Take a fresh look at your lifestyle.

வடிவேலு, பகத் பாசில் இருவரில் யார் ‘மாயமான்’?

சில நடிகர்கள் திரையில் தோன்றினாலே போதும், ரசிகர்கள் கொண்டாட்டமாகி விடுவார்கள். சிலரது ‘காம்பினேஷன்’ அந்த மாயாஜாலத்தை நிகழ்த்தும். குறிப்பாக, நகைச்சுவை நடிகர்களுடன் சில நாயகர்கள் இணைகிறபோது அது நிகழும்.

கவுண்டமணி உடன் சத்யராஜ், கார்த்திக், பிரபு, அர்ஜுன் போன்றோர் இணைந்து நடித்தபோது அது நிகழ்ந்திருக்கிறது. அதற்கடுத்த தலைமுறையிலும் கூட, இதுபோன்ற சில காமெடியன் – ஹீரோ ‘காம்பினேஷன்’கள் உண்டு.

கமர்ஷியல் படங்களாக அமையாவிட்டாலும், சில திரைப்படங்களில் அதுபோன்ற கொண்டாட்டத்தை சில ‘காம்பினேஷன்கள்’ நிகழ்த்தும்.

அந்த வரிசையில், ‘மாமன்னன்’ படத்தில் எதிரும் புதிருமாகப் பகத் பாசில் உடன் வடிவேலு தோன்றிய காட்சிகள் தியேட்டரில் ஆரவாரத்தைப் பெற்றன. இவர்கள் இருவரும் சேர்ந்து நடித்தால் எப்படியிருக்கும் என்ற எதிர்பார்ப்பை உண்டாக்கின.

அந்த எதிர்பார்ப்புக்கான பரிசைத் தந்திருக்கிறது ஆர்.பி.சௌத்ரி தயாரிப்பில், சுதீஷ் சங்கர் இயக்கத்தில், கிருஷ்ணமூர்த்தி எழுத்தாக்கத்தில், யுவன்சங்கர் ராஜா இசையமைப்பில் உருவாக்கப்பட்ட ‘மாரீசன்’.

இப்படம் தரும் திரையனுபவம் எத்தகையது?

‘மாரீசன்’ கதை!

திருட வேண்டும் என்று தோன்றும்போது சில இடங்களில், சில நபர்களிடத்தில் ‘வேலையை’க் காட்டுபவர் தயாளன் (பகத் பாசில்).

பாளையங்கோட்டை சிறையில் இருந்து விடுதலையான கையோடு நாகர்கோவில் செல்லும் அவர், அங்கு ஒரு மோட்டார் பைக்கை திருடிக்கொண்டு ‘நகர் உலா’ வருகிறார்.

ஒரு வீட்டைப் பார்த்ததும், அதனுள் திருட நுழைகிறார். அங்கு ஒரு அறையில் சங்கிலியால் கட்டப்பட்ட நிலையில் இருக்கும் ஒரு நடுத்தர வயது மனிதரைக் காண்கிறார்.

தயாளன் ஒரு திருடன் என்று தெரிந்ததும் அந்த நபரின் முகத்தில் நம்பிக்கை தெரிகிறது. ‘என்னை இங்கிருந்து கூட்டிட்டு போப்பா’ என்கிறார் அந்த நபர். அதற்காகப் பணம் தருவதாகச் சொல்கிறார்.

அவரை அழைத்துக்கொண்டு வெளியே வருகிறார் தயாளன். ஒரு ஏடிஎம்மில் பணம் எடுக்க முயற்சிக்கும்போது, அந்த நபரின் கணக்கில் லட்சக்கணக்கில் பணம் இருப்பதை அறிகிறார். அதனை லவட்ட முடிவு செய்கிறார்.

அந்த நபரின் பெயர் வேலாயுதம் பிள்ளை (வடிவேலு). தனக்கு அல்சைமர்ஸ் எனும் ‘மறதி நோய்’ இருப்பதாகவும், தன்னை முழுதாக மறந்துவிடுவதற்கு முன்பாகச் சில கடமைகளைச் செய்ய வேண்டுமெனவும் கூறுகிறார்.

