Take a fresh look at your lifestyle.

தாயே எந்தன் மகளாய் மாற…!

கவிஞர் சினேகன் நெகிழ்ச்சி

கவிஞரும் திரைப்படப் பாடலாசிரியருமான சினேகன் 1997-ல், தமிழ் சினிமாவில் ‘புத்தம் புது பூவே’ என்ற படத்தில் முதல் பாடலை எழுதினார். பின்னர் 2001இல் வெளியான ‘பாண்டவர் பூமி’ படத்தில் சினேகன் எழுதிய பாடல்கள் “அவரவர் வாழ்க்கையில்”, “தோழா தோழா” ஆகிய பாடல்கள் மிகவும் பிரபலமானது.

அதனைத் தொடர்ந்து ‘மௌனம் பேசியதே’ படத்தில் “ஆடாத ஆட்டமெல்லாம்”, ‘சாமி’ படத்தில் “கல்யாணம் தான் கட்டிகிட்டு”, ‘ஆட்டோகிராஃப்’ படத்தில் “ஞாபகம் வருதே” உள்ளிட்ட பாடல்களையும் ‘ராம்’ படத்தில் “ஆராரிராரோ”, ‘ஆடுகளம்’ படத்தில் “யாத்தே” உள்ளிட்ட பல ஹிட் பாடல்களையும் எழுதியுள்ளார்.

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் முதல் சீசனில் சினேகன் பங்கேற்று பிரபலமடைந்தார். அதனைத் தொடர்ந்து கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் தொடங்கிய போது அக்கட்சியில் இணைந்து தேர்தலில் போட்டியிட்டார்.

2019ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் சிவகங்கை தொகுதி, கடந்த 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் சென்னை, விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டார். இதற்கிடையில் காதலியான கன்னிகாவை 2021ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் சினேகன் – கன்னிகா ஜோடிக்கு இரட்டை பெண் குழந்தைகள் பிறந்துள்ளது. இதனை தம்பதிகளாக தங்களது சமூக வலைதளப் பக்கத்தில் அறிவித்துள்ளனர்.

சினேகன் வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவில்,

இறைவா நீ ஆணையிடு
தாயே எந்தன்
மகளாய் மாற”

– என்ற எனது அன்பின் கோரிக்கை இரட்டிப்பாய் நிறைவேறியது…

தாயே எந்தன் மகளாகவும் ..
மகளே எந்தன் தாயாகவும் …
இரு தேவதைகள் 25.01.2025 அன்று பிறந்திருக்கிறார்கள்…

இதயமும், மனமும்
மகிழ்ச்சியில் நெகிழ்ந்து
நிரம்பி வழிகிறது…

உங்களின் தூய அன்பினால்
எங்கள் வாரிசுகளை
வாழ்த்துங்கள்

-என கூறியுள்ளார்.