1978-ஆம் ஆண்டு ராதிகாவின் 16-ஆவது வயதில் இயக்குநர் பாரதிராஜா அவரை ‘கிழக்கே போகும் ரயில்’ படத்தில் அறிமுகம் செய்தார்.
தொடர்ந்து, இனிக்கும் இளமை, நிறம் மாறாத பூக்கள், அன்பே சங்கீதா, எங்க ஊரு ராசாத்தி, சின்னஞ்சிறு கிளியே, பாமா ருக்மணி, தைப்பொங்கல், குமரிப்பெண்ணின் உள்ளத்திலே, இன்று போய் நாளை வா, போக்கிரி ராஜா, ரங்கா, மூன்று முகம் போன்ற பல படங்களில் நடித்தார்.
கே.பாக்கியராஜ், ரஜனிகாந்த், விஜயகாந்த் போன்ற முன்னணி நாயகர்களுடன் இணைந்து நடித்த பல படங்கள் இவருக்கு வெற்றிப்படங்களாக அமைந்தன.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என்று நூற்றுக்கணக்கான திரைப்படங்களுக்கு மேல் முன்னணி ஹீரோக்களுடன் நாயகியாக நடித்து அசைக்க முடியாத அந்தஸ்திற்கு பின்னர் நகர்ந்தார்.
அது மட்டுமல்லாமல், ஆறு முறை பிலிம்போ் விருது, மூன்று முறை மாநில அரசின் விருது, இரண்டு முறை நந்தி விருது, தேசிய விருது ஆகிய அங்கீகாரங்களைப் பெறுமளவிற்கு உயர்ந்தார்.
வெள்ளித்திரையிலும் சின்னத்திரையிலும் இன்றும் வெற்றிகரமாக கோலோச்சிக் கொண்டிருக்கும் நடிகை ராதிகா வார இதழ் ஒன்றிற்கு அளித்த பேட்டியிலிருந்து ஒரு பகுதி:
தொடக்கம் முதலே உங்களுக்கு நகைச்சுவை நடிப்பும் சிறப்பாக வந்திருக்கிறது. ஆனால், ஆதை நீங்கள் தமிழில் முழுமையாக முயன்று பார்க்கவில்லையோ எனத் தோன்றுகிறது?
தெலுங்குல அந்த மாதிரியான படங்கள் நிறைய அமைஞ்சது. அங்கே அதைக் கெட்டியா பிடிச்சுகிட்டேன். தொடர்ந்து நடிச்சேன்னுகூடச் சொல்லலாம். தமிழ்ல அந்தமாதிரி அமையல.
இங்கே இயக்குநர் கதை சொல்ல அமரும்போது, ‘எதுக்குங்க இவ்ளோ அழ வைக்கிற மாதிரி கேரக்டர்’ன்னு கேட்டிருக்கேன். உண்மையச் சொல்லனும்னா காமெடி காதாபாத்திரம்தான் ரொம்ப கடினமான விஷயம். ஆனால், எனக்கு ரொம்ப இஷ்டம்.
42 வருட திரைப்பயணத்தில், நடிப்பில் உங்களை வியக்கவைத்த கதாநாயகன் யார்?
‘ஷோலே’ இந்திப் படம் ரிலீஸ் ஆகியிருந்த நேரம். சத்யம் தியேட்டர்ல அடிச்சுப் பிடிச்சு வரிசையில நின்னேன்.
அடுத்த டிக்கெட் எனக்குத்தான் நினைக்கும்போது கவுண்டர்ல ஹவுஸ்ஃபுல் போர்டு மாட்டினால் மனசுக்கு எப்படி இருக்கும்? அந்த அளவுக்கு அமிதாப் பச்சன்னா உயிர்.
அப்படிப்பட்ட ரசிகையான நான், பின்னாளில் அவரோட ‘ஆஜ் கா அர்ஜுன்’ (aaj ka arjun) இந்திப் படத்துல நடிச்சேன்.
இப்பவும் என்னிடம் யாராவது, ‘நீங்க யார் மாதிரி ஆகணும்னு ஆசை?’ன்னு கேட்கும்போது அமிதாப் பெயரைத்தான் சொல்கிறேன்.
