Take a fresh look at your lifestyle.

கூலி – திருப்தி தருகிறதா ‘ரஜினி + லோ.க.’ காம்போ!

ஒரு கமர்ஷியல் திரைப்படம் எத்தகைய அனுபவத்தைத் தர வேண்டும்? தியேட்டரை விட்டு ரசிகர்கள் வெளியே வரும்போது, தங்கள் மனதில் திருப்தியைச் சுமந்து செல்ல வேண்டும். ‘ஆஹா என்னமா எடுத்துருக்காங்க’, ‘அடுத்த ஷோவையும் கையோட பார்க்கலாமா’, ‘ஹீரோ, ஹீரோயின் தாண்டி மத்த சில விஷயங்களையும் தனியா கவனிக்கணுமே’ என்று பலவித எண்ணங்களோடு வெளியேறுகிறவர்கள், அடுத்தடுத்த முறை தியேட்டருக்குள் நுழையும்போது அந்த ‘திருப்தி’ பன்மடங்காகப் பெருகி நிற்கும்.

அப்படிப்பட்ட திரையனுபவங்களைத் தந்த படங்களே ‘கிளாசிக்’ ஆக கொண்டாடப்படுகின்றன. மிகப்பெரிய நட்சத்திரக் கலைஞர்கள், இயக்குனர்களை உருவாக்குவதாகவும் அப்படங்கள் உருமாறும்.

அந்த வகையில், ஏற்கனவே புகழின் உச்சத்தில் இருக்கிற ஒரு நாயகனும் இயக்குனரும் கைகோர்க்கும்போது அப்படம் எத்தகைய திருப்தியைத் தர வேண்டும்? அந்த கேள்விக்குப் பதிலளிப்பதற்குள் படக்குழுவினர் படாத பாடு பட வேண்டியிருக்கும்.

அந்த வகையில், ரஜினிகாந்த், லோகேஷ் கனகராஜ் காம்பினேஷனில் உருவாகியிருக்கிற ‘கூலி’ ரசிகர்களுக்குத் திருப்தியைத் தருகிறதா?

‘கூலி’ கதை!

விசாகப்பட்டினம் துறைமுகத்தில் சில பல கடத்தல் வேலைகளைச் செய்து வருகிறார் சைமன் (நாகார்ஜுனா). அதனை வெளியில் உள்ளவர்கள் அறியாத வகையில், ஒரு பெரிய லாஜிஸ்டிக் நிறுவனத்தை நடத்தி வருவதாக நம்ப வைக்கிறார்.

அவரது கையாளான தயாள் (சௌபின் ஷாஹிர்) தான் மொத்த கடத்தல் நெட்வொர்க்கையும் கவனித்துக் கொள்கிறார். தயாளுக்கு அடுத்தபடியாக, அந்த கும்பலில் சிலர் இருக்கின்றனர்.

இந்த நிலையில், அந்த கும்பலில் போலீசின் ஆள் ஒருவர் (காளி வெங்கட்) இருப்பதாகத் தகவல் கிடைக்கிறது. அதையடுத்து, அவரைக் கொலை செய்கிறார் தயாள்.

சென்னையில் ஒரு மேன்ஷனை நடத்தி வருகிறார் தேவா (ரஜினிகாந்த்). ஒருநாள், அவரது நண்பர் ராஜசேகர் (சத்யராஜ்) மரணமடைந்ததாகத் தகவல் கிடைக்கிறது.

துக்க வீட்டிற்குச் சென்றால், ராஜசேகரின் மூத்த மகள் ப்ரீத்தி அவரை அனுமதிக்க மறுக்கிறார்.

ராஜசேகருக்கும் தேவாவுக்குமான நட்பு இழை துண்டிக்கப்பட்டு முப்பது ஆண்டுகள் ஆகின்றன.

இந்த நிலையில், ராஜசேகர் கொலை செய்யப்பட்டதாகத் தேவாவுக்குச் சில தகவல்கள் கிடைக்கின்றன.

அதனை ஆராய்கையில், கடந்த ஐந்தாண்டுகளாக ராஜசேகர் என்ன செய்து வந்தார் என்பது தெரிய வருகிறது. சைமன் கும்பலுக்கும் அவருக்குமான தொடர்பு வெளிப்படுகிறது.

அதையடுத்து, ப்ரீத்தியை அழைத்துக்கொண்டு நேராகச் சைமனைப் பார்க்கச் செல்கிறார் தேவா.

அதன்பின் என்னவானது என்று சொல்கிறது ‘கூலி’யின் மீதி.

சைமன் கும்பலில் இருக்கும் ஒரு போலீஸ் இன்பார்மர், ‘என்னை விட்டுடுங்க, நான் வீட்டுக்குப் போறேன்’ என்று தனது உயர் அதிகாரிகளிடம் பேசுவதே இதன் முதல் காட்சியாக அமைந்துள்ளது. அந்த வகையில், ஆரம்பத்தில் இருந்தே கதை சொல்லத் தொடங்கிவிடுகிறது ‘கூலி’.

