அறிமுக இயக்குநர் உதய். K இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அஃகேனம்’ திரைப்படத்தில் அருண் பாண்டியன், கீர்த்தி பாண்டியன், சீதா, ஷிவ் பிங்க், ஆதித்யா, ரமேஷ் திலக், பிரவீண் ராஜா, கல்கி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
விக்னேஷ் கோவிந்தராஜன் ஒலிப்பதிவு செய்திருக்கும் இந்தத் திரைப்படத்திற்கு பரத் வீரராகவன் இசையமைத்திருக்கிறார்.
தேவத்யன் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்ள, ராஜா கலை இயக்குநராக பணியாற்றியிருக்கிறார். அதிரடித் திரில்லராக உருவாகி இருக்கும் இந்தப் படம் ஜூலை நான்காம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்த திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதற்காக சென்னையில் நடைபெற்ற பிரத்யேக விழாவில் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
விழாவில் பேசிய நடிகை கீர்த்தி பாண்டியன்:
இயக்குநர் உதய் ஏற்கனவே இயக்கியிருந்த ‘யாக்கை திரி’ எனும் குறும்படத்தினை என்னிடம் காண்பித்தார். அந்தக் குறும்படத்தை அவர் இயக்கியிருந்த விதம், அதன் தொழில்நுட்பத் தரம் எல்லாமே சிறப்பானதாக இருந்தது. அதை பார்த்தவுடன் அவருடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என நினைத்தேன்.
இந்த நேரத்தில் எனக்குள் ஒரு கேள்வி. இதற்கு நம்மால் என்ன செய்ய முடியும்? என மனதில் கேள்வி எழுந்துக் கொண்டிருக்கும். இதற்கு எனக்குக் கிடைத்த ஒரே பதில். எனக்குத் தெரிந்த கலை மூலம், இதற்காக என்ன செய்ய முடியும் என்பது தான்.
கொஞ்சம் பொறுப்புணர்வுடன் இருக்க வேண்டும். நான் தேர்ந்தெடுக்கும் கதைகளாக இருந்தாலும் சரி, தேர்ந்தெடுக்கும் கதாபாத்திரங்களாக இருந்தாலும் சரி பொறுப்புணர்வுடன் இருக்க வேண்டும் என நினைக்கிறேன்.
இந்தப் படம் பெண்களை மையப்படுத்திய படமல்ல. இதில் சில கேரக்டர்களுக்கு சில விசயங்கள் நடக்கிறது. அந்தச் சூழலை அந்தக் கதாபாத்திரம் எப்படி எதிர்கொள்கிறது? எப்படிக் கடந்து செல்கிறார்கள்? என்பதைத்தான் சொல்லியிருக்கிறோம்.
இந்தப் படத்தில் வித்தியாசமான ஒலிகளும், ஓசைகளும் இருக்கிறது. இதற்காக இசையமைப்பாளர் பரத் வீரராகவன் பெரு முயற்சி எடுத்திருக்கிறார்.
‘அஃகேனம்’ படத்தில் இந்திரா எனும் வேடத்தில் ஒரு கேப் டிரைவராக நடித்திருக்கிறேன். எனக்கு டிரைவிங் மிகவும் பிடிக்கும். நடிக்க வந்திருக்காவிட்டால் ஒரு கார் பந்தய வீராங்கனை ஆகியிருப்பேன்” என்றார்.
