Take a fresh look at your lifestyle.

மிர்ச்சி சிவா – இயக்குநர் ராமின் ‘பறந்து போ’!

131

திரைத்துறை குறித்த சில தகவல்கள் கேள்விப்பட்டவுடனேயே ஆச்சர்யத்தைக் கொட்டுவதாக அமையும். அந்த வரிசையில் இருந்தது, மிர்ச்சி சிவா – இயக்குநர் ராம் கூட்டணியில் ஒரு படம் உருவாவதென்பது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் திரையாளுமை சித்ரா லட்சுமணனுக்கு அளித்த யூடியூப் பேட்டியொன்றில் மேற்படி தகவலைப் பகிர்ந்திருந்தார் மிர்ச்சி சிவா.

இருவரது கூட்டணியில் படம் உருவாகி வருவதாக அவர் சொன்னாலும், அது குறித்த மேலதிகத் தகவல்கள் ஏதும் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை.

அவ்வப்போது சில தினசரிகளில், இதழ்களில், அவற்றின் இணையதளங்களில் லேசுபாசாகச் சில செய்திகள் வருவதாகவே இருந்தன.

அப்படத்தின் பெயர் ‘பறந்து போ’ என்று குறிப்பிட்டன சில செய்தி நிறுவனங்கள். அதன்பிறகு அப்பேச்சு அப்படியே அடங்கிப் போனது.

இந்த நிலையில், சமீபத்தில் ‘பறந்து போ’ படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டது. வரும் ஜூலை 4 அன்று வெளியாவதாகச் சொல்லப்பட்டது.

அதன்பின் 7 வாரங்கள் கழித்து வரும் ஆகஸ்ட் 8 அன்று இப்படம் ஜியோ ஹாட் ஸ்டார் தளத்தில் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இரு வேறு திசைகளில்..!

‘பங்கமா கலாய்ச்சுட்டான்’ என்று சொல்கிற வகையில் கேலி, கிண்டல்களை அவிழ்த்துவிடுவது ஒரு சிலரின் வழக்கம்.

அதில் மனதை நோக வைக்கும் அளவுக்கு வன்மத்தைக் கொட்டுவது, ‘பஞ்ச்’ வைத்தாற் போலப் பேசுவது, மயிலிறகால் வருடுவது போன்று கிண்டலடிப்பது என்று அவற்றை பல வகைகளாகப் பிரிக்கலாம்.

இன்னும் சிலர் கிண்டலடித்தது புரிந்து நாம் சுதாரிப்பதற்குள், அதனைச் சொன்னவர் பஸ் ஏறி வீட்டிற்குச் சென்றிருப்பார். கிட்டத்தட்ட அந்த வகையறாவில் அடங்குபவர் மிர்ச்சி சிவா.

போலவே, சீரியசான வசனங்களும் கூட அவர் ‘சீரியசாக’ பேசும்போது நமக்கு ‘காமெடி’யாக தெரியும். அதுவே இன்று வரை அவரது பலமாகவும் பலவீனமாகவும் இருந்து வருகிறது.

சென்னை 600028 முதல் சமீபத்தில் சுமோ வரை அனைத்து படங்களையும் இந்த வகைப்பாட்டுக்குள் அடக்கலாம்.

இதிலிருந்து விலகி அவர் நடித்த படங்கள் மிக அரிதானவை. அவை பெரிதாகக் கவனிக்கப்பட்டதாகத் தெரியவில்லை.

இந்தச் சூழலில்தான், இயக்குநர் ராம் திரையில் மிர்ச்சி சிவாவை எப்படிக் காண்பித்திருப்பார் என்ற கேள்வி எழுகிறது.

அதேநேரத்தில், இவ்வளவு நம்பிக்கையோடு இருவரும் இணைகின்றனர் என்றால் வணிகக் கணக்குகளை மீறிக் கதை மீது அவர்கள் கொண்டிருக்கிற பிடிப்பும் நம் கவனத்தைக் கவர்கிறது.

மனதைத் தொடுமா?

