Take a fresh look at your lifestyle.

தருணம் – ‘த்ரில்லர்’ கதைகளில் லாஜிக் பார்க்கலாமா?

’முதல் நீ முடிவும் நீ’ படம் மூலமாகக் கவனம் ஈர்த்தவர்களில் முதன்மையானவர் நடிகர் கிஷன் தாஸ். போலவே, ‘தேஜாவூ’ படம் மூலமாகத் தமிழ் சினிமா ரசிகர்களின் கவனம் ஈர்த்தவர் இயக்குநர் அரவிந்த் ஸ்ரீனிவாசன்.

இவர்களது காம்பினேஷனில் அமைந்த படம் என்ற வகையில் கவனிக்க வைத்தது ‘தருணம்’ பட ட்ரெய்லர். இதில் நாயகியாக ஸ்மிருதி வெங்கட் நடித்திருக்கிறார்.

முதல் படம் போலவே இதனையும் ‘க்ரைம் த்ரில்லர்’ ஆகத் தந்திருக்கிறார் இயக்குநர்.

சரி, ‘தருணம்’ தரும் திரையனுபவம் எப்படிப்பட்டது?

‘தருணம்’ கதை!

ஒரு என்கவுண்டரில் தனது நண்பனை இழக்கிறார் சிஆர்பிஎஃப் அதிகாரியான அர்ஜுன் (கிஷன் தாஸ்). அந்தச் சம்பவம் குறித்து துறை ரீதியான விசாரணை நடைபெற்று வருகிறது.

பணியிடை நீக்கம் செய்யப்பட்ட அர்ஜுன், வாழ்வில் எதிலும் பிடிப்பில்லாமல் இருக்கிறார். அதற்குக் காரணம், அர்ஜுன் போலீஸ் அதிகாரி என்றறிந்த அவரது கேர்ள்ப்ரெண்ட் வேறொருவரைத் திருமணம் செய்துகொண்டதுதான்.

அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் தடுமாறும் அர்ஜுன், தனது நண்பனைக் (பாலசரவணன்) காண விசாகப்பட்டினத்தில் இருந்து சென்னை செல்கிறார்.

அங்கு, அவர் வேலைப் பார்க்கும் ஐடி நிறுவன உரிமையாளரான மீராவைப் (ஸ்மிருதி வெங்கட்) பார்க்கிறார்.

அடுத்தடுத்து இருவரும் சந்திக்கின்றனர், மெல்ல மீராவுக்கும் அர்ஜுனுக்கும் இடையே காதல் மலர்கிறது.

அதையடுத்து இருவீட்டாரும் அவர்களது திருமணத்திற்கு ஏற்பாடு செய்கின்றனர்.

இந்த நிலையில், மீராவின் பெஸ்டியாக இருக்கும் ரோகித் (ராஜ் அய்யப்பா) திடீரென்று ஒரு குண்டைத் தூக்கிப் போடுகிறார். அவரைக் காதலிப்பதாகக் கூறுகிறார்.

அவருடன் தான் நெருக்கமாக இருக்க வேண்டுமென்று விரும்புகிறார். அவர் சொல்வதைக் கேட்கும் மீராவோ, அவரைக் கண்டிப்பதில்லை. மாறாக, அதனைப் பெரிதாகக் கருதாமல் கடந்து செல்கிறார்.

மீரா, ரோகித்தின் பழக்கத்தைக் கண்டாலும், அர்ஜுன் அதனை விமர்சிக்கவில்லை. அதேநேரத்தில், அர்ஜுன் மீது கொலைவெறி கொள்ளும் ரோகித், அவரைத் தாக்க அடியாட்களை ஏவி விடுகிறார்.

மீராவைக் காதலிப்பதாக நடித்து அவருடன் நெருக்கமாக இருக்கும் தருணங்களை வீடியோ பதிவு செய்ய முயல்வதே அவரது திட்டம். ஆனால், அவரது முயற்சிகள் தவிடுபொடியாகின்றன.

இந்த நிலையில், மீராவின் திருமணத்தைக் குலைக்கும் திட்டத்தோடு அவர் வீட்டுக்குச் செல்கிறார் ரோகித். மீராவை ஆபாசமாகப் படம்பிடித்து, அதனைக் கொண்டு அவரை ‘பிளாக்மெய்ல்’ செய்யத் திட்டமிடுகிறார்.

