திரைத் தெறிப்புகள்-36:
*
தமிழ்த் திரைப் படங்களில் அண்ணன் – தங்கை பாசத்தை மையப்படுத்தி எத்தனையோ பாடல்கள் வெளிவந்திருக்கின்றன. தற்போதும் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
ஆனாலும் 1961-ம் ஆண்டில் பீம்சிங் இயக்கத்தில் வெளிவந்த ‘பாசமலர்’ திரைப்படம் அண்ணன் தங்கை பாசத்திற்கு எடுத்துக்காட்டாகச் சொல்லும் அளவிற்குப் பெயர் பெற்றதோடு, பெரும் வரவேற்பையும் பெற்ற திரைப்படம்.
நடிகர் திலகம் சிவாஜி கணேசனும், நடிகையர் திலகம் சாவித்ரியும் அண்ணன் தங்கையாக அற்புதமாக நடித்திருப்பார்கள்.
ஆரூர்தாஸின் வசனம் இந்தப் படத்தில் மிகவும் பிரபலமான மாதிரியே, கவிஞர் கண்ணதாசனின் பாடல்களும் அவ்வளவு பிரபலம்.
“மலர்ந்தும் மலராத…” பாடலைப் போலவே, கீழே இடம் பெற்றிருக்கும் இந்தப் பாடலை அவ்வளவு உருகிய குரலில் பாடியிருப்பார் டி.எம். சௌந்தர ராஜன்.
“மலர்களைப் போல் தங்கை உறங்குகிறாள்
அண்ணன் வாழ வைப்பான் என்றே அமைதி கொண்டாள்.
கலைந்திடும் கனவுகள் அவள் படைத்தாள்
அண்ணன் கற்பனைத் தேரினில் பறந்து சென்றான்…”
தங்கையான சாவித்ரி அருகில் இருக்க, அண்ணனான சிவாஜி, தடித்த பிரேம் போட்ட கண்ணாடியுடன் அடிக்கடி கண் கலங்கியபடி பாடுவதாக அமைந்திருக்கும் இந்தப் பாடலுக்கு இசையமைத்தவர் கே.வி.மகாதேவன்.
கருப்பு வெள்ளைப் படமாக இருந்தாலும் அந்தப் பாடல் படமாக்கப்பட்ட விதம் அன்பு மயமான வண்ணம் பூசியதைப் போல இருக்கும்.
“ஆசையின் பாதையில் ஓடிய
பெண் மயில் அன்புடன்
கால்களில் பணிந்திடக் கண்டான்
வாழிய கண்மணி வாழிய என்றான்
வான்மழை போல் கண்கள் நீரில் ஆடக் கண்டான்”.
இதற்கடுத்து இடம்பெற்ற ஒரு வரி தான் கவியரசரின் எழுத்து வலிமையைக் காட்டும்.
“பூ மனம் கொண்டவள் பால்மணம் கண்டாள்
பொங்கிடும் தாய்மையில் சேயுடன் நின்றாள்
மாமனைப் பாரடி கண்மணி என்றாள்
மருமகள் கண்கள் தன்னில் – மாமன் தெய்வம் கண்டாள்…”
இத்திரைப்படம் வெளிவந்த காலத்தில் நிலவிய கூட்டுக் குடும்ப வாழ்வையும், அண்ணன் – தங்கை பாசப் பிணைப்பையும் இதைவிட வலுவாக சொல்லிவிட முடியாது என்கின்ற அளவுக்கு இந்தப் பாடல் நிறைவடைந்திருக்கும்.
மெல்லிய பூவைப் போன்ற மனம் கண்ட தனது தங்கை, தாய்மை அடைந்த நிலையில் பூரிப்பான அழகுடன் திகழ்வதை எவ்வளவு நளினமாக ‘பூ மனம் கொண்டவள் பால் மணம் கண்டாள்’ என்ற மிக எளிமையான கவி மொழியில் உணர்த்தி இருக்கிறார் கண்ணதாசன்.
எளிமையும் தனி அழகு தானே!
– மணா