கே.பாக்யராஜ் இயக்கி நடித்து 1981-ம் ஆண்டு வெளியாகி சக்கை போடு போட்ட படம், ‘அந்த 7 நாட்கள்’. மலையாள பாஷை பேசி பாக்யராஜ் அசத்தி இருப்பார். அம்பிகா கதாநாயகியாக நடித்த இந்தப் படத்தில் ராஜேஷ், காஜா ஷெரீப்புக்கு பிரதான வேடங்கள் கொடுத்திருந்தார், பாக்யராஜ்.
‘அந்த 7 நாட்கள்’ எனும் பெயரில் இப்போது புதிய படம் தயாராகி உள்ளது. காதல் – த்ரில்லர் படமான இதில் அஜித் தேஜ், ஸ்வேதா முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இதில் பாக்யராஜுக்கும் முக்கிய கேரக்டர் அளிக்கப்பட்டுள்ளது,
பெஸ்ட்காஸ்ட் ஸ்டுடியோஸ் சார்பில் முரளி கபீர்தாஸ் தயாரித்துள்ள, இந்தப் படத்தை எம்.சுந்தர் இயக்கியுள்ளார். சச்சின் சுந்தர் இசை அமைத்துள்ளார். சென்னை, கொடைக்கானல் ஆகிய பகுதிகளில் சுமார் 50 நாட்கள் படப்பிடிப்பு நடந்துள்ளது.
படம் குறித்து தயாரிப்பாளர் முரளி கபீர்தாஸ் கூறியதாவது :
“இந்தப் படத்தின் கதையைக் கேட்டு முடித்ததும் கே.பாக்யராஜின் ‘அந்த 7 நாட்கள்’ தலைப்புதான் பொருத்தமாக இருக்கும் என நினைத்தோம். அவரிடம் அனுமதி கேட்டபோது உடனே ஒப்புக் கொண்டார்.
இதுவரை திரையில் சொல்லப்படாத பல ஜானர்களும், கதைகளும் இருக்கின்றன. இதை இன்றைய இளம் தலைமுறையினர் துணிச்சலுடன் உருவாக்க வேண்டும். அதுபோன்ற திறமையாளர்களுக்கு பெஸ்ட்காஸ்ட் ஸ்டுடியோஸ் வாய்ப்பளிக்க தயாராக இருக்கிறது” என்று தெரிவித்தார், முரளி,
– பாப்பாங்குளம் பாரதி.