தமிழில் தனக்கெனத் தனிக் கவிதைமொழி கைவரப்பெற்றக் கவிஞர்கள் வெகு சிலரே. அவர்களுள் பழநிபாரதி குறிப்பிடத்தக்கவர். காற்றின் மொழி மூலம் கவிதை எழுதுபவர்; பூக்களின் வண்ணங்கள் கொண்டு கவிதை எழுதுபவர்; மழையின் நீர்மை கொண்டு கவிதை எழுதுபவர்.
புதுக்கவிதைத் திறனாய்வாளர் பாலா, “நல்ல கவிதைகள் படித்தவுடன் இன்னொரு மனசின் இருக்கையில் இடம்பிடித்து விடுகின்றன” என்பார். பழநிபாரதி எழுதுபவை நல்ல கவிதைகள். பழநிபாரதி ஒரு நல்ல கவிஞர்.
பழநிபாரதியின் பாடுபொருள்கள் எல்லாக் காலத்திற்குமானவை; எல்லா உயிர்களுக்குமானவை.
பழநிபாரதிக்கு இயற்கையும், மனிதமும், காதலும்தான் பாடுபொருள். சக மனிதன் மீதான அவரின் அன்பு அவரது கவிதைகளுக்குள்ளும் நிறைந்திருக்கிறது. தனது சொற்களின் மூலம் மனிதத்தைப் பூமியெங்கும் விதைத்துச் செல்கிறார் பழநிபாரதி.
“எங்கு இறங்குவாள்
என்று தெரியாது
எதிரில் உட்கார்ந்திருந்தாள்
அவளிடம் கொஞ்சம்
தண்ணீர் கேட்க நினைத்து
கேட்காமலேயே
கண்ணயர்ந்துவிட்டேன்
விழித்தபோது
அவள் இல்லை
இருந்தது
ஒரு தண்ணீர்ப்பாட்டில்”
மனிதத்தை இதைவிட அழகாகச் சொல்லிவிட முடியாது. இதயங்களை அன்பால் ஈரமாக்கும் வரிகள் பழநிபாரதியுடையவை.
காதல் கவிதைகளில் பழநிபாரதி தொட்டிருப்பது உச்சம். தமிழில் வெளியான காதல் கவிதை நூல்களில் முக்கியமான நூல், ‘மழைப்பெண்’. குறிப்பாக இன்று எழுதும் நவீன காதல் கவிதைகளுக்கான அடிப்படை வடிவம் அந்த நூலில்தான் உள்ளது.
“உனக்கும் எனக்கும்
இடையே
கூப்பிடு தூரம்தான்
அழைக்கத் தெரியாமல்
விட்டு வைத்தேன்
அந்தக் குரல் தொடும் தூரத்தை”
இது ‘மழைப்பெண்ணில்’ வரும் ஒரு அழகிய கவிதை. இதுபோன்ற நவீன காதல் கவிதைக்கு அடித்தளமிடும் பல நுட்பமான கவிதைகள் பழநிபாரதியின் தொடக்க காலக் காதல் கவிதை நூலான மழைப் பெண்ணில் காணப்படுகின்றன.
‘உன் மீதமர்ந்த பறவை, ‘தண்ணீரில் விழுந்த வெயில்’, ‘பூரண பொற்குடம்’ ஆகியவை பழநிபாரதியின் பிற குறிப்பிடத்தக்கக் காதல் கவிதை நூல்கள். பழநிபாரதிக்கு மட்டும் மூன்று கண்கள். மூன்றாவது கண் காதலின் கண்.
இந்தக் கண் பழநிபாரதியின் இதயத்திற்கு நடுவில் இருக்கிறது. அங்கிருந்துதான் இந்தக் காதல் கவிதைகள் எல்லாம் எழுதப்படுகின்றன.
பழநிபாரதியின் காதல் கவிதைகளுக்கு இன்னும் சில சிறப்புப் பண்புகள் உண்டு. குறிப்பாக அவரின் கவிதைகள் நீர்த்துப் போகவில்லை.
உவமை, உருவகம் மற்றும் படிமங்களிலான அவரது கவிதைமொழி கிளாசிக் தன்மை கொண்டது.

அந்த கிளாசிக் தன்மையே அவரது கவிதையை நீர்த்துப் போகவிடாமல் செய்கின்றது. கிளாசிக் கவிதைகளின் முதன்மையான தன்மையான, ‘உலகப் பொதுமை’யும் ( Universality) பழநிபாரதியின் கவிதைகளில் அதிகமாக உள்ளது.
அதேபோல பழநிபாரதியின் கவிதைகளில் இயற்கை நீக்கமற நிறைந்துள்ளது. இயற்கையின் மடியில் அமர்ந்தபடிதான் கவிதைகள் எழுதுகிறார் பழநிபாரதி.