திருவண்ணாமலையில் இருக்கும் நண்பர் சாரியைப் பார்த்துவிட்டு, பாலக்காட்டில் இருக்கும் மகளைக் காணச் செல்ல வேண்டும் என்கிறார்.

‘நானே உங்களை அந்த இடத்திற்கு கூட்டிட்டு போறேன். இந்த மறதி நோயோட நீங்க எப்படி சமாளிப்பீங்க’ என்று வேலாயுதத்தை பைக்கில் ஏற்றிக்கொண்டு பயணிக்கத் தொடங்குகிறார் தயாளன்.

வழியில் ஏதேனும் ஒரு இடத்தில் அவரது ‘ஏடிஎம்’ பின் எண்ணை தெரிந்துகொண்டு, பணத்தை ‘அபேஸ்’ செய்வதுதான் அவரது திட்டம்.

அதேநேரத்தில், நாகர்கோவிலில் பைக் திருடிய நபரைத் தேடும் பணியில் ஒரு போலீஸ் தனிப்படை ஈடுபடுத்தப்படுகிறது.

அதற்கான காரணம் என்ன? வேலாயுதத்தின் பின்னணி என்ன? மறதி நோயால் அவதிப்படும் அவரைத் தயாளன் ஏமாற்றினாரா? அவர்களை போலீசாரால் பிடிக்க முடிந்ததா என்று சொல்கிறது ‘மாரீசன்’னின் மீதி.

‘கலக்கல்’ நடிப்பு!

ராமாயணக் கதையில் வரும் ‘மாயமான்’ பாத்திரத்தின் பெயர் மாரீசன் என்பது நாம் அறிந்ததே. இந்தப் படத்தில் ‘மாயமான்’ ஆகத் தென்படுவது வடிவேலுவா? பகத் பாசிலா? இந்த கேள்விதான் படத்தின் யுஎஸ்பி.

முதல் பாதியில் பகத்தின் பக்கம் திரும்புகிற நமது கவனம், இரண்டாம் பாதியில் முழுக்க வடிவேலு பாத்திரம் நோக்கிச் செல்கிறது. அந்த மாயாஜாலத்தை கனகச்சிதமாக நிகழ்த்தியிருக்கிறார் எழுத்தாக்கம் செய்திருக்கும் கிருஷ்ணமூர்த்தி.

அதேநேரத்தில், முன்பாதியில் இரண்டு ‘மகா’ நடிகர்களின் பயணம் ’ஓகே’ எனும் திரையனுபவத்தையே தருகிறது. பெரியளவுக்கு ‘தியேட்டர் மொமண்ட்’கள் இல்லை.

இரண்டாம் பாதியில் ஒரு பிளாஷ்பேக் வந்து போகிறது. அதில், கதையின் மையக்கரு தெளிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது.

ஆனாலும், அது நம்மில் தாக்கத்தை ஏற்படுத்தப் போதுமானதாக இல்லை.

திரைக்கதையில் சில விஷயங்களைக் காட்டாமல் தவிர்த்திருக்கும் இயக்குனர் – திரைக்கதையாசிரியர் கூட்டணி, இரண்டாம் பாதியிலும் கூட அவற்றை முழுமையாக விளக்கவில்லை. அது இப்படத்திலுள்ள பெருங்குறை.

அது ‘சஸ்பென்ஸை’ உடைத்துவிடும் என்று அவர்கள் கருதியிருக்கலாம். ஆனாலும், அதனால் பெரிதாகப் பலன் விளையவில்லை என்பதே உண்மை.

‘பயணப் படம்’ என்ற வகைமையில் பல காட்சிகள் இதில் இருக்கின்றன. அவற்றுக்கு நியாயம் சேர்க்கிறது கலைச்செல்வன் சிவாஜியின் ஒளிப்பதிவு. கேமிரா நகர்வுகள் சில இடங்களில் கதையை நகர்த்துவதாகவும் இருக்கின்றன.

ஸ்ரீஜித் சாரங்கின் படத்தொகுப்பு காட்சிகளைச் சீரான வேகத்தில் நகர்த்தியிருக்கிறது. இரண்டாம் பாதியில் சில காட்சிகள் ‘வழக்கமானதாக’த் தெரிவதைத் தவிர்த்திருக்கலாம்.

