ராம் இயக்கத்தில், ஜியோ ஹாட்ஸ்டார் – ஜிகேஎஸ் புரொடக்ஷன் – செவன் சீஸ் & செவன் ஹில்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், சிவா, கிரேஸ் ஆண்டனி நடிப்பில் ஃபீல் குட் படமான ‘பறந்து போ’ ஜூலை 4 ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பைப் பெற்றது.
இதன் நன்றி தெரிவிக்கும் விழா சென்னையில் நடைபெற்றது. இதில் பங்கேற்றுப் பேசிய பாடலாசிரியர் மதன் கார்க்கி: “யாருக்கும் பொறாமை ஏற்படுத்தாத வெற்றியாக அமைந்திருக்கிறது. காலங்காலமாக இருந்த வழக்கங்களை இயக்குநர் ராம் உடைத்திருக்கிறார். நா.முத்துக்குமாரை இந்தத் தருணத்தில் நான் நினைவு கூறுகிறேன்.
இவ்வளவு சிரித்து படம் பார்க்கும்போது ஏன் எல்லாரையும் அழ வைக்கும்படியாகவே சமீபகாலங்களில் அதிக படங்கள் வருகிறது என என் மகன் கேட்டார்.
ஓடிடியில் மட்டுமே இந்தப் படம் முதலில் ரிலீஸ் ஆவதாக இருந்தது. ஆனால், பிறகு தியேட்டரில் படம் ரிலீஸ் என்று முடிவெடுத்தபோது மகிழ்ச்சியாக இருந்தது” என்றார்.
நடிகர் சிவா: “அவருடைய உதவி இயக்குநர் ஒருவர் பெயரைத்தான் இந்தப் படத்தில் எனது கதாபாத்திரற்கு பெயராக வைத்தார் இயக்குநர் ராம். இவரது படம் பார்த்து ஒருவன் திருந்துகிறான் என்றால் அதுதான் பெரிய விஷயம்.
வருடத்திற்கு ஒருமுறையாவது இதுபோன்ற ஜாலியான படங்களை ராம் சார் இயக்க வேண்டும் என்பதுதான் கோரிக்கை. படத்திற்காக மலை ஏறியது, வெயிலில் அலைந்தது இதை எல்லாம் தாண்டி மக்கள் நீங்கள் ரசித்து பார்த்ததுதான் மகிழ்ச்சி” என்றார்.
இயக்குநர் ராம்: “நிறைவான மகிழ்ச்சியான பயணமாக இந்தப் படம் அமைந்துள்ளது. படம் வெற்றி பெறும் என நம்பிக்கை வைத்த மீடியா நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கு நன்றி. இந்தப் படம் திரைக்கு வரவேண்டும் என்பதில் என்னைவிட என் உதவி இயக்குநர்கள்தான் ஆர்வமாக இருந்தார்கள்.
சினிமா என்பது கணிக்க முடியாத கேம். படத்தின் புரோமோஷன் பணிகள் மூலம் ‘பறந்து போ’ என்று ஒரு படம் வெளியாக இருக்கிறது என்ற விஷயம் பலருக்கும் தெரிய வந்தது.
சமகால தலைமுறையினருடன் இந்தப் படம் மூலம் தொடர்புகொள்ள முடிந்தது என்பது மகிழ்ச்சி. நிறைய குழந்தைகளை என் வீட்டிற்கு அழைத்து வந்து அவர்கள் உலகத்தை எனக்கு அறிமுகப்படுத்திய எனது மகனுக்கும் என் மனைவி, மகளுக்கும் நன்றி” என்றார்.