‘கற்றது தமிழ்’ படத்தில் இயல்பான மனிதர்கள் தெறித்தோடுகிற வகையிலான காட்சிகள், வசனங்களைப் புகுத்தியவர் இயக்குநர் ராம். ஆனாலும், அவற்றில் பல வெட்டியெறியப்பட்டு கதை வடிவம் கெடாதபடி படம் உருவாக்கப்பட்டது.

ஆனால், அடுத்த படமான ‘தங்க மீன்கள்’ உருவாக்கியபோது தனக்கான ரசிகர்களைத் தக்க வைப்பது எப்படி என்ற வித்தையை நன்கு செயல்படுத்தினார் ராம். தொடர்ந்து தரமணி, பேரன்பு படங்களைத் தந்தார்.

அந்த நான்கு படங்களுமே ஒரு இயக்குநராகத் தனித்துவத்தோடு அவரை அறியச் செய்பவை. அந்த வரிசையில், பல்வேறு சர்வதேச பட விழாக்களில் கலந்துகொண்டு விருதுகளைப் பெற்று வரும் ‘ஏழு கடல் ஏழு மலை’யும் சேரக்கூடும்.

அது நிச்சயம் சுவாரஸ்யமான கதையம்சத்தோடு ரசிகர்களை ஈர்க்கும் என்கிற நம்பிக்கையைத் தந்தது அதன் ட்ரெய்லர்.

அதனையடுத்து உருவாக்கப்பட்ட ‘பறந்து போ’ இப்போது தியேட்டர்களை அடையத் தயாராகி வருகிறது.

பெரிதாகப் பொருளாதார வசதியில்லாத ஒரு தந்தை தனது மகனுடன் மேற்கொள்கிற பயணத்தையும், வழியில் அவர்கள் எதிர்கொள்கிற அனுபவங்களையும் இப்படம் தாங்கி நிற்பதாகச் சொல்லப்படுகிறது.

‘பயணம்’ என்பதனை அடிப்படையாகக் கொண்டு உருவாகிற படங்களுக்கென்றே மேற்கத்திய சினிமா தனி வகைமை பிரித்திருக்கிறது.

அதில் ரொமான்ஸ், ட்ராமா, த்ரில்லர், ஆக்‌ஷன், ஹாரர் என்று பல வகைமைகள் குறிப்பிட்ட விகிதத்தில் கலக்கிற கதைகளும் உண்டு.

‘பறந்து போ’ நிச்சயம் ட்ராமாவாக இருக்குமென்ற அபிப்ராயம் பலமாக உள்ளது.

ஏனென்றால், ராமின் முந்தைய படங்களில் அந்த அம்சமே மேலோங்கி நிற்கும்.

கடந்த ஜனவரி மாதம் ராட்டர்டாம் சர்வதேசத் திரைப்பட விழாவில் ‘பறந்து போ’ திரையிடப்பட்டு, அதன் பின் நடந்த விவாதத்தின்போது இயக்குநர் ராம் உடன் மிர்ச்சி சிவா, குழந்தை நட்சத்திரம் மிதுல் ரையான்.

இசையமைப்பாளர் சந்தோஷ் தயாநிதி, டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரை சார்ந்த பிரதீப் மில்ராய் உள்ளிட்ட படக்குழுவினர் பங்கேற்றிருந்தனர்.

இந்தப் படத்தில் மலையாள நடிகை கிரேஸ் ஆண்டனி நடித்திருக்கிறார். டைட்டிலில் சிவா பெயருடன் இவரது பெயரும் இடம்பெற்றுள்ளது. இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா பின்னணி இசை அமைத்திருக்கிறார்.

ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத இரு வேறு திசைகளில் இயங்குகிற திரையாளுமைகள் ஒன்றிணையும்போது, ‘இந்தப் படம் நல்லாயிருக்குமா, இருக்காதா’ என்ற கேள்வி மட்டுமே ரசிகர்களிடத்தில் எழும்.

அவ்வாறு வந்த சில படங்கள் ரசிகர்களின் எதிர்பார்ப்பினை மீறி ஆச்சர்யப்படுத்தியிருக்கின்றன. அவற்றில் ஒன்றாக அமையுமா? மிர்ச்சி சிவா – இயக்குநர் ராம் கூட்டணி தருகிற ‘பறந்து போ’ நம் மனதைத் தொடுமா..?!

– மாபா