‘பங்கலான்’னின் தயாரிப்பு வடிவமைப்பு இப்படத்திற்குப் பலம் சேர்த்திருக்கிறது. ‘நேட்டிவிட்டி’ என்று சொல்லும்படியான சித்தரிப்பு காட்சியாக்கத்தில் இல்லை என்றபோதும், ‘யதார்த்தம்’ என்று சொல்லும்படியான பின்னணியை ஏற்படுத்தியிருக்கிறது அவரது உழைப்பு.

யுவன்சங்கர் ராஜாவின் இசையில் பாடல்கள் சட்டென்று மனதோடு ஒட்டிக் கொள்கின்றன. காட்சிகளின் தன்மைக்கு ஏற்றபடி பின்னணி இசை தர வேண்டும் என்பதிலும் நிறையவே மெனக்கெட்டிருக்கிறார்.

இதுபோக டிஐ, விஎஃப்எக்ஸ் போன்ற பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.

கண்களை உறுத்தாத அளவுக்கு ஆடை வடிவமைப்பு அமைக்கப்பட்டுள்ளது. ஒப்பனையில் ‘அதீதம்’ தெரியாவிட்டாலும், வடிவேலு திரையில் தென்படும் சில ஷாட்களில் கொஞ்சம் ‘செயற்கைத்தனம்’ எட்டிப் பார்க்கிறது.

பகத் பாசில், வடிவேலு இருவருமே ‘கலக்கலாக’ நடித்திருக்கின்றனர். வடிவேலு சீரியசாக தோன்றுவதை ஈடுகட்டுகிற வகையில் பகத் ஆங்காங்கே ‘காமெடி’ செய்திருக்கிறார். அது பாராட்டப்பட வேண்டிய ஒன்று.

அதேநேரத்தில், இருவரும் முழுநீள நகைச்சுவை படத்தைத் தருவார்களோ என்று மிகச்சில ரசிகர்கள் கொண்டிருந்த எதிர்பார்ப்பைப் பொய்த்துப் போகச் செய்திருக்கிறது இப்படம்.

இதில் கோவை சரளா, பி.எல்.தேனப்பன், லிவிங்ஸ்டன், ரேணுகா, சரவண சுப்பையா, கிருஷ்ணா, டெலிபோன் ராஜா உள்ளிட்ட சிலர் வருகின்றனர். ஆனால் ஒன்று அல்லது இரண்டு காட்சிகளில் மறைந்துவிடுகின்றனர். அதனைக் கொஞ்சம் சரிப்படுத்தியிருக்கலாம்.

விவேக் பிரசன்னா, சித்தாரா ஆகியோர் கூடுதலாகச் சில காட்சிகளைப் பெற்றாலும், அவை நம்மை வசீகரிப்பதாக இல்லை.

‘மாரீசன்’ படத்தில் புதுமையான கதை என்று எதுவும் கிடையாது.

சமூகத்தில் நிலவுகிற ஒரு பிரச்சனையை எடுத்துக்கொண்டு, அதனைக் கொஞ்சம் வித்தியாசமான முறையில் திரையில் சொல்ல முயன்றிருக்கின்றனர். அதில் வெற்றியும் பெற்றிருக்கின்றனர்.

கொஞ்சம் முயன்றிருந்தால், இரண்டாம் பாதியில் இன்னும் பல மடங்கு ‘வீரியத்தை’ச் சேர்த்திருக்கலாம். அதனைத் தவற விட்டிருப்பது வருத்தம் தரும் விஷயம்.

‘வழக்கத்திற்கு மாறான படம் வேண்டும்’ என்பவர்களை ‘மாரீசன்’ திருப்திப்படுத்தலாம். அதேநேரத்தில், வடிவேலு – பகத் பாசில் ‘காம்போ’ கலக்கலான அனுபவத்தைத் தரும் என்று தியேட்டருக்கு வந்தவர்களை லேசான அளவில் ஏமாற்றியிருக்கிறது இப்படம். ‘சுமாரான’ திரையனுபவத்தைத் தந்து அனுப்பி வைத்திருக்கிறது.

– உதயசங்கரன் பாடகலிங்கம்