பிரேசில் நாட்டில் ஒரு புதுமாதிரி ஆய்வை நடத்தியிருக்கிறார்கள். இசை மூலம் புற்றுநோயை சரிப்படுத்த முடியுமா என்பது குறித்த ஆய்வு அது.
அந்த ஆய்வில், மேல்நாட்டு இசை மேதை பீத்தோவனின் ஐந்தாவது எண் சிம்பொனியை இசைத்தபோது புற்றுநோய் செல்கள் 20 விழுக்காடு அழிந்து போனதை ஆய்வாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள்.
அதுவும் வெகுசில நாள்களிலேயே பீத்தோவனின் ஐந்தாம் எண் சிம்பொனி இசைத்தொகுப்பு 20 விழுக்காடு புற்றுநோய் செல்களை இல்லாமல் ஆக்கியிருக்கிறது.

அதேவேளையில் மற்றொரு மாபெரும் இசைமேதை மொஸார்ட்டின் டி மேஜரில் இரு பியானோக்களுக்கான சொனாட்டா இசை,
எதிர்பார்த்த அளவுக்கு எந்த விளைவையும் ஏற்படுத்தவில்லை என்பதையும் ஆய்வாளர்கள் கவனித்திருக்கிறார்கள்.
பீத்தோவனின் 5ஆம் எண் சிம்பொனிக்கு மட்டும் அப்படி என்ன சிறப்பு?
அந்த சிம்பொனியின் தாளம், அதிர்வெண், மும்முரமான முனைப்பு,
செறிவு இவைதான் புற்றுநோய் செல்கள் அழிந்ததற்கு காரணமாக இருக்கலாம் என ஆய்வறிஞர்கள் கருதுகிறார்கள்.
இதேப்போல பிரேசில் நாட்டின் சம்பா இசையைப் பயன்படுத்தி புற்றுநோயை சரிப்படுத்த முடியுமா என்பது பற்றியும் ஆய்வு நடைபெற உள்ளதாம்.
மேல்நாடுகளில் புதிதாக பியானோ பழகுபவர்கள் அந்த பியானோ மீது இசைமேதை யாராவது ஒருவருடைய சிறிய அளவு மார்பளவு சிலையை வைத்துக் கொள்வது வழக்கம்.
அப்படி, ‘யாருடைய சிலையை வைக்கலாம்?’ என யாராவது ஒருவர் நண்பர்களிடம் கேட்டால், அவர்கள், ‘பீத்தோவனின் சிலையை வை. அவருக்குத்தான் காது கேட்காது’ என்று கிண்டல் செய்வார்கள்.
செவித்திறன் அற்றுப்போன ஓர் இசை மாமேதையின் தேனமுத இசை, புற்றுநோய் செல்களை அழிக்கிறது என்றால் அந்த இசைக்குரியவரின் ஆற்றல்தான் என்ன?
எனக்கு இது வியப்பாக இருக்கிறது. உங்களுக்கு?
நன்றி: மோகன ரூபன் முகநூல் பதிவு.