சில நிமிடங்கள் கழித்து, மீராவின் அபார்ட்மெண்டுக்கு செல்கிறார் அர்ஜுன்.

மீராவின் வீட்டில், ரோகித் கீழே விழுந்து கிடப்பதைக் காண்கிறார். நாசி துவாரத்தில் கை வைத்து பார்க்கிறார். மூச்சு சுத்தமாக இல்லை என்பதை உறுதி செய்ததும், அவர் மரணமடைந்துவிட்டதாக மீராவிடம் சொல்கிறார்.

இந்த நிலையில், பக்கத்து பிளாட்டில் வசிக்கும் ரோகித்தின் தாய் அவரைத் தேடி மீரா வீட்டுக்கு வருகிறார்.

அதன்பின் என்னவானது? யாருக்கும் தெரியாமல் ரோகித்தின் பிணத்தை அர்ஜுனும் மீராவும் மறைத்தார்களா அல்லது அவரது மரணம் அங்கிருக்கும் அனைவருக்கும் தெரிய வந்ததா?

இக்கேள்விகளுக்குப் பதிலளிக்கிறது ‘தருணம்’ படத்தின் மீதி.

ஒவ்வொருவரின் வாழ்விலும் மறக்க முடியாத, திரும்பிப் பார்க்க விரும்பாத, வேட்கையுடன் எதிர்பார்க்கிற, தவறவிடக் கூடாத ‘தருணங்கள்’ என்று பல உண்டு.

அந்த வகையில் சில கதாபாத்திரங்களின் வாழ்வைத் தீர்மானிக்கிற தருணங்களைச் சொல்கிறது இப்படம்.

இந்தப் படத்தில் நாயகன், நாயகி இருவரும் வெற்றி அடைவார்கள் என்று நாம் எதிர்பார்ப்பதே இயல்பு.

அதற்கேற்ப இப்படத்தின் திரைக்கதை இருக்கிறது. ஆனால், அதில் தெளிவு இருக்கிறதா என்றால் ‘இல்லை’ என்றே கூற வேண்டும்.

பரபரப்பு இருக்கிறதா?

‘மன்மதன்கள்’ என்ற பெயரில் இரண்டு இளைஞர்கள் இளம்பெண்களோடு நெருக்கமாக இருக்கும் வீடியோ பதிவுகள் காவல் துறைக்குத் தலைவலியை ஏற்படுத்துகின்றன.

அதனைச் சொல்வதில் இருந்து ‘தருணம்’ திரைக்கதை தொடங்குகிறது.

பிறகு நாயகன், நாயகி, வில்லன் ஆகியோரின் வரவைக் காட்டுகிறது.

மூவரும் இடம்பெறும் காட்சிகள் அனைத்துமே ‘இது யதார்த்தம்தானா’ என்று கேட்கிற வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன.

அதையும் தாண்டி, இக்கதாபாத்திரங்கள் இந்தச் சூழலில் இப்படித்தான் ‘ரியாக்ட்’ செய்யுமா என்ற கேள்வியை எழுப்புவதாக உள்ளது திரைக்கதை.

இயக்குநர் அரவிந்த் ஸ்ரீனிவாசன் அக்கேள்விகளுக்குப் பதில் காண்பதில் கவனம் செலுத்தாமல், திரைக்கதையிலுள்ள திருப்பங்களை மட்டுமே நம்பிக் களமிறங்கியிருக்கிறார்.

அது, ‘த்ரில்லர் கதையில லாஜிக் பார்க்கலாமா, வேண்டாமா’ என்ற கேள்வியை எழுப்புகிறது.

‘வேண்டாம்’ என்று பதிலளிக்கும் வகையில் இப்படம் இருப்பதுதான் மிகப்பெரிய மைனஸ்.

உண்மையில், பிற வகைமைக் கதைகளை விட ‘த்ரில்லர்’ வகைமை கதைகளில்தான் ரசிகர்கள் லாஜிக் மீறல்களை அதிகம் உற்றுநோக்குவார்கள். அதற்குரிய பதில்களைத் தந்துவிட்டாலே, திரையில் படம் பரபரப்பை நிறைத்து நிற்கும்.

அருமையானதொரு கதைக்கருவை, அதன் வெளித்தோற்றத்தை வடிவமைத்த இயக்குநர், போதுமான உள்ளடக்கத்தை நிரப்புவதில் கோட்டை விட்டிருக்கிறார்.

