‘சில ஆண்டுகளுக்கு முன்..’, ‘பல ஆண்டுகளுக்கு முன்..’ என்று ஆரம்பிக்கிற கதைகள் திரையில் எப்போதுமே புதுவிதமான அனுபவத்தைத் தரும்.
‘அந்தக் காலத்துல இப்படியெல்லாம் இருந்ததா’ என்ற கேள்வியை அடுத்த தலைமுறையை ஏற்படுத்தும். அந்தக் கதை சொல்லலின் வழியே சுவாரஸ்யத்தோடு நெகிழ்ச்சியையும் தர முடிந்தால், ‘அற்புதம்’ என்பார்கள் ரசிகர்கள்.
கிட்டத்தட்ட தொண்ணூறுகளில் கேரளாவில் உள்ள இளைய தலைமுறையினரிடம் மேற்கத்திய நடனம் குறித்த வேட்கை பரவியதைக் காட்டுகிற வகையில் அமைந்த ‘மூன்வாக்’ மலையாளத் திரைப்படம், அப்படியொரு அற்புதமாக அமைந்திருக்கிறதா?
‘மூன்வாக்’ கதை!
திருவனந்தபுரத்தில் நடக்கிற நிகழ்ச்சியொன்றில் மைக்கேல் ஜாக்சனைப் போன்று ‘பிரேக் டான்ஸ்’ ஆடுகிற குழுவொன்றைப் பார்க்கின்றனர் சில கல்லூரி இளைஞர்கள்.
அவர்கள் அனைவருமே நண்பர்கள். வெவ்வேறு பாடப்பிரிவுகளைச் சேர்ந்தவர்கள். அவர்களை ஒன்றிணைக்கிறது நடனம்.
‘பிரேக் டான்ஸ்’ பற்றிய அடிப்படை கூடத் தெரியாத அந்த இளைஞர்கள், எப்படி தட்டுத் தடுமாறி அதனைக் கற்றுக்கொண்டு தேர்ச்சி பெறுகