Take a fresh look at your lifestyle.

‘காதல் கவிதை’ படத்தை ரீ-ரிலீஸ் செய்யலாம்!

அகத்தியன் இயக்கத்தில் பிரசாந்த் நடிப்பில் 1998-ல் வெளிவந்த படம் ‘காதல் கவிதை’. அந்தப் படத்தில் இடம்பெற்ற பாடல்களைச் சொல்லியே ஆக வேண்டும்.

“வாசமிக்க மலர்களைக் கொண்டு
வாசமிக்க இதயங்கள் பரிமாறிக்கொண்டோம்,
என் நெஞ்சில் வாசம் செய்பவள்,
எங்கும் வாசம் செய்கிறாள்..
எங்கோ வாசம் செய்கிறாள்…

காதல் சொல்லித் தந்த பாடல் தந்த கிளி நீ எங்கே?…” என்று தொடங்கும் அந்தப் பாடல் காதலின் தவிப்பைக் கூட்டிவிடும்.

இந்தப் பாடலில், இளையராஜா என்னென்ன வித்தைகளெல்லாம் செய்திருக்கிறார்! ஹரிஹரன் அந்த வித்தைகளை தன் மகரந்தக் குரலால் பண்படுத்தி அழகான காவியமாக்கி இருக்கிறார்.

பாடலைக் கேட்கும்போதே மனம் லண்டன் வீதிகளில் காதலியைத் தேடி அலையும் இளைஞனின் விழிகளை உணர வைக்கும் அளவுக்கு ராஜாவின் இசை அதி அற்புதமாக அமைக்கப்பட்டிருக்கும்.

காதல் கவிதை படத்தில் வரும் ஒவ்வொரு பாட்டுமே வைரத்திற்கு ஒப்பானவை. ராஜாவின் இசையில் வந்த படைப்புகளில் மேலத்தேய இசையின் உச்சமாக இப்படத்தின் பாடல்களைச் சொல்லலாம்.

காதலைத் தேடிச் செல்லும் “டயானா டயானா” பாடலின் இசைக் கோர்வைக் குறித்து தனிக்கட்டுரையே எழுதலாம். கோரஸ் இளவரசிகள் குரலோடு கப்பல் பயணம் செய்து கொண்டே பயணிக்கும் பயணியின் தேடலாய் ஒலிக்கும் இப்பாடல் ராஜாவின் மிக முக்கியமான பாடல்களில் ஒன்று.

ஒரு அற்புதமான குறுங்கவிதையாக வரும் பவதாரிணி பாடும் “அலை மீது விளையாடி வரும் தென்றல்”.

ஆப்பிரிக்க மலைவாழ் மக்களுடைய நாட்டுப்புறச் சாயல் கொண்ட பாடலைப் பிரபல பாடகி இலா அருணுடன் நம்மூர் ஸ்வர்ணலதா கலந்து குத்தி எடுத்திருப்பார். இது ஒருபுறம் என்றால், “ஆளான நாள் முதலா” பாடலில் சௌமியா ராவ் புஷ்பவனம் குப்புசாமியைப் புரட்டி எடுப்பார்.

எல்லாவற்றிலும் உச்சமாக டைட்டில் பாடலில் ராஜாவும் சுஜாதாவும் பாடும் “கொஞ்சிப் பேசு கோபம் என்ன கண்ணம்மா..” பாடல் ராஜாவின் முத்திரைப்பாடல் என்று சொல்லலாம்.

லண்டனில் நிகழ்வதாக வரும் இந்தப் பாடலை கேமிராமேன் ரவி அவ்ளோ அழகா காட்சிப்படுத்தி இருப்பார். இப்படமே கேமிராவின் கவிதை என்றே சொல்லலாம்.

பிரசாந்த் அவ்ளோ இயல்பாகக் காதலைத் தேடி அலையும் இளைஞனாக நடித்திருப்பார். பிரசாந்தின் சினிமா வாழ்க்கையில், இப்படம் மிக முக்கிய இடத்தை பிடித்திருக்கும்.  

இஷா கோபிகர், அறிமுக நடிகை போல அல்லாமல் மிகவும் பண்பட்டவராக நடித்திருப்பார். அறிமுகப்படத்திலேயே இவ்வளவு இயல்பாக நடிக்க முடிந்ததென்றால் எவ்வளவு பெரிய நடிகையாக ஆகி இருக்கவேண்டும். 

இப்படிப்பட்ட படத்தை எடுத்தபிறகு அகத்தியனை தமிழ்த் திரை உலகம் கொண்டாடி இருக்க வேண்டும். ஆனால், காலத்தின் கோலம் பிரசாந்த், இஷா கோபிகர், கஸ்தூரி, அகத்தியன், ராஜா என அனைவருக்குமே இப்படத்திற்கு பிறகான காலம் மிகவும் கடினமாக ஆனது என்றே சொல்லவேண்டும். அதுதான் தமிழ் சினிமாவின் சாபக்கேடு.

தமிழ் ரசிகன் அப்போது மசாலா படங்களின் ரசிகனாக மாறி இருந்தான். எந்நேரமும் குத்துப் பாடல்களின் பின்னே திரிந்து, அர்த்தமற்ற காமெடிப் படங்களின் வெற்றிகளின் பின்னே ஒரு அற்புதமான படத்தைக் கொண்டாடத் தவறிவிட்டான் என்றே சொல்ல வேண்டும்.

தயாரிப்பாளர் அசோக் அமிர்தராஜ் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள். இப்படத்தை மீண்டும் ரீ ரிலீஸ் செய்யவேண்டும். இன்றைய கால கட்டத்திற்கு மிகவும் பொருத்தமான படமாக தோன்றும் படங்களில் காதல் கவிதையும் ஒன்று.

நன்றி : முகநூல் பதிவு