Take a fresh look at your lifestyle.

F1 – ஹீரோயிசம் என்பது ‘எவர்க்ரீன் கிளாசிக்’!

ஹீரோயிசம் என்பது கமர்ஷியல் சினிமாவின் உயிர்வளி என்றே சொல்லலாம். அப்படியானால், ‘ஹீரோயினிசம்’ என்பது கிடையாது என்று எதிர்கேள்வி கேட்கக்கூடாது.

யதார்த்தத்தை மீறி, மையப்பாத்திரத்தைச் சாகசங்கள் செய்பவராகத் திரையில் காட்டுகிறபோது ரசிகர்கள் உணர்வெழுச்சி அடைவார்கள். அதையே இப்படிக் குறிப்பிட வேண்டியிருக்கிறது.

‘எவர்க்ரீன் கிளாசிக்’ என்று சொல்லும் வகையில், ஒவ்வொரு காலகட்டத்திலும் அது வெவ்வேறு வடிவங்களில் வெளிப்பட்டிருக்கிறது.

அந்த வரிசையில், கிராண்ட்ப்ரிக்ஸ் மோட்டார் விளையாட்டான ‘பார்முலா 1’ கார் பந்தயம் பற்றிய சித்திரத்தை நமக்குத் தருகிறது ‘எஃப் 1’ ஆங்கிலத் திரைப்படம்.

பிராட் பிட், டேம்சன் இட்ரிஸ், கெர்ரி காண்டன், டோபியா மென்சைஸ், கேலி குக் உள்ளிட்டோருடன் ஜேவியர் பார்டேம் நடித்துள்ள இப்படத்தை ஜோசப் கொசின்ஸ்கி இயக்கியுள்ளார்.

‘எஃப் 1’ எப்படிப்பட்ட ஹீரோயிசத்தை நமக்குக் காட்டுகிறது?

அடித்து துவைத்தது..!

கமர்ஷியல் ஆக்‌ஷன் படங்களுக்கு என்று சில பார்முலாக்கள் உண்டு. அவற்றில் ஒன்று, தொடர்ச்சியாகத் தோல்விகளைச் சந்திக்கிற நாயகன் அல்லது நாயகர்கள் கிளைமேக்ஸில் ஒன்றிணைந்து வெற்றியைச் சுவைப்பது. ‘எஃப் 1’ படத்தின் கதையும் அந்த வரிசையில் சேர்வது தான்.

‘இதை எத்தனை முறை அடிச்சு துவைச்சாச்சு தெரியுமா’ என்று ரசிகர்களே கேட்கிற அளவுக்குத்தான் இதன் கதை அமைந்திருக்கிறது.

ஏபிஎக்ஸ்ஜிபி எனும் மோட்டார்பந்தய அணியை நடத்தி வருகிறார் ரூபன் செர்வாண்டிஸ் (ஜேவியர் பார்டேம்). அவரது அணியின் முன்னணி வீரரான ஜோஷுவா பியர்ஸ் (டேம்சன் இட்ரிஸ்) உடன் இணைந்து ஆட நல்லதொரு வீரர் இல்லை.

காரணம், அந்த சீசனில் தொடர்ச்சியாகத் தோல்வியைச் சந்தித்ததால் அணியை விற்கலாம் என்ற முடிவுக்கு நிர்வாகக் குழு வந்திருப்பதுதான்.

அந்தச் சூழலில், மீதமுள்ள பார்முலா 1 பந்தயங்களில் ஜோஷ்வா பியர்ஸ் உடன் பங்கேற்பதற்காக சன்னி ஹெய்ஸை (பிராட் பிட்) அழைத்து வருகிறார் ரூபன்.

முப்பதாண்டுகளுக்கு முன்னர் ஒரு பார்முலா 1 பந்தயத்தில் பங்கேற்றபோது, கடுமையாகக் காயமுற்று பல ஆண்டுகள் படுத்த படுக்கையாகக் கிடந்தவர் சன்னி ஹெய்ஸ்.

பிறகு சூதாட்டத்தில் முழுமூச்சாக அவர் ஈடுபடத் தொடங்கியிருக்கிறார். அதில் பல வெற்றி தோல்விகள். இதற்கிடையே மூன்று பெண்களுடன் திருமணமாகி இல்வாழ்க்கையில் முறிவுகளைச் சந்தித்திருக்கிறார்.

சில ஆண்டுகளாக, ‘வாடகை கார் ஓட்டுநர்’ போலச் சில கார் பந்தயங்களில் பங்கேற்று வருகிறார்.

இப்படி ஒரு ‘பயோடேட்டாவை’ கொண்ட சன்னி ஹெய்ஸை பார்முலா 1 கார் பந்தயத்திற்கு எப்படித் தேர்வு செய்தார் ரூபன்? ஏனென்றால், இருவரும் ஒரே அணியில் ஒருகாலத்தில் விளையாடியவர்கள்.

அது மட்டுமல்லாமல், சமீபகாலமாக சன்னி ஹெய்ஸ் பங்கேற்கிற ஒவ்வொரு போட்டியையும் நன்கு ஆராய்ந்து கவனித்திருக்கிறார் ரூபன்.

அதன் முடிவில், ஆபத்தான தருணத்தில் பழைய நண்பனே உதவ முடியும் என்ற நிலைப்பாட்டுக்கு அவர் வந்திருக்கிறார்.

