Take a fresh look at your lifestyle.

தேசிங்குராஜா 2 – இயக்குனர் எழில் எங்கே?!

‘நல்லாயிருக்கு.. நல்லாயில்ல..’ என்ற விருப்பு வெறுப்புகளைத் தாண்டி, சில திரைப்படங்கள் நம்மை ‘சோதனைக்கு’ உள்ளாக்கும். ‘ஆளில்லாத தியேட்டரில் படுபயங்கரமான ஹாரர் படத்தைப் பார்த்து முடித்தால் பரிசு தருவதாகச் சொல்லப்பட்டதுண்டு’ என்று சிலர் ‘பிளாஷ்பேக்’ பகிர்வார்களே, கிட்டத்தட்ட அதற்கிணையான திரையனுபவத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

சரி, இயக்குனர் எழில் – நாயகன் விமல் கூட்டணி தந்த ‘தேசிங்குராஜா’ எனும் அசத்தலான ‘ரொமான்ஸ் காமெடி’யின் இரண்டாம் பாகம் பற்றிய விமர்சனத்தில் மேற்சொன்னதை ஏன் குறிப்பிட வேண்டும்? இந்தக் கேள்விக்கான பதிலை அப்படமே தருகிறது.

‘தே.ரா.2’ கதை என்ன?

“ரெண்டு இன்ஸ்பெக்டருங்க. அதுல ஒண்ணு பொம்பளை. ஒருத்தரை கண்டாலே இன்னொருத்தருக்கு ஆகாதுங்கற அளவுக்கு ரெண்டு பேருக்கும் சண்டை. இதுல ஒரு ரவுடியோட வெட்டப்பட்ட தலையை எதிரி இன்ஸ்பெக்டர் எடுத்து மறைச்சு வச்சிருக்கறதா, அந்த லேடி இன்ஸ்பெக்டர் நினைக்குறாங்க.

இதுக்கு நடுவுல, அந்த ஆம்பளை இன்ஸ்பெக்டரு காலேஜ் டைம்ல லவ் பண்ண பொண்ணு அவருக்கே மேலதிகாரியா வர்றாங்க. ‘கான்ஸ்டபிளாவே வேலைக்கு எடுக்க முடியாத அளவுக்கு இருந்த நீ எப்படி ஐபிஎஸ் பாஸ் பண்ண’ என்று அவரிடமே நேரடியா கேட்குறாரு இன்ஸ்பெக்டர்.

 இப்படி கேள்வி கேட்டாலும், சுத்தமா அந்தாளை அந்த ஐபிஎஸ் ஆபிசருக்கு பிடிக்கலைன்னாலும், ‘என் மகனுக்கு பாதுகாப்பு கொடுக்கத் தனிப்படை அமைங்க’ன்னு ஒரு அமைச்சர் கேட்கறப்போ, அதே இன்ஸ்பெக்டர் பேரைத்தான் அவங்க ரெகமண்ட் பண்றாங்க.

அந்த இன்ஸ்பெக்டரும் மேலதிகாரியும் சேர்ந்து அமைச்சர் மகனுக்கு பாதுகாப்பு கொடுக்கறாங்க. அதையும் மீறி ஒரு ரவுடி அவரை கொன்னுடுறான்.

அந்த ரவுடி வேற யாருமில்ல. நம்ம இன்ஸ்பெக்டரோடவும் லேடி ஆபிசரோடவும் காலேஜ்ல ஒண்ணா படிச்சவன் தான்.. அதுக்கு பின்னால ஒரு பிளாஷ்பேக் இருக்கு. ஆனா நாம அதை உடனே ஸ்கிரீன்ல காமிக்கப் போறதில்ல..

‘ஏன்ன, அதுல ஒரு ட்விஸ்ட் இருக்கு..’

