தமிழ் சினிமாவில் ‘ஸ்டண்ட்’ காட்சிகளில் நடித்த முதல் நடிகை என்று மறைந்த டி.பி.ராஜலட்சுமியைக் குறிப்பிடுகிறது விக்கிபீடியா. அதன்பிறகு தென்னிந்திய சினிமாவுலகில் பெரிதாக எந்த நடிகையும் ஆக்ஷன் காட்சிகளில் நடிக்க விருப்பப்படவில்லை. அதற்கேற்ப நாயகிகளை மையப்படுத்திய கதைகளும் அவர்களுக்கு வாய்க்கவில்லை.
எழுபதுகளில் தெலுங்கு திரையுலகில் விஜயநிர்மலா அப்படிப்பட்ட வாய்ப்புகளை பெற்றார். முழுக்க ஸ்டண்ட் காட்சிகள் நிறைந்த படங்களில் விஜயலலிதா போன்றோர் நடித்தனர். தொண்ணூறுகளின் பிற்பாதியில் கன்னட சினிமாவில் மாலாஸ்ரீ, மலையாள சினிமாவில் வாணி விஸ்வநாத் போன்றோர் அப்படிப்பட்ட வாய்ப்புகளைப் பெற்றனர்.
ஆனால், இடைப்பட்ட காலத்தில் தனக்கென்று தனி பாணியைக் கதைத் தேர்விலும் கதாபாத்திர வார்ப்பிலும் உருவாக்கியவர் நடிகை விஜயசாந்தி. ‘லேடி சூப்பர்ஸ்டார்’ என்று இன்றும் அழைக்கப்படும் இவர் தொண்ணூறுகளில் ‘ஆக்ஷன் குயின்’ ஆக அறியப்பட்டவர். இவரது படங்கள் என்றாலே, விசிலடிக்க வைக்கும் ஆக்ஷன் காட்சிகள் நிச்சயம் இருக்கும் என்ற நம்பிக்கையை விதைத்தவர்.
சினிமாவில் வரும் மோதல்கள் எதுவும் உண்மையல்ல என்றபோதும், அதனை உண்மை என்பதாகக் காட்ட நிறையவே மெனக்கெட வேண்டியிருக்கும். அந்த மெனக்கெடலுக்காக நிறையவே பயிற்சியும் முயற்சியும் தேவைப்படும். அதனைச் செய்யத் துணிவிருந்தால் புகழும் பெருமையும் தானே தேடி வரும் என்பதற்கு ஒரு உதாரணம் விஜயசாந்தி.
வழக்கமான தொடக்கம்!
‘கல்லுக்குள் ஈரம்’ படம் வழியாக கேமிரா முன்பாக முதன்முறையாகத் தலைகாட்டினார் விஜயசாந்தி. அந்த படத்தில் நாயகியாக வந்த அருணாவோடு இன்னொரு நாயகியாக அறிமுகம் ஆகியிருந்தார்.
அதே ஆண்டில் தெலுங்கில் ‘கிலாடி கிருஷ்ணடு’ படத்தில் அறிமுகம் ஆனார்.
பிறகு, தமிழில் நெற்றிக்கண், நெஞ்சிலே துணிவிருந்தால், இளஞ்ஜோடிகள், நிழல் தேடும் நெஞ்சங்கள், வேடிக்கை மனிதர்கள் என்று சில படங்களில் நடித்தார். பெரும்பாலும் அவை முதன்மை நாயகி பாத்திரங்களாக அமையவில்லை. அந்தக் குறையைத் தெலுங்கு திரையுலகம் தீர்த்து வைத்தது.
பெல்லுசூப்புலு, நீதி பாரதம், பிரதிகடானா, ஸ்வயம் கிருஷி என்று விதவிதமான கதைகளில், பாத்திரங்களில் நடித்தார். ஆரம்பகாலத்தில் நாயகர்களோடு மரத்தைச் சுற்றி வந்து ‘டூயட்’ பாடினார். வயதான நாயகர்களுடன் ஜோடி சேர்ந்து மழையில் நனைந்து ஆட்டம் போட்டார். அதற்கு இணையாக இளம் நாயகர்களோடு சேர்ந்து நடித்தார். அப்படி சிரஞ்சீவி மற்றும் பாலகிருஷ்ணா உடன் முறையே 19 மற்றும் 17 படங்களில் இணைந்து நடித்தார்.