அவரிடத்தில் “உங்களுக்கு முன்னாலயே இன்னொரு போலீஸ் அந்த கும்பலுக்குள்ள நுழைஞ்சாரு” என்று சொல்லப்பட, “அதுக்கு சான்ஸே இல்ல; கண்டிப்பா இத்தனை வருஷமா அவர் உயிரோட இருக்க வாய்ப்பே இல்ல” என்கிறார் அந்த இன்பார்மர். அவர் சொன்னது சரிதானா என்று நம்மை நாமே கேள்வி கேட்க வைக்கிறது கிளைமேக்ஸ்.

நட்சத்திரங்களின் இருப்பு..!

ரஜினிகாந்துக்கு வயது 75. இந்த வயதிலும் திரையில் ‘நாயகனாக’ நடிப்பதும் அது ரசிகர்கள் கொண்டாடும்படியாக அமைவதும் அவரது நடிப்பின் சிறப்பைச் சொல்லிவிடும்.

அதையும் தாண்டி ஆக்‌ஷன், காமெடி மற்றும் ஸ்டைலில் தனது பழைய படங்கள் சிலவற்றை நினைவூட்டுகிறார்.

போலவே, ‘படையப்பா’ காலத்து ரஜினியைத் திரையில் காட்ட இயக்குனர் குழுவும் ஒப்பனையாளர்களும் மேற்கொண்ட முயற்சிக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. விஎஃப்எக்ஸ் கலைஞர்களின் பங்கும் அதில் இருக்கிறது.

சத்யராஜுக்கு இதில் ரஜினியின் நண்பர் பாத்திரம். முத்திரை பதிக்கும்படியான காட்சிகள் இல்லை என்றாலும், ஒரு பாத்திரமாக வந்து போயிருக்கிறார்.

நாகார்ஜுனா இதில் வில்லன் பாத்திரம் ஏற்றிருக்கிறார். ‘ஐ யாம் எ டேஞ்சர்’ பாடல் கொடுக்கப்பட்டிருந்தாலும், ‘இவரை வில்லன்னு எப்படி நம்புறது’ என்கிறரீதியிலேயே படம் முழுவதும் உலாவியிருக்கிறார்.

உபேந்திராவின் கௌரவ தோற்றத்தைவிட, அமீர்கான் வருகைக்குக் கைத்தட்டல்கள் அதிகம் கிடைக்கின்றன. ஆனால், இரண்டு பாத்திரங்களின் வார்ப்பும் மிக மிகப் பழையது.

இப்படத்தின் வழியே மலையாள நடிகர் சௌஃபின் ஷாகிருக்கு நிறைய ரசிகர்கள் தமிழில் உருவாகக்கூடும். அந்தளவுக்கு அவரது பாத்திர வார்ப்பும் காட்சியமைப்பும் அமைந்துள்ளது. இரக்கம் சிறிதும் இல்லாத அரக்கனாக மிரட்டியிருக்கிறார்.

இவர்களைத் தாண்டி இந்தப் படத்தில் நம் கவனத்தைக் கவர்வது ஷ்ருதிஹாசன். அழுது வீங்கிய முகத்தோடு படம் முழுக்க வந்திருக்கிறார். என்ன, அவரது முகத்தில் இருக்கும் சோகம் நம்மைப் படத்தோடு பிணைக்காமல் அடம்பிடிக்கிறது.

கன்னட நடிகை ரக்சிதா ராம் இந்தப் படத்தில் எதற்கு இருக்கிறார் என்ற கேள்விக்கு, கண்ணா ரவி உடன் அவர் வருகிற காட்சிகள் பதிலாக அமைந்துள்ளன.

இது போக ரெபோ மோனிகா, சார்லி, மோனிஷா ப்ளெஸ்ஸி, ரிஷிகாந்த், தமிழ், பாபுராஜ், திலீபன் எனச் சிலர் உண்டு.

திரையில் நடமாடும் அடியாட்களின் எண்ணிக்கை நூற்றுக்கணக்கில் தேறும்.

இத்தனை பேர் நடித்தாலும், சிலரைத் திரையில் கண்டு அடையாளப்படுத்தும் அளவுக்குப் படத்தில் அவர்களது இருப்பு உள்ளது.

மிகப்பிரமாண்டமான படமாக ‘கூலி’ இருப்பதைப் பறைசாற்றத் தன்னாலான முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறார் ஒளிப்பதிவாளர் கிரிஷ் கங்காதரன்.

காட்சிகளை ‘ஷார்ப்’பாக வெட்ட முயற்சித்திருக்கிறார் படத்தொகுப்பாளர் பிலோமின் ராஜ்.

வழக்கமாக, லோகேஷ் கனகராஜ் படங்களில் விதவிதமாக போதைப்பொருள் கும்பலின் நெட்வொர்க், உற்பத்தியிடங்கள் காட்டப்படும்.

