Take a fresh look at your lifestyle.

‘ஆண் பாவம்’ மனம்விட்டு சிரிக்க ஒரு படம்!

1985 – ல் வெளியாகி அதிரி புதிரி ஹிட்டடித்த ஆண் பாவம் திரைப்படம் வெளிவந்து முப்பத்தைந்து ஆண்டுகளைக் கடந்தும் இன்றும்கூட ‘என்னா படங்க அது’ என்று இளையராஜாவின் பின்னணி இசை முதற்கொண்டு அந்தத் திரைப்படத்தின் பல சிறப்பம்சங்களை நினைவுகூர்பவர்கள் உண்டு.

பாக்யராஜிடம் உதவி இயக்குநராக இருந்த பாண்டியராஜன், 1985 இல் தனது 26-வது வயதில் இயக்குநரானார்.

முதல் படம் கன்னிராசி. பிரபு, ரேவதி நடித்த அந்தப் படத்தின் கதையை பாண்டியராஜன் எழுத, பாக்யராஜிடம் உதவி இயக்குநர்களாக இருந்த ஜி.எம்.குமாரும், லிவிங்ஸ்டனும் எழுதினர். படம் 100 நாள்கள் ஓடி வெற்றி பெற்றது.

அதே வருடம் தனது கதை, திரைக்கதை, வசனம் இயக்கத்தில் ஆண் பாவம் படத்தை தொடங்கினார் பாண்டியராஜன். இதில் பாண்டியன் ஹீரோ. இரு நாயகிகள், சீதா மற்றும் ரேவதி.

இன்னொரு ஹீரோவாக பாண்டியராஜன் நடித்தார். திரையில் அவர் முதன்மைக் கதாபாத்திரம் ஏற்ற முதல் படம் இது.

படம் வெளியான நாளில், பல்லாவரத்தில் இருந்த ஒரு அரங்கில் முதற்காட்சிக்கு பாண்டியராஜன் சென்ற போது அங்கும் இங்குமாக இருபது பேர்களே இருந்திருக்கிறார்கள்.

அதைப் பார்த்து மனம் நொந்த பாண்டியராஜன், வீட்டிற்குச் சென்று தன் அம்மாவின் மடியில் படுத்து, “நான் தோத்துப் போயிட்டம்மா” என்று வாய் விட்டு கதறி அழுதிருக்கிறார்.

ஆனால் மெல்ல மெல்ல இந்தப் படத்தின் வெற்றி விவரங்கள் இவருக்குத் தெரிய ஆரம்பித்திருக்கிறது. அதே நாளில், அதே பல்லாவரம் அரங்கில், இரவுக்காட்சிக்கு படம் ‘ஹவுஸ்ஃபுல்’ ஆகியிருக்கிறது.

படத்தின் ஆரம்பமே அமர்க்களமாக இருக்கும். பெட்டி வந்துருச்சுப்பா என்ற வசனம் தொடங்கி அனைத்துக் காட்சிகளிலும் நகைச்சுவை சூறாவளி.

இந்திரன் வந்ததும் சந்திரன் வந்ததும் இந்த சினிமாதான் பாடல் 1985 – காலகட்டத்தில் சினிமாவுக்கான முக்கியத்துவத்தை விளக்கும்.

தமிழக மக்களும் சினிமாவும் எப்படி பின்னிப் பிணைந்திருக்கிறார்கள் என்பதை சுவாரஸ்யமாக விளக்கும் காட்சிகள் ‘ஆண் பாவத்தில்’ உண்டு. படத்தின் ஆரம்பமே அப்படித்தான் அமைந்திருக்கும்.

ஒட்டுமொத்த ஊரே எதற்காகவோ பரபரப்புடன் இயங்கிக் கொண்டிருக்கும். இதற்கான பில்டப் காட்சிகளை நன்றாக அமைத்திருப்பார் பாண்டியராஜன். பிறகுதான் தெரியும், அந்த ஊரில் திறக்கவிருக்கும் திரையரங்கிற்கான துவக்க விழா அது என்று.

“நான் கோயில் கட்டினேன்… யாரும் கும்பிட வரலை. பள்ளிக்கூடம் கட்டினேன்… யாரும் படிக்க வரலை. ஆனா, சினிமா தியேட்டர் கட்டினேன்… என்னைக் கொண்டாடறீங்க” என்று வசனம் பேசுவார் வி.கே.ராமசாமி.