கிஷன் தாஸ், ஸ்மிருதி வெங்கட், ராஜ் அய்யப்பா உட்படச் சுமார் ஒரு டஜன் கலைஞர்கள் இதில் நடித்திருக்கின்றனர்.

ஆனால், எவரது இருப்பும் திருப்தி தருவதாக இல்லை. ஆங்காங்கே ‘காமெடி லைன்’ களை சொல்லி பால சரவணன் கலகலப்பூட்டுவது ஒன்றே நமக்குக் கிடைக்கும் ஆறுதல்.

இப்படத்தில் பாடல்களுக்கு தர்புகா சிவா இசையமைத்திருக்கிறார். பின்னணி இசையை அஸ்வின் ஹேமந்த் கவனித்திருக்கிறார். இருவருமே நம்மை ஈர்க்கும் வகையில் தமது உழைப்பைத் தரவில்லை.

படத்தில் சில பிரேம்கள் ‘ரிச்’சாக தெரிய, சில பிரேம்கள் ‘டிவி பிலிம்’ பார்த்த உணர்வைத் தருகின்றன. அதனை மீறி சேஸிங் காட்சிகளில் கவர்கிறது ராஜா பட்டாச்சார்ஜீயின் ஒளிப்பதிவு.

படத்தொகுப்பாளர் அருள் இளங்கோ சித்தார்த், இக்கதையில் முக்கியமான காட்சிகளை ‘பாதி’யில் நறுக்கியிருக்கிறார். பின்பாதியில் அவை ‘பிளாஷ்பேக்’ ஆகவோ, ‘இண்டர்கட்’ ஆகவோ வருமாறு செய்யவில்லை.

லாஜிக் தொடர்பாக ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்குப் பதிலளிக்கும்விதமாகவும், அவரது படத்தொகுப்பு அமையவில்லை.

கலை இயக்குநர் வர்ணாலயா ஜெகதீசன், ஸ்டண்ட் இயக்குநர்கள் டான் அசோக் மற்றும் பிரபு உட்படப் பல தொழில்நுட்பக் கலைஞர்கள் இதில் பணியாற்றியிருக்கின்றனர்.

ஆனாலும், அவர்களது உழைப்பு கவனிப்பைப் பெறும்விதமாகக் கதையை இயக்குநர் அமைக்கவில்லை.

இந்தப் படத்தில் போலீஸ் பாத்திரத்தில் கிஷன் தாஸ் பொருந்தியிருக்கிறாரா, நாயகி பாத்திரம் பற்றி கிளைமேக்ஸில் இயக்குநர் அமைத்துள்ள திருப்பம் எடுபடுகிறதா என்று வரிசையாகப் பல கேள்விகள் இப்படம் பார்க்கும் ரசிகர் ஒருவரை நிச்சயம் தொற்றும்.

ஆனால், அவரே ‘அதெல்லாம் ஒரு பொருட்டல்ல’ என்ற மனநிலையோடு தியேட்டரை விட்டு அதே ரசிகர் வெளியே வருவார். காரணம், அதற்கேற்ற வகையில் அமைந்திருக்கும் படத்தின் உள்ளடக்கமே.

ஒரு காட்சியில் பாலசரவணனைச் சில ரவுடிகள் துரத்துவார்கள். அவரது காருக்கும் அந்தக் காருக்கும் இடையே சில மீட்டர் இடைவெளி தான் தென்படும்.

ஆனால், அடுத்த ஷாட்டிலேயே வில்லன் அபார்ட்மெண்ட் அருகேயுள்ள ஆள் அரவமற்ற பகுதியில் அந்தக் காரை நிறுத்திவிட்டு பாலசரவணன் தப்பித்துச் செல்வார்.

அவரைத் துரத்தியவர்கள் காணாமல் போயிருப்பார்கள். அந்தக் கார் அதன்பின் படத்தில் இடம்பெற்றிருக்காது.

இப்படியொரு லாஜிக் மீறலைப் பொறுத்துக்கொள்ள முடிகிறவர்களுக்கு, ‘தருணம்’ படத்தைக் காண்பதில் எந்தத் தடையும் இருக்காது.

அவ்வாறில்லாதவர்கள் மன வருத்தங்களை எதிர்கொள்ளும் தருணங்களைத் தரவல்லது இந்தத் ‘தருணம்’!

– உதயசங்கரன் பாடகலிங்கம்.