பிறகு வெங்கடேஷ் போன்ற நாயகர்களுடனும் அவர் ஜோடி சேர்ந்தார். கே.விஸ்வநாத் இயக்கத்தில் ‘சிப்பிக்குள் முத்து’ இந்தி ரீமேக்கில் நடித்தார் விஜயசாந்தி. இப்படித் தன்னைத் தேடி வருகிற இயக்குனர்கள் எவராக இருந்தாலும், அவர்களுக்கு ஏற்ற நடிப்பை வழங்கத் தயாராக இருந்தார்.
குறிப்பிட்ட திரைப்படங்களில் ஆக்ஷன் காட்சிகளிலும் சிறப்பாக நடித்தார். அது, அவரது திரை வாழ்வை மாற்றியமைத்தது.
ஆக்ஷன் பாத்திரங்கள்!
ஆக்ஷன் காட்சிகளில் சிறப்பாக நடிக்கத் தேர்ந்த பயிற்சி அமைய வேண்டும். விடாமுயற்சியும் தன்னம்பிக்கையும் இருக்க வேண்டும். அவை கைவரப்பெற்ற பலர் காலப்போக்கில் தங்கள் நோக்கத்தில் இருந்து விலகியிருக்கின்றனர்.
ஆனால், விஜயசாந்தி தனது வலி, வேதனைகளுக்கு நடுவே ரசிகர்கள் பெறுகிற உத்வேகத்தை மட்டுமே கருத்தில் கொண்டார். அவர்களை மகிழ்விக்க ‘ரிஸ்க்’ எடுக்கலாம் என்ற மனநிலையை அடைந்தார்.

அந்த எண்ணமே, ஒருகட்டத்தில் தொடர்ச்சியாக அவரை ஆக்ஷன் கதைகளில் இடம்பெறச் செய்தது.
‘கர்த்தவ்யம்’ படத்தில் ஐபிஎஸ் அதிகாரியாகத் தோன்றினார் விஜயசாந்தி. அவர் முழுநீள ஆக்ஷன் ஹீரோயின் ஆக நடித்த முதல் படம் அதுவே.
ஏ.எம்.ரத்னம் தயாரிப்பில், மோகன் காந்தி இயக்கத்தில் வெளியான இப்படத்தில் அப்போது செய்திகளில் பரபரப்பாகப் பகிரப்பட்ட கிரண் பேடியைப் பிரதிபலித்தார். அதுவே தமிழில் ‘வைஜெயந்தி ஐபிஎஸ்’ என்ற பெயரில் ‘டப்’ ஆகி சக்கை போடு போட்டது.
அதன்பின்னர் விஜயசாந்தி நடித்து தெலுங்கில் தோல்வியுற்ற படங்கள் தமிழில் பெரும் வரவேற்பைப் பெறுகிற ‘டப்பிங்’ படங்களாக மாறின.
அந்த நேரத்தில் வினோத் குமார் உள்ளிட்ட புதிய நாயகர்களுடன் விஜயசாந்தி ஜோடி சேர நேர்ந்தது. காரணம், முன்னணி நாயகர்கள் அவரோடு நடிக்கத் தயங்கியதுதான்.
அதே காலகட்டத்தில் ‘மன்னன்’ படத்தில் ரஜினியோடு ஜோடி சேர்ந்தார். அந்தப் படத்தில் அவரது பாத்திரம் ரஜினிக்கு இணையாக இருந்ததோடு, அவரது ‘ஆக்ஷன் இமேஜ்’ உடன் பொருந்துவதாக அமைந்தது.
1990 முதல் 1995 வரை ‘சோலோ ஹீரோயின்’ கதைகளுக்கே அதிக முக்கியத்துவம் தந்தார் விஜயசாந்தி. தமிழில் தடயம், சூர்யோதயம், ராஜஸ்தான் படங்களில் ராம்கி, ரஹ்மான், சரத்குமார் உடன் இணைந்து நடித்தார்.