எனக்குப் பல நேரங்களில் பழநிபாரதியின் கவிதைகளில் சொற்கள் மேகங்களுக்கிடையே மிதந்து கொண்டிருக்கின்றனவோ எனத் தோன்றியதுண்டு. தமிழின் நவீன காதல் கவிதைகளின் கிளாசிக் குரல் பழநிபாரதி என்றால் அது மிகையல்ல.
பழநிபாரதியின் கவிதைகளைப் பற்றி மட்டும் கூறிவிட்டு அவரின் பாடல்களின் சிறப்பைப் பற்றிக் கூறவில்லையெனில் இக்கட்டுரை முழுமை பெறாது. தமிழ் சினிமாவில் பழநிபாரதி வரைந்த பாடல்கள் எல்லாம் வண்ணக் கோலங்கள். வானவில்லின் ஜாலங்கள்.
வைரமுத்துவிற்குப் பின்பு பாடல் எழுதப் பல பாடலாசிரியர்கள் வந்தாலும் தனித்துத் தெரிந்த முதல் பாடலாசிரியர் பழநிபாரதிதான்.
வாலி, வைரமுத்து என்ற இரு பெரும் ஆளுமைகளுக்கு இடையே 90 களில் தனது தனி ராஜபாட்டையைத் தொடங்கினார் பழநிபாரதி.
வாலி மரபின் அணிகள் மூலமும், வைரமுத்து புதுக்கவிதையின் படிமங்கள் மூலமும் திரைப்பாடலில் செல்வாக்கு செலுத்த நவீனமான திரைப்பாடல் மொழியை நோக்கி நகர்ந்து அதில் குறிப்பிடத்தக்க வெற்றியையும் பெற்றார் பழநிபாரதி.
” பூக்கள் அவளைப்
பார்த்து பார்த்து
ஆட்டோகிராபைக்
கேட்டு கேட்டுக்
கைகள் நீட்டியதோ”
என்ற வரிகளில் இருந்த நவீனம் ரசிகனுக்குப் புத்துணர்ச்சியையும் பரவசத்தையும் வழங்கின.
” உன் கை வளையல்
எண்ணிக் கொண்டே
பேசப் பிடிக்கும் “
எனப் பழநிபாரதி திரையில் எழுதியது நவீன கவிதைதான்.
இன்றையத் திரைப்பாடலின் நவீன வடிவம் பழநிபாரதியிடமிருந்துதான் தொடங்குகின்றது. இளைய தலைமுறைக் கவிஞர்களுக்கான கதவுகளைத் திரைப்பாடல் துறையில் திறந்துவிட்ட பெருமையும் பழநிபாரதியையே சேரும்.
திரைப்பாடலில் பழநிபாரதி எனும் இளம் கவிஞர் 90 களில் பெற்ற வெற்றிதான் இரண்டாயிரங்களின் தொடக்கத்தில் பா. விஜய், நா.முத்துக்குமார், தாமரை, கபிலன், சிநேகன், விவேகா, யுகபாரதி ஆகிய தனித்துவமான பாடலாசிரியர்கள் நல்ல வரவேற்பைப் பெற வழி வகுத்தது எனலாம்.

இசைஞானி இளையராஜா தனக்கு மிகவும் பிடித்த இளைய தலைமுறைப் பாடலாசிரியர்களாக அறிவுமதி, பழநிபாரதி ஆகிய இருவரையும் குமுதம் இதழில் ஒரு முறை பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
வைரமுத்துவிற்குப்பின் இளையராஜா அற்புதங்கள் நிகழ்த்தியது பழநிபாரதியுடன்தான்.
“என்னைத் தாலாட்ட வருவாளோ” (காதலுக்கு மரியாதை), “இரவு பகலைத் தேட” (கண்ணுக்குள் நிலவு), “இளங்காத்து வீசுதே” (பிதா மகன்) உள்ளிட்டப் பல பாடல்கள் கிளாசிக் தன்மை கொண்டவை எனலாம்.
சிற்பி, பழநிபாரதி கூட்டணியில் வெளிவந்த பாடல்கள் பெரும் வெற்றி பெற்றவை. அது ஒரு வெற்றிக் கூட்டணி.
“செவ்வந்திப் பூவெடுத்தேன்” (கோகுலம்) என மெலடியில் இதயம் தொட்டவர்கள்; “அழகிய லைலா” எனத் துள்ளளிசையில் இதயத்தை எகிற வைத்தார்கள்.
எஸ்.ஏ.ராஜ்குமாரின் இசையில் உருவான ‘பூவே உனக்காக’ படப் பாடல்கள் அழகிய பூக்கள்.