என்ன, பாதிக் கதையைக் கேட்டவுடன் தலை சுற்றுவதாகத் தோன்றுகிறதா? கிட்டத்தட்ட அதே தொனியில்தான் திரையில் காட்சிகளும் நகர்கின்றன. மேற்சொன்ன கதையில் இருக்கிற அளவுக்குக் கூடக் காட்சிகள் கோர்வையாக இல்லை என்ற உண்மை பிடிபடுகிற இடம், நம் வருத்தத்தின் தொடக்கப்புள்ளி.

படத்தில் அதுபோன்ற வருத்தங்கள் மட்டுமே கிடைக்கும் என்று தெரிந்தபிறகு, இருக்கையில் சரிந்து தூங்கக் கூட மனம் வர மாட்டேன் என்கிறது.

மிகப்பெரிய மோசடி..!

கிட்டத்தட்ட வடிவேலு காமெடி பாணியில் ‘தேசிங்குராஜா 2’வை நோக்கினால் சேதாரம் குறைவாக இருக்கும்.

ஒரு பெண் பைக்கை ஓட்டிவர, அவரை சாம்ஸும் வையாபுரியும் மறித்து விசாரிப்பதே முதல் காட்சி. அதன் முடிவில், அவரிடம் இருந்து ஒரு நபர் நகையைப் பறிப்பார். அந்த நபர்தான் நாயகன் விமல். அந்தக் காட்சி முடிந்த விதமே, ‘இப்பவே கண்ணை கட்டுதே’ என்றெண்ண வைக்கும்.

அதன்பிறகு, சக போலீசாரோடு சேர்ந்து காவல்நிலையத்தை முற்றுகையிடுகிற மக்களிடம் ‘கலாய்த்தல்’ பாணியில் வார்த்தை விளையாட்டில் ஈடுபடுவார் விமல்’. அதில் நிறைந்திருக்கும் சத்தத்தை எதிர்கொள்ளும்போதது ‘என்ன தம்பி என்னாச்சு..’ என்றே ‘மைண்ட்வாய்ஸ்’ இருக்கும்.

‘சேட்டு வீட்டுல இப்படித்தான் ட்ரெஸ் பண்ணுவாங்க’ என்று ஷெர்வானி ஆடையில் ஒரு பெண்ணோடு குத்து டான்ஸ் ஆடுவார் நாயகன். கிட்டத்தட்ட ‘மாயி’ படத்தில் வரும் ‘மாமனுக்கு எப்போ கஞ்சி ஊத்தப்போற’ என்று வடிவேலு கேட்பது போலவே அக்காட்சி நம் மனதில் எதிரொலிக்கும்.

சரி, நாயகி உடன் நாயகனுக்குக் காதல் டூயட் பாடலாவது இருக்கும் என்று எதிர்பார்ப்போடு திரையை நோக்கத் தொடங்கினால், அடுத்தடுத்த காட்சிகள் ‘டீ இன்னும் வரல..’ எனும் ரேஞ்சில் இருக்கும். ஒவ்வொரு காட்சியின் முடிவிலும் ‘வட போச்சே’ என்று வருத்தம் காத்திருக்கும்.

தொடர்ச்சியாக எல்லா காட்சிகளும் இப்படி ஏமாற்றத்தைத் தருகிறபோது, ‘ஏய்.. என்னை வச்சு காமெடி கீமெடி பண்ணலையே’ என்று படக்குழுவைப் பார்த்துப் புலம்ப வேண்டியிருக்கும்.

ஒருகட்டத்திற்குப் பிறகு ‘மாப்பு.. வச்சுட்டாண்டா ஆப்பு..’ என்று கதறும் அளவுக்குக் காட்சிகள் திரையில் ஓடும்.

மேற்கண்ட காட்சியனுபவத்திற்காக ‘தேசிங்குராஜா 2’ படக்குழுவை மட்டும் நாம் குறை சொல்ல முடியாது.