இதன் பிறகு கதையில் என்ன நடக்கும்? ரூபனின் அணி பயிற்சியாளர், தொழில்நுட்பத் தலைமை ஆலோசகர், இதர பணியாளர்கள், சக வீரரான ஜோஷ்வா பியர்ஸ் உட்பட அனைவருமே சன்னி ஹெய்ஸின் வருகையை எதிர்ப்பார்கள். கிட்டத்தட்ட அதுவே இக்கதையில் நடக்கிறது.

அதன்பிறகு என்ன நடக்கும்? தனது ‘ப்ளஸ்கள்’ என்னென்ன என்று உடன் இருப்பவர்களுக்கு சன்னி ஹெய்ஸ் புரிய வைப்பார். அதுவும் இக்கதையில் உண்டு.

இப்படித் தொடர்ச்சியாக நாம் யோசிக்கிற விஷயங்களைக் கொண்டிருக்கிறது திரைக்கதை. இறுதியாக, சன்னி மற்றும் ஜோஷ்வா கூட்டணி வென்றதா என்று சொல்வதோடு முடிவடைகிறது.

முடிவு எப்படிப்பட்டதாக இருக்கும் என்பதையும் நீங்களே யூகித்துக் கொள்ளலாம்.

‘எஃப் 1’ படத்தின் மிகப்பெரிய பலம், பார்முலா 1 கார் பந்தயப் போட்டியில் நாமே பங்கேற்பது போன்ற உணர்வைத் திரையில் உருவாக்கியது தான். அதேநேரத்தில், அப்பந்தயத்தின் நுணுக்கங்கள் பற்றி திரைக்கதையில் யாரும் பாடம் எடுக்கவில்லை. அதனால், டாக்குமெண்டரி பார்க்கிற உணர்வு எழவில்லை.

அளவாக அந்த காட்சிகளைக் காட்டிவிட்டு, மீதமுள்ள நேரங்களில் போட்டி, பொறாமை, காதல், கோபம், விரக்தி, அழுகை என்று இதர உணர்வுகளுக்கு இடம் கொடுத்திருக்கிறது இந்த ‘எஃப் 1’.

அசத்தும் காட்சியாக்கம்!

‘இங்கிலீஷ் படம்னாலே கேமிரா சூப்பரா இருக்கும்’ என்று நம்புகிற ரசிகர்கள் நம்மூரில் அதிகம். அவர்களைத் திருப்திப்படுத்துகிற பணியைச் செவ்வனே செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் கிளாடியோ மிராண்டா.

விஎஃப்எக்ஸ் குழுவின் பங்களிப்பு இப்படத்தில் அதிகம். அதனை உணர்ந்து, இதன் ஒளிப்பதிவும் தயாரிப்பு வடிவமைப்பும் கையாளப்பட்டிருக்கின்றன.

பென் முன்ரோ மற்றும் மார்க் டைல்ட்ஸ்லே இதன் தயாரிப்பு வடிவமைப்பை மேற்கொண்டிருக்கின்றனர்.

தியேட்டரில் நுழைந்த சில நிமிடங்களிலேயே, இப்படத்தோடு நம்மை ஒன்றச் செய்துவிடுகிறது ஹான்ஸ் ஜிம்மரின் இசை. அது தருகிற உத்வேகம், எண்பதுகளில் இளையராஜா தந்த துள்ளல் இசை பாடல்கள் மற்றும் பின்னணி இசையை அனுபவித்தாற் போலிருக்கிறது.

ஸ்டீபன் மிரியோனின் படத்தொகுப்பு, எரன் க்ரூகெரின் திரைக்கதை என்று பலவும் வழக்கமான ‘கமர்ஷியல்’ படங்களைப் பார்க்கிற அனுபவத்தை நமக்குத் தருகின்றன.

மொபைலில் சில நொடி வீடியோக்களை ‘ஸ்க்ரோல்’ செய்து பார்க்கிற இன்றைய தலைமுறையும் கூட, திரையில் கண் அகலாது பார்க்கிற வகையில் ஷாட்களை அமைத்திருக்கிறார் இயக்குனர் ஜோசப் கொசின்ஸ்கி.

‘எஃப் 1’ படத்தில் புதிது என்று எதுவும் நம் கண்களுக்குத் தட்டுப்படவில்லை. ஆனால், ‘போரடிக்காத படம்’ என்று சொல்லத்தக்க வகையில் இதன் உள்ளடக்கம் உள்ளது. தொடக்கம் முதல் இறுதி வரை பல காட்சிகளை யூகித்துவிடலாம் என்றபோதும், காட்சியாக்கம் நம்மை ‘ப்ரெஷ்’ ஆக உணர வைக்கிறது.

குறிப்பாக, முப்பத்தைந்து வயதைக் கடந்தாலே ‘வயசாயிடுச்சு’ என்று ‘பீல்’ பண்ணுகிற குணாதிசயம் பலரைத் தொற்றி வருகிறது. அப்படியொரு சூழலில், ஐம்பதிலும் பார்முலா 1 பந்தயத்தில் அசத்தலாம் என்கிறது இப்படம்.

நாற்பது வயதில் இருப்பவர்களுக்கு இப்படம் ‘க்ரஞ்ச்’; இருபதுகளுக்குக் கீழ் இருப்பவர்களுக்கு இது ‘க்ரிஞ்ச்’ ஆகவும் தெரியக்கூடும். யார் கண்டது?

– உதயசங்கரன் பாடகலிங்கம்