Take a fresh look at your lifestyle.

கமல் படத்துக்காக கண்ணதாசன் எழுதிய 58 பல்லவி!

ஆச்சரியம்தான்.

கவிஞர் கண்ணதாசன் ஒரு பல்லவி எழுதினாலே லட்டுதான். ஆனால், ஒரு பாடலுக்காக அவர் 58 பல்லவிகளை எழுதி கொடுத்திருக்கிறார் என்றார் ஆச்சரியம்தானே!

கமல்ஹாசன் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான படம், ‘களத்தூர் கண்ணம்மா’. ஏவி.எம் தயாரித்த இந்தப் படத்தில், ஜெமினி கணேசன், சாவித்ரி, டி.எஸ்.பாலையா, எஸ்.வி.சுப்பையா, ஜாவர் சீதாராமன் என ஏகப்பட்ட நட்சத்திர பட்டாளம்.

இதன் ஸ்கிரிப்ட் ஜாவர் சீதாராமனுடையது. அவர் ‘பட்டுவும் கிட்டுவும்’ என்ற தலைப்பில் ஏவி.எம்மிடம் கொடுத்திருந்த கதைதான் பிறகு ‘களத்தூர் கண்ணம்மா’வானது.

இந்தப் படத்தை முதலில் இயக்கியது பிரகாஷ் ராவ். இவர் தமிழில், பாதாள பைரவி, அமரதீபம், சம்சாரம், உத்தமபுத்திரன் உட்பட பல படங்களை இயக்கிய தெலுங்கு இயக்குநர்.

அப்போது தொடர்ந்து ஹிட் படங்களை இயக்கியதால், இவரை வைத்து அந்தப் படத்தை தொடங்கினார்கள். படம் எட்டாயிரம் அடி வளர்ந்த நிலையில், அவருக்கும் தயாரிப்பு தரப்புக்கும் கருத்து வேறுபாடு.

சில காட்சிகளை ரீஷூட் செய்ய வேண்டும் என்று தயாரிப்பு தரப்பில் சொல்ல, அதனால் ஏற்பட்ட பிரச்னையில் படத்தில் இருந்து விலகிவிட்டார், இயக்குநர் பிரகாஷ் ராவ். பிறகு பீம்சிங் இயக்கத்தில் படத்தை முடித்தார்கள்.

1960 ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டான இந்த படம், தெலுங்கில் மவூரி அம்மாயி என்றும் மையின் சுப் ரஹூங்கி என்று இந்தியிலும் ரீமேக் ஆனது. சிங்கள மொழியிலும் இந்த படம் ரீமேக் செய்யப்பட்டது.

ஆர்.சுதர்சனம் இசையில், பாடல்கள் அனைத்தும் ஹிட். அதில் ஒன்று ஏம்.எம்.ராஜா பாடிய ‘அருகில் வந்தாள்.. உருகி நின்றாள்’.

இந்தப் பாடலை கண்ணதாசன் எழுதினார். முதலில் சில பல்லவிகளைக் கொடுத்தார். பிறகு இன்னும் சில பல்லவிகள் வேண்டும் என்று கேட்டார், படத்தை முதலில் இயக்கிய பிரகாஷ் ராவ்.

அவருக்கு தமிழில் அவ்வளவு புலமை இல்லாததால், அப்படிக் கேட்டதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து கவிஞர் கண்ணதாசன், 58 பல்லவிகளை எழுதிக் கொடுத்துவிட்டு, இதில் எது பிடித்திருக்கிறதோ, அதை வைத்துக்கொள்ளுங்கள் என்று கூறிவிட்டார், இயக்குனரிடம்.

பிறகு எதை எடுப்பது, எதை விடுவது என தெரியாமல், அதில் எட்டுப் பல்லவிகளை எடுத்து முழு பாடலாக்கிவிட்டார்கள்.

நல்ல மூடில் இருந்தால், கண்ணாதாசன் பல்லவிகளை அள்ளித்தருவார். இல்லை என்றால் ஒரு வரி கூட வராது என்பது கேள்விபட்டதுதான்!

– அலாவுதீன்