல் மேயிலே பசுமையே இல்லை…’ ‘லாலாக்கு டோல் பப்பி மா…’ ‘சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலே…’ என ஒரு பாடலுக்கு மட்டும் தலைகாட்டி ரப்பர் உடம்பை வளைத்து இளசுகள் இதயத்தையும் வளைத்தார்.

‘காதலன்’ படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி அந்த ஒற்றைப் படத்திலேயே ஸ்டார் அந்தஸ்து பெற்றது பிரபுதேவாவே எதிர்பாராத நிகழ்வு.

‘காதலன்’ படத்தில் பிரபுதேவாவை அறிமுகம் செய்யும் திட்டமே இயக்குநர் ஷங்கருக்கு கிடையாது. அவரது சாய்ஸ், பிரசாந்த்.

தனது முதல் படம் ‘ஜென்டில்மேன்’ ரிலீஸ் ஆகாத நிலையில் ‘காதலன்’ வேலைகளை ஆரம்பித்திருந்தார் ஷங்கர். பிரசாந்தையே முதலில் அணுகினார்.

ரஜினி, கமல் போன்ற ஆளுமைகள் வலிந்து, கால்ஷீட் கொடுக்கும் அளவுக்கு பின்னாட்களில் உயர்ந்திருந்த ஷங்கரின் நுட்பமும், அர்ப்பணிப்பும் அப்போது வெளி உலகுக்கு தெரிந்திருக்கவில்லை.

புது ஆளாக இருக்கிறாரே என்று பிரசாந்த் தயக்கம் காட்ட, பிரபுதேவாவுக்கு அடித்தது ‘லக்கி பிரைஸ்’.

நாமொன்று நினைக்க கடவுள் வேறொன்று நினைப்பது போல், இதுபோன்ற கடைசி நேர மாறுதல்கள் தமிழ் சினிமாவில் நிறையவே அரங்கேறியுள்ளன.

அதனையும் பார்க்கலாம்.

‘காதலன்’ படத்தில் இருந்தே தொடங்கலாம்.

இந்தப் படத்தில் முதலில் மாதுரி தீட்சித்தை கதாநாயகியாக்க தயாரிப்பாளர் குஞ்சுமோன் விரும்பினார். அவர் நடித்த இந்திப் படங்களை கேரளாவில் வழக்கமாக ரிலீஸ் செய்தவர் குஞ்சுமோன்.

மாதுரி கால்ஷீட் கிடைக்காததால் ‘முக்காலா முக்காபுலா’ பாடும் வாய்ப்பு நக்மாவைத் தேடி வந்தது.

ஷங்கரின் ‘ஜென்டில்மேன்’ ஹீரோ கூட ஆரம்பித்தில் அர்ஜுன் இல்லை. சரத்குமார் தான் நடிப்பதாக இருந்தது. அப்போது சில பிரச்சினைகள். 

பவித்ரனின் ‘ஐ லவ் இந்தியா’வுக்கு ஒட்டுமொத்த கால்ஷீட் கொடுத்து ஒரு மெஹா ஹிட் படத்தை இழந்தார் சரத்.

அதன் பின்னர் தான் ‘அர்ஜுன் ஜென்டில்மேன்’ ஆனார்.

அடுத்தும் ஷங்கர் செய்திதான். அவரது சொந்தத் தயாரிப்பான ‘முதல்வன்’ கதை ரஜினிகாந்துக்காக எழுதப்பட்டது.

சில அரசியல் காரணங்களால் ரஜினிகாந்த் அந்தப் படத்தில் நடிக்க விரும்பவில்லை. வேறு வழியின்றி அர்ஜுன் ‘தற்காலிக முதல்வர்’ ஆக்கப்பட்டார்.

பாலுமகேந்திரா பட்டறையில் இருந்து வந்தவர் பாலா.

பாலு மகேந்திராவின் ‘ராமன் அப்துல்லா’ படத்தில் ஹீரோவாக நடித்தவர் விக்னேஷ். அப்போதே பாலாவுக்கும், விக்னேஷுக்கும் நட்பு உண்டு.

பின்னாட்களில் ‘சேது’ படத்தை பாலா உருவாக்கியபோது, அதில் ஹீரோவாக நடிக்க பேசப்பட்டவர் விக்னேஷ்.

துரதிருஷ்டவசமாக ஷூட்டிங் கிளம்பும் சமயத்தில் விக்னேஷுக்கு அம்மை போட்டதால், ‘சேது’வில் நடிக்க முடியாமல் போனது. அதன் பின்னரே ‘சேது’வுக்குள் வந்தார் விக்ரம்.

‘எங்கள் அண்ணா’ படத்தில் பிரபுதேவா கேரக்டரில் கார்த்திக் தான் முதலில் நடித்தார். வழக்கம்போல் கால்ஷீட் சொதப்பல் செய்ததால் அவருக்கு பதிலாக பிரபுதேவாவை ஒப்பந்தம் செய்தனர்.

‘வாலி’யில் அஜீத்தை ஹீரோவாக்கி அவருக்கு ஒரு உயரத்தைக் கொடுத்து தானும் ஒரு அந்தஸ்தைப் பெற்றார் எஸ்.ஜே.சூர்யா.

அவரது ‘நியூ’ படத்திலும் அஜீத் நடிப்பதாக இருந்தது. கதையும், காட்சிகளும் அஜீத்துக்கு பிடிக்கவில்லை. படத்தில் இருந்து ஒதுங்கிக் கொண்டார். எஸ்.ஜே.சூர்யாவே கதாநாயகன் ஆனார்.

‘சிவாஜி’ படத்தில் வில்லனாக சுமன் ஆரம்பத்தில் பரிசீலிக்கப்படவே இல்லை. சத்யராஜ் உள்ளிட்ட பல்வேறு நடிகர்களை ஷங்கர் யோசித்தார்.

சத்யராஜிடம் பேச்சுவார்த்தைகூட நடந்தது. கை கூடவில்லை. கடைசியில் தான் சுமன் ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

விஜயகாந்த் நடித்த ஆரம்பகால படங்களின் கதைகள் ரஜினிக்காக எழுதப்பட்டவை. ரஜினியிடம் தேதிகள் இல்லாததால் அந்த வாய்ப்புகள் விஜயகாந்தைத் தேடிவந்தன.

இதுபோல் இன்னும் நிறைய சொல்லிக்கொண்டே போகலாம்.

– பி.எம்.எம்.