Take a fresh look at your lifestyle.

மினி ஆச்சி ஆன ‘பருத்திவீரன்’சுஜாதா!

34

குணச்சித்திர நடிகை ‘பருத்திவீரன்’ சுஜாதாவுக்கு ‘மினி ஆச்சி’ என்ற பட்டம் சென்னையில் நடந்த விழாவில் வழங்கப்பட்டுள்ளது.

கமல் இயக்கிய ‘விருமாண்டி’ படத்தின் மூலம் குணச்சித்திர நடிகையாக அறிமுகமானவர்.

பிறகு ‘பருத்திவீரன்’ படத்தின் மூலம் பரவலான அடையாளத்தைப் பெற்று, ‘பருத்தி வீரன்’ சுஜாதா என்று அழைக்கப்படும் அளவிற்குப் புகழ்பெற்றார்.

ஏறக்குறைய அனைத்து கதாநாயகர்களின் படங்களிலும் நடித்து 90வது படத்தைக் கடந்து 100ஐ நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறார்.

இவர் நடித்து அண்மையில் வெளிவந்துள்ள படம் ‘ஆனந்தம் விளையாடும் வீடு’. ‘கோலிசோடா 1.5’ மற்றும் பெயரிடப்படாத புதிய ஐந்து படங்களிலும் நடித்துவருகிறார்.

அண்மையில் தமிழ்நாடு நவ் என்ற அமைப்பு கோல்டன் கார்பெட் அவார்டு என்ற விருதை அளித்தது.

ஜி.வி.பிரகாஷ், இயக்குநர் சிம்புதேவன் இணைந்து விருதை வழங்கினார்கள். அதே விழாவில் சுஜாதாவுக்கு ‘மினி ஆச்சி’ என்ற பட்டமும் வழங்கப்பட்டது.

இதுகுறித்து பேசிய நடிகை சுஜாதா, “நான் முதல்முதலில் கமல் அவர்களால் ‘விருமாண்டி’ படத்தில் அறிமுகம் செய்யப்பட்டது அனைவருக்கும் தெரியும். ஆனால், அந்தப் படத்தில் நான் நடிப்பேன் என்று எதிர்பார்க்கவில்லை.

படத்தில் கதாநாயகி அபிராமிக்கு மதுரை வட்டார வழக்கு சொல்லிக் கொடுப்பதற்காகத்தான் என்னை முதலில் கேட்டார்கள்.

ஒரு நண்பர் அழைத்ததால் கமல் சாரைச் சந்தித்தேன். நான் தயங்கியபோது, அவர் மிகவும் சகஜமாகப் பேசினார். நாங்கள் எழுதி வைத்துள்ள வசனங்களை மதுரை வட்டார மொழிக்கு மாற்றி நீங்கள்தான் கதாநாயகிக்கு சொல்லிக் கொடுக்கவேண்டும் என்றார்.

நான் பேசிக் காட்டியதைப் பார்த்த பிறகு, நீங்களே ஏன் ஒரு கதாபாத்திரம் செய்யக்கூடாது? என்றார். அப்படித்தான் நான் பசுபதிக்கு ஜோடியாக அந்தப் படத்தில் பேச்சியாக நடித்தேன்.

மீண்டும் கமல் சாரைப் பார்க்கச் சென்றபோது கைக்குழந்தையுடன் சென்றேன். அப்போது ”என்ன அதற்குள் சின்ன பேச்சியுடன் வந்து விட்டீர்கள்?” என்றார்.

‘பருத்திவீரன்’ படம் வந்தது. அந்தக் கதாபாத்திரத்திற்கு ஏராளமான பாராட்டுகளும் வாழ்த்துகளும் கிடைத்தன. அமீர் சாருக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்.

அந்தப் படத்தில் நடித்ததற்காகத்தான் முதன்முதலில் எனக்கு விகடன் விருது கிடைத்தது. அதற்குப் பின் விஜய் டிவியின் விஜய் விருது, பிறகு ஃபிலிம்பேர் விருது என கிடைத்தன. அதற்குப் பிறகு ஏராளமான விருதுகள் அந்தப் பாத்திரத்திற்காகக் கிடைத்தன.

பெரும்பாலும் அனைத்து கதாநாயகர்களில் படங்களிலும் நடித்து விட்டாலும் நான் இன்னும் ரஜினி, தனுஷ் என்ற இருவரின் படங்களில் மட்டும் நடிக்கவில்லை. எனக்கு குணச்சித்திரம் மட்டுமல்ல நகைச்சுவை நடிப்பும் நன்றாக வரும்.

என்னை சிறுத்தை சிவா தான் ‘விஸ்வாசம்’ படத்தில் ஸ்டெப் போட்டு நடனமாட வைத்தார். இந்த விருது பெறும்போது நான் கடந்து வந்த பாதையைச் சற்றே நினைத்துக் கொண்டேன்” என்று கடகடவெனப்ப பேசினார்.

#விருமாண்டி #Virumandi #பருத்திவீரன் #Parutthiveeran #நடிகை_சுஜாதா #Actress_Sujatha #மினி_ஆச்சி #Mini_Aachi #விஸ்வாசம் #Viswasam #ஃபிலிம்பேர்_விருது #Film_fare #விஜய்_டிவி_விருது #Vijay_TV_Award #விகடன்_விருது #Vikatan_Award