Take a fresh look at your lifestyle.

உலக சினிமாவாக ‘வேள்பாரி’யை உருவாக்குவேன்!

இயக்குநர் ஷங்கர் சபதம்

சு.வெங்கடேசன் எம்.பி. எழுதிய ‘வீரயுக நாயகன் வேள்பாரி’ நாவல் ஒரு லட்சம் பிரதிகள் விற்றுள்ளது. இதனை கொண்டாடும் வகையில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் விழா ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் ஷங்கர் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

ரஜினிகாந்த் பேசியதாவது:

அனைவரும் புத்தகங்கள் படிக்கும் பழக்கத்தை ஏற்பத்திக் கொள்ளுங்கள். ஜெயகாந்தன் எனக்கு பிடித்த எழுத்தாளர். ஜாவர் சீதாராமன், சிவசங்கரி, சாண்டில்யன், கல்கி ஆகியோர் நாவல்களை படித்திருக்கிறேன். ஜெயகாந்தன் பிரமாணர்கள் குறித்த கதை எழுதினால், அங்கே தான் பிறந்தாரோ என தோன்றும். அந்த அளவுக்கு எழுதுவார்.

யாருக்காக அழுதான் புத்தகத்தை படித்து 3 நிமிடம் அவருக்காக அழுதேன். வந்தார்கள் வென்றார்கள் படித்தால் கண்களில் ரத்தம் வரும்.

கலை எந்த வடிவில் இருந்தாலும் சரி.. அதை ரசிப்பதில் தமிழ் மக்கள் மன்னர்கள். சாதி, மதம், பேதம், மொழி எதையும் பார்க்க மாட்டார்கள். தலைமேல் தூக்கி வைத்துக் கொண்டாடுவார்கள்.

ஹேட்ஸ் ஆஃப்.. உங்கள் காலில் விழுந்து வணங்குகிறேன்

தமிழ் சினிமாவில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்தவர்களில் பாரதிராஜா, மணிரத்னம் ஆகியோருக்குப் பிறகு ஷங்கர் தான். அவர் படங்களில் வெறும் பிரம்மாண்டம் மட்டும் இருக்காது. சமூக கருத்துகள் இருக்கும், தத்துவம் இருக்கும்.

ஷங்கருடன் நான் நடித்த படங்கள் மூன்றும் மிகப்பெரிய வெற்றிப் படங்கள். ‘வேள்பாரி’ உரிமை அவரிடம் தான் உள்ளது என்பது நம் அனைவருக்கும் தெரியும். அது எப்போது படமாக வரும் என்று எல்லாரையும் போலவே நானும் மிக ஆவலுடன் காத்திருக்கிறேன்.

நிறைய சொல்ல வேண்டும் என்று அறிவு சொல்லும். எப்படிப் பேசவேண்டும் என்று திறமை சொல்லும். எவ்வளவு பேச வேண்டும் என்று அரங்கம் சொல்லும். எதைப் பேச வேண்டும், பேசக் கூடாது என்று அனுபவம் சொல்லும். இதே அரங்கத்தில் எ.வ.வேலு, கலைஞர் குறித்து எழுதிய புத்தக வெளியீட்டு விழா நடந்தது.

அதில், மதிப்புக்குரிய முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட அமைச்சர்கள் பலர் கலந்துகொண்டனர். நான் யதார்த்தமாகப் பேசும்போது ‘ஓல்டு ஸ்டூடன்ட்டைச் சமாளிக்கிறது கஷ்டம்’னு பேசினேன்.

ஆனா மனசுக்குள்ள, ‘ஓல்டு ஸ்டூடன்ட்டோட அனுபவம்தான் ஒரு இயக்கத்தின் தூண். அந்த மாதிரி ஓல்டு ஸ்டூடன்ட் இல்லைன்னா, எந்த இயக்கமும் தேறாது. அவர்கள் தூண்கள் மட்டுமில்ல, சிகரம்கூட’ன்னு பேசணும்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன்.

ஆனா அரங்கத்துல இருக்குற எல்லாரும் ‘ஓல்டு ஸ்டூடன்ட்’னு சொன்னதும் சிரிச்சாங்கல்ல… அதுல நான் பேசணும்னு நினைச்சதை மறந்துட்டேன். அதனால, இப்போ வரும்போதே, `மிஸ்டர் ரஜினிகாந்த்… நல்லா பார்த்துப் பேசு. நீ பேசுற மேடை ஆனந்த விகடன், ஜூனியர் விகடன் மேடை… பார்த்துக்கோ… எல்லாரும் உன் ரசிகர்கள் இல்லைனு’ யோசிச்சுக்கிட்டே பேசுறேன்” என்று ரஜினிகாந்த் பேசினார்.

ஷங்கர் சபதம்

விழாவில் இயக்குநர் ஷங்கர் பேசியதாவது :

‘முன்னர் எனது கனவு படமாக எந்திரன் இருந்தது- நான் நினைத்த மாதிரியே அதனை எடுத்து முடித்தேன் –இப்போது எனது கனவு படம் ‘வேள்பாரி’.

பெரும் சாதனை படைத்த ‘கேம் ஆஃப் த்ரோன் – அவதார் ஆகிய படங்களுக்கு நிகராக – உலகத் தரத்தில் வேள்பாரியை உருவாக்குவேன்’ என்று அவர் தெரிவித்தார்.

வேள்பாரி நாவலை படமாக்கும் உரிமையை நல்ல விலை கொடுத்து, ஷங்கர் வாங்கி வைத்துள்ளார். உடனடியாக படப்பிடிப்பு தொடங்கும் உத்தேசத்திலும் இருந்தார்.

ஆனால், அவரது இயக்கத்தில் உருவான ‘இந்தியன் -2 மற்றும் ‘கேம் சேஞ்சர்’ ஆகிய இரு படங்களும் தோல்வி அடைந்ததால், ஷுட்டிங்கை ஒத்தி வைத்துள்ளதாக தகவல்.

 -பாப்பாங்குளம் பாரதி.