குறிப்பாக “ஆனந்தம் ஆனந்தம்” பாடலில் வரும், “மனதில் நின்ற காதலியே மனைவியாக வரும்போது சோகம்கூட சுகமாகும் வாழ்க்கை இன்ப வரமாகும்” என்ற வரிகள் 90-களின் காதல் தேசிய கீதம் ஆகும்.
நடிகர் விஜயை 90-களின் பிற்பகுதியில் மக்களின் மனதிற்கு நெருக்கமாக்கியது பழநிபாரதியின் பாடல்கள்தான்.
‘பூவே உனக்காக’ திரைப்படத்தின் இறுதிக் காட்சியில் விஜய் தனது காதலிக்குத் திருமணம் முடித்துவிட்டு அனைவரிடமிருந்தும் விடைபெறும்போது,
“நீ என்னைச் சேர்ந்திடும் வரையில் இதயத்தில் சுவாசங்கள் இல்லை
நீ வந்து தங்கிய நெஞ்சில் யாருக்கும் இடமே இல்லை”
– என எஸ்.ஏ.ராஜ்குமாரின் இசையில் ஒலிக்கும் பழநிபாரதியின் ஆத்மார்த்தமான வரிகள் விஜய் எனும் இளைய தலைமுறை நடிகருக்கு காவிய சோகத்தை வழங்கி அவருக்கு மக்களின் இதயத்தில் இடம் கிடைக்க முதன்மையான காரணமாக இருந்தது.

தொடர்ச்சியாக, ‘நினைத்தேன் வந்தாய்’ படத்தில் “வண்ண நிலவே” பாடலில் தனது கனவுக் காதலி குறித்து,
“பாதி இரவில் தூக்கத்தைக் கலைக்கும்
பூவே உந்தன் முகவரி என்ன”
என விஜயை பழநிபாரதி உருகவிட, விஜய் பெண் ரசிகைகளின் மனதைக் கொள்ளை கொண்டார்.
உச்சகட்டமாக, “என்னைத் தாலாட்ட வருவாளோ” என்ற ‘காதலுக்கு மரியாதை’ திரைப் பாடலில்,
“பூவிழி பார்வையில் மின்னல் காட்டினால்
ஆயிரம் ஆசைகள் என்னில் ஊட்டினாள்” என விஜய் ஆடிப் பாடும்போது அவர் இளம் பெண்களின் இலட்சியக் காதலனாகவே மாறிப்போனார்.
பழநிபாரதியின் காதல் பாடல்கள் விஜய்க்கு மென்மையை வழங்கி அவரை ரசிக்க வைத்தன.
90-களின் காலத்தை நிலவுக் காலம் எனலாம். அந்த நிலவுக் காலத்திற்கு நம்மை மீண்டும் அழைத்துச் செல்பவை பழநிபாரதியின் பாடல்கள்.
காதலியின் வெட்டிப் போடப்பட்ட நகத்தில் குட்டிக் குட்டி நிலவுகளைப் பார்க்க வைத்தது யார்… பழநிபாரதியேதான்!
“நிலவுப் பாட்டு நிலவுப் பாட்டு” எனப் பாடியதும் பழநிபாரதிதான்!
“குயில்களின் இருப்பிடம்
இசையால் அறியலாம்
மலர்ந்திடும் மலர்களை
வாசனை சொல்லலாம்
குயில்களும் மலர்களும் அதிசயம்
கனவுகள் கவிதைகள் ரகசியம்”
பழநிபாரதியின் பாடல்கள் ஒரு குயிலின் பாடல்கள்தான். பாரதிதாசன் பரம்பரையின் தொடர்ச்சியாகப் புதுக்கவிதைக்குள் இராகம் பாடும் குயில் இது.
இந்தக் குயில் எப்படியெல்லாம் மனிதத்தைப் பாடுகின்றது பாருங்கள்.
மனித இதயங்களைத் தனது பாடல்கள் மூலம் ஈரமாக்குகிறார் பழநிபாரதி.
“அள்ளி அள்ளித் தந்து உறவாடும்
அன்னைமடி இந்த நிலம் போல
சிலருக்குத்தான் மனசு இருக்கு
உலகம் அதில் நிலைச்சு இருக்கு
நேத்து தனிமையில போச்சு
யாரும் துணை இல்லை
யாரோ வழித்துணைக்கு வந்தால்
ஏதும் இணை இல்லை
உலகத்தில் எதுவும்
தனிச்சு இல்லையே
குழலில் ராகம்
மலரில் வாசம்
சேர்ந்தது போல
இளங்காத்து வீசுதே…
இசைபோல பேசுதே…”
பழநிபாரதியின் பாடல்கள் இளங்காற்றைப் போன்றவை. இதயத்திற்கு இதமானவை. நம் வாழ்வில் வழித்துணையாக வருபவை.
நன்றி: மோகனபாரதி முகநூல் பக்கத்திலிருந்து.