ஒரு சிறந்த நடிகர்; நான் அவரது ரசிகைங்கிறது எல்லாத்தையும் கடந்து, அவரோட அணுகுமுறை, பழகுற விதம், பேச்சு, இயல்பு, எளிமைன்னு எல்லாத்தையுமே வியப்பாத்தான் பார்க்கிறேன்.
உங்களது முதல் படம் கிராமிய மூடநம்பிக்கைகளைச் சாடியது. தன் வாழ்நாள் முழுக்க மூட நம்பிக்கைகளை எதிர்த்த ‘நடிகவேள்’ எம்.ஆர்.ராதாவின் மகள் என்ற முறையில், இது அப்போது உங்களுக்கு மகிழ்ச்சி அளித்ததா? அல்லது அந்த அளவுக்கு உங்களுக்கு விவரம் போதாதா?
‘கிழக்கே போகும் ரயில்’ படம் அமைந்த நேரத்துல எனக்கு நடிப்புன்னா என்னன்னே தெரியாது. அறியாப் பருவம்.
முதல்முறையா பாவாடை, தாவணியில, செருப்புக்கூட அணியாமல் படப்பிடிப்புல இருந்தேன். பரதநாட்டியம் தெரியாது. சின்ன வயசுல அதைக் கத்துக்கப்போனப்போ முட்டியில அடிச்சாங்கன்னு வீட்டுக்கு ஓடி வந்துட்டேன்.
அறிமுகப்படம் ஒரு கதையா ரொம்பப் புதுசா தெரிஞ்சுதே தவிர, அதுல என்ன கருத்து இருக்குன்னு அப்போ தெரியல.
படம் வெளிவந்ததும், அப்பா பார்த்துட்டு ஏதோ கமெண்ட் சொன்னார். அதுவும் என்ன சொன்னார்னு நினைவுக்கு எட்டல.
பிறகு நாட்கள் ஓட ஓட; நிறையப் படங்கள் நடிக்க நடிக்க கதாபாத்திரத்தையும் அது தரப்போற உணர்வையும் உணரத் தொடங்கினேன். இதுதான் நிஜம்.
ஒவ்வொரு கலைஞருக்கும் ஏதோ ஓர் ஆற்றல் ஊக்கியாக அமையும். உங்களது அப்பாதானே உங்களுக்கு ஊக்கம் தந்தவர்?
தொடக்கத்துல இருந்தே என்னோட அம்மா, ‘உனக்குன்னு ஒருதனிப்பட்ட பார்வை வச்சிக்கோ; எதுலயும் ஒரு குறிக்கோள் வேணும்!’னு சொல்லிக்கிட்டே இருப்பாங்க. ஆனா, அப்பா நடிகவேள் சொல்ற ஒரே வார்த்தை, ‘எங்கேயும் தாமதமா போகக் கூடாது!’ என்பது மட்டும்தான்.
எம்.ஆர்.ராதா மகள்னு யாருக்கும் தெரியாமலேயே நடிக்க வந்தவள் நான். ஒரு கட்டத்துல அவரோட பொண்ணுன்னு தெரிஞ்சிகிட்ட இயக்குநர் இமயம் பாரதிராஜா, ‘என்னப்பா இதை யாருமே சொல்லலையே?’ன்னு அப்பாவை நேர்ல பார்க்கப் போய்விட்டார்.
என்னை நடிக்க வைக்கிற விஷயத்தைச் சொன்னப்போ, அப்பாவும் சந்தேகப்பட்டு நக்கலாகச் சிரித்திருக்கிறார்.
எனது அறிமுகப் படத்தோட படப்பிடிப்புத் தளத்துக்கு அப்பா திடீர்னு வந்தப்போ நான் மேக்கப் போட்டுக்கொண்டிருந்தேன்.
என் அருகே வந்து நெற்றியில் பொட்டு வைத்து, ‘என் தொழில் உனக்கு இருக்கட்டும்!’னு ஒரு வார்த்தை சொன்னார்.
அப்பா சொன்ன அந்த வார்த்தைகள்தான் நான் இத்தனை ஆண்டுகள் ஓடிக்கொண்டிருக்க சக்தி தந்ததுன்னு நம்புறேன்.
– நன்றி: இந்து தமிழ் திசை நாளிதழ்