ஆண் பாவத்தின் முதல் பிளஸ் பாயின்ட் அதன் எளிமையான கதை. சக்கரப்பட்டியைச் சேர்ந்த ராமசாமிக்கு இரண்டு மகன்கள். பெரிய பாண்டி, சின்ன பாண்டி. பெரிய பாண்டிக்கு ராமசாமி அரசம்பட்டியில் பெண் பார்க்கிறார். பெண் பிடித்துப் போகிறது.

மாப்பிள்ளையும் பெண்ணை பார்க்க வேண்டுமல்லவா. தனியாகச் செல்லும் பெரிய பாண்டி, தான் பார்க்க வேண்டிய பெண்ணிற்குப் பதில் இன்னொரு பெண்ணைப் பார்த்து விடுகிறான். பெண்ணிற்கு மாப்பிள்ளையையும், மாப்பிள்ளைக்குப் பெண்ணையும் பிடித்துப் போகிறது.

சாப்பிட உட்காரும் போதுதான், அந்தப் பெண்ணை பார்க்க வருவதாகச் சொன்ன மாப்பிள்ளை வேறு ஆள் என்பது தெரிய வருகிறது.

ஆனாலும், பெரிய பாண்டியால் தான் பார்த்த பெண்ணை மறக்க முடியவில்லை. அந்தப் பெண்ணிற்கும் அதே நிலை.

இந்தக் காதல் விவகாரம் அறிந்த ராமசாமி பார்த்த பெண் தற்கொலைக்கு முயல, தலையில் அடிபட்டு அவளுக்குக் குரல் தடைப்படுகிறது.

அவளைத்தான் பெரிய பாண்டி கட்டியாக வேண்டும் என்று ராமசாமி பிடிவாதம் பிடிக்க, தம்பி சின்ன பாண்டியின் குயுத்தியால் எப்படி பெரிய பாண்டி தனது காதலியுடன் ஒன்றிணைந்தான் என்பது கதை.

சீரியசாகத் தெரியும் இந்தக் கதையை சிரிக்கச் சிரிக்க எடுத்திருந்தார் பாண்டியராஜன்.

படத்தில் அனைவருக்கும் அவரவர் ஒரிஜினல் பெயரையே ஒட்டியிருந்தனர். ராமசாமியாக நடித்தவர் வி.கே.ராமசாமி.

பெரிய பாண்டியாக பாண்டியன், சின்ன பாண்டியாக பாண்டியராஜன். பாண்டியன் காதலிக்கும் பெண்ணாக சீதா, தற்கொலைக்கு முயன்ற பெண்ணாக ரேவதி.

இந்தப் படத்தில் சீதா அறிமுகமான போது பன்னிரெண்டாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தார். கல்யாணம் ஒன்றில் அவரைப் பார்த்து, தேடிப் போய் ஒப்பந்தம் செய்தாராம் பாண்டியராஜன்.

ரேவதியுடன் அவருக்கு காதல் காட்சிகள் இல்லை. ஆனால், கிளைமாக்ஸில் அவர்கள் இருவரும் திருமணம் செய்யப் போகிறார்கள் என்பதை சூசகமாகக் காட்டி படத்தை முடித்திருப்பார்.

படத்தில் முற்போக்கான காட்சிகளும் உண்டு. கல்யாணத்துக்கு முன்னாடி நல்ல நேரம் பார்த்து, தாம்பூலத்தட்டு மாற்றுவது குறித்து ரேவதியின் அப்பா விஸ்வநாதன் சொல்ல, அட, இதுக்கெல்லாம் என்ன கால நேரம் பார்க்கிறது.

உங்களுக்கு எதையாவது மாத்தணும் அவ்வளவுதானே என்று அவரது தோளில் இருக்கும் துண்டை எடுத்துவிட்டு தனது தோளில் கிடக்கும் துண்டைப் போட்டு விடுவார் வி.கே.ராமசாமி.

பொதுவாக நகைச்சுவை படங்களில் உணர்வுப்பூர்வமான திருப்பங்களோ, காட்சிகளே இருக்காது. இருந்தாலும் அவை படத்தின் ஸ்பீடு பிரேக்கர்களாக இருக்கும். ஆண் பாவத்தில் இவையனைத்தும் உண்டு.

தனது பாட்டியுடன் (கொல்லங்குடி கருப்பாயி) பாண்டியராஜன் அடிக்கும் லூட்டிகள் படத்திற்கு இன்னுமொரு பாயிண்ட்.

வாய்விட்டு சிரிக்கிற படங்களுக்கு மத்தியில் மனம்விட்டு சிரிக்க ஒரு படம் ஆண் பாவம்.

– நன்றி: முகநூல் பதிவு.