ஆனால், இந்தப் படத்தில் சதிஸ்குமாரின் கலை வடிவமைப்பானது, அவற்றைப் போன்றே வேறொரு விஷயத்தைக் காட்ட முனைந்துள்ளது. அதுவே இப்படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ் கிடைக்கவும் காரணமாக உள்ளது.

தமிழ் படங்களில் ஆங்கிலப் பாடல்களை ஒலிக்கவிடுவதை ஒரு வழக்கமாகக் கொண்டிருக்கும் அனிருத், அதையே இதிலும் செய்திருக்கிறார். அதனை மீறி ‘சிக்குடு’, ‘மோனிகா’ பாடல்கள் ரசிகர்களை வசீகரிக்கின்றன.

பின்னணி இசையோ ‘விக்ரம்’, ‘ஜெயிலர்’ படங்களை லேசாக நினைவூட்டுகிறது. பல காட்சிகளில் இரைச்சல் அதிகம்.

இடைவேளைக்கு முன்னால், இப்படத்தில் ‘தங்கமகன்’ படத்தில் இருந்து ‘வா வா பக்கம் வா..’ பாடல் பின்னணியில் ஒலிக்க ஒரு காட்சி இருக்கிறது. அது ‘வாவ்’ ரகம்.

ஆனால், அது போன்ற இடங்கள் மிகச்சில என்பதால் லோகேஷ் கனகராஜ் ரசிகர்களுக்கு ஏமாற்றம் தான்.

மற்றபடி, படம் முழுக்கப் பல காட்சிகள் நாம் ஏற்கனவே பார்த்த மாதிரியே இருக்கின்றன. முக்கியமான திருப்பங்கள் வழக்கமாக இப்படித்தான் இருக்கும்; இந்த விஷயத்தில் ‘லோ.க.’ வித்தியாசமானதொன்றை முன்வைப்பார் என்று எதிர்பார்த்தால் ஏமாற்றமே கிடைக்கிறது.

மிக முக்கியமாக, படத்தின் பர்ஸ்ட் லுக்கில் இடம்பெற்ற ‘ரோலக்ஸ் வாட்ச்’ செயினுக்கு தனி முக்கியத்துவம் இருக்கும் என்று எதிர்பார்த்தால், அது படத்தில் இல்லை.

ரஜினியின் ‘பிளாஷ்பேக்’ காட்சிகள் சட்டென்று சில நொடிகளில் முடிந்துவிடுகின்றன.

முன்பாதியில், சத்யராஜின் மனைவியும் தங்கையும் கேஸ் சிலிண்டர் வெடித்து இறந்ததாக ஒரு வசனம் வரும். அதற்கான காரண காரியங்கள் ஏதும் பின்பாதியில் விளக்கப்படவில்லை.

கிளைமேக்ஸ் முடிந்தபிறகும் கூடச் சில நிமிடங்கள் படம் திரையில் ஓடுகிறது. அதனைச் சுருக்கியிருக்கலாம்.

ரஜினியின் ‘இண்ட்ரோ’ வருவதற்கு முன்பாக, சத்யராஜ் மற்றும் ஷ்ருதி உள்ளிட்டோர் இடம்பெற்ற காட்சிகளை வைத்திருக்கலாம்.

சத்யராஜ் – ரஜினி பாத்திரங்கள் பிரிவுக்கான காரணம் இன்னும் வலுவாக, திரைக்கதையின் தொடக்கத்திலேயே சொல்லப்பட்டிருக்கலாம். அவை நிகழவில்லை.

இப்படி ‘ஸ்கிரிப்டில்’ பல பலவீனமான விஷயங்கள் இருக்கின்றன.

அந்த பலவீனங்களை மீறி தியேட்டரில் ரசிகர்கள் கொண்டாட ஒரே காரணம், ரஜினி மட்டுமே. அதற்கேற்ப, அவர் ‘பவர் ஹவுஸ்’ ஆக திரையில் தோன்றியிருக்கிறார்.

‘அது போதும்’ என்பவர்களால் ‘கூலி’ இன்னொரு ‘விக்ரம்’ ஆக மாறலாம்.. ‘அது போதுமா’ என்பவர்களால் இப்படம் ‘சுமார்’ ரகமாகக் கருதப்படலாம்..

ஏற்கனவே சொன்னது போல, ரசிகர்களின் திருப்தியையும் இவற்றின் வழியே நம்மால் உணர முடியும்.

முதல் ஒரு வார கால ‘கலெக்‌ஷன் கணக்கு வழக்கு’களைத் தாண்டி, இரண்டாம் வாரத்தில் மட்டுமே அது தெரிய வரும். அப்போது, படத்திற்குத் தணிக்கை துறை தந்த ‘ஏ’ சான்றிதழ் பெரிய விவாதத்தைக் கிளப்பும்.

அதேநேரத்தில், ‘கூலி’ உருவாக்கிய எதிர்பார்ப்பினைச் சுமந்து வந்தவர்களுக்கு இப்படம் ஏமாற்றத்தைத் தரும் என்பதே உண்மை..!

– உதயசங்கரன் பாடகலிங்கம்