டீசர், ட்ரெய்லர், ஸ்னீக்பீக் என்று தொடர்ச்சியாக வீடியோக்களை வெளியிட்டபிறகும் ‘யோவ்.. நானும் ரவுடிதான்யா..’ என்று ‘வாண்டெட்’டாக தியேட்டருக்குள் நுழைந்த நம் புத்தியைத்தான் குறை சொல்ல வேண்டும்.

‘என் ஆசையை நிறைவேற்று’ என்பது போன்ற டைட்டிலுடன் சில ‘பி’ கிரேடு படங்கள் பார்த்த அனுபவம் சிலருக்கு பள்ளி, கல்லூரிக் காலத்தில் கிடைத்திருக்கும்.

நடிகர் நடிகையர் ஒருபக்கம் இருக்க, படத்தின் ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, இசை என்று ஒவ்வொரு தொழில்நுட்ப அம்சமும் தனி வழியில் பயணிக்கும். ‘ஆச்சர்யங்களை’ அன்லிமிடெட்டாக தந்த கதையம்சம், காட்சியமைப்பு கொண்ட படங்கள் சிலவும் அந்தப் பட்டியலில் உண்டு.

ஆனால், அவற்றில் பெரும்பாலானவை ‘குறிப்பிட்ட சில காட்சிகளுக்காக இதையெல்லாம் பார்க்க வேண்டியிருக்குதே..’ என்று எரிச்சலூட்டுவதாக இருக்கும்.

‘அந்த படங்களே பரவாயில்லை’ எனும் அனுபவத்தைச் சில ‘மெய்ன்ஸ்ட்ரீம்’ திரைப்படங்கள் தந்திருக்கின்றன. ‘தேசிங்குராஜா’ எனும் சூப்பர்ஹிட் படத்தின் இரண்டாம் பாகம் என்ற பெயரில் வெளியான ‘தேசிங்குராஜா 2’ அதிலும் மோசமான திரையனுபவத்தைத் தந்திருக்கிறது.

உண்மையில், பெரிய எதிர்பார்ப்போடு தியேட்டருக்கு வந்தவர்கள் மீது நிகழ்த்தப்பட்ட மோசடி என்றும் இதனைச் சொல்லலாம்.

துள்ளாத மனமும் துள்ளும், பெண்ணின் மனதைத் தொட்டு, தேசிங்கு ராஜா, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படங்களைப் பார்த்துக் கொண்டாடியவர்கள், இந்தப் படத்தில் ‘இயக்குனர் எழில் எங்கே’ என்று தேட வேண்டியிருக்கிறது.

அவருக்கே அந்தக் கதி எனும்போது, படத்தில் நடித்தவர்கள், இதர தொழில்நுட்பக் கலைஞர்கள் பற்றித் தனியே விவரிக்கத் தேவையில்லை. அதையும் மீறி, இந்த படத்தின் இசையமைப்பாளர் வித்யாசாகர் எனும் தகவல் நம் மனதைச் சுக்குநூறாக்குகிறது.

‘தேசிங்குராஜா 2’ பார்த்தபிறகு ஏற்படுகிற மனப்புழுக்கத்தைச் சமாளிக்க முடியாமல், ‘வேற ஏதாச்சும் நல்ல படம் பார்க்கலாமா’, ‘பாதியில விட்டுட்டு வந்த வேலையை பினிஷ் பண்ணலாமா’ என்று பல யோசனைகள் மனதிற்குள் வலம் வரும்.

ஆனால், மனதை இறுகப் பிடித்து ஒருவழிக்குக் கொண்டுவந்தபிறகு ‘நெக்ஸ்ட்டு.. ரெஸ்ட்டு..’ என்பது மட்டுமே எதிரொலிக்கும்.

அப்படியொரு நிலையை அடைய விரும்புபவர்கள் மட்டும் ‘தேசிங்குராஜா 2’ பார்க்கலாம்.. அதனைக் கண்ட பிறகு மகிழ்வதென்பது அவரவர் சகிப்புத்தன்மை சார்ந்தது..!

உதயசங்கரன் பாடகலிங்கம்