இப்போதும் தொடர்கிறது..!
ஒரு பெண்ணின் வாழ்வில் நிகழ்கிற இயல்பான மாற்றங்கள் சில வேளைகளில் எதிர்காலக் கனவுகளை, செயல்பாட்டை மட்டுப்படுத்தும். ஆனால், தனது வாழ்க்கையில் அப்படிப்பட்ட மாற்றங்களின்போது வெவ்வேறு பாதைகளில் பயணித்தவர் விஜயசாந்தி. திரைப்பட உலகில் வரவேற்பு குறையத் தொடங்குவதற்கு முன்னாலேயே அரசியலில் இறங்கினார்.
அதில் ஏற்ற இறக்கங்களைக் கண்டபோதும், குறிப்பிட்ட பிரச்சனைகளில் தனது நிலைப்பாட்டில் அவர் மாற்றங்களைச் செய்யத் தயாராக இல்லை. அதுவே, இன்றும் அவரது உறுதியான குணத்தினை வெளிப்படுத்துகிறது.
சுமார் 22 ஆண்டுகளுக்கு முன்னர் நடிப்பில் இருந்து விலக முடிவெடுத்தார் விஜயசாந்தி. அரசியலில் இறங்கி மக்கள் பணியாற்றுவதென்று களத்தில் இறங்கினார். அதில் அவருக்குப் பெரிய வெற்றி கிட்டியதென்று சொல்லிவிட முடியாது. அதேநேரத்தில், அவர் தோல்வியுற்று களத்தை விட்டு அகலவும் இல்லை.
அந்த உறுதி, திரையுலகில் அவர் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியபோதும் தெரிந்தது. ‘சரிலேரு நீக்கவரு’ படத்திற்காக மகேஷ்பாபு மற்றும் இயக்குனர் அனில் ரவிபுடி அழைத்தபோது அவருக்குத் தயக்கம் இருந்ததா என்று தெரியவில்லை. ஆனால், அப்படத்தில் அவர் இடம்பெற்ற ஒரு காட்சியில் கூட அதனை நம்மால் காண இயலவில்லை. அதுதான் விஜயசாந்தி.

சமீபத்தில் ‘அர்ஜுன் சன் ஆஃப் வைஜெயந்தி’ படத்தில் நாயகன் கல்யாண் ராமின் தாயாகத் தோன்றியிருந்தார். அக்கதையில் அவரது பாத்திரத்திற்குப் போதுமான இடம் தரப்பட்டிருந்தது.
பிளாஷ்பேக்கில் ஸ்டண்ட் காட்சிகளிலும் அவர் இடம்பிடித்தார். இந்த வயதிலும் கயிறு கட்டி மேலே இழுக்கப்படுகிற நுட்பங்களைச் சிறப்பாகக் கையாண்டிருந்தார். நிச்சயமாகப் பயிற்சிகள் இல்லாமல் அத்தனை திறம்பட நடிக்க முடியாது. அந்த மெனக்கெடலை இன்றிருக்கிற நாயகிகளிடம் கூட காண்பது கடினம்.
இந்த வயதிலும் தன்னிடம் ரசிகர்கள் எதிர்பார்க்கிற ஒன்றைச் சரியாகத் தந்துவிட வேண்டும் என்கிற அந்த எண்ணம்தான் விஜயசாந்தியின் திரையிருப்பு ‘பவர்ஃபுல்’லாக இருப்பதன் ரகசியம். திரையில் தெரிகிற அவரது முகத்தில் எத்தனை சுருக்கங்கள் வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், அதன் வழியே தீர்க்கமாக வெளிப்படுகிற அவரது மனவுறுதிக்கு ஈடிணை ஏதுமில்லை. அப்படிப்பட்ட விஜயசாந்தி இன்று 60வது வயதில் அடியெடுத்து வைத்திருக்கிறார். அவருக்கு நமது பிறந்தநாள் வாழ்த்துகள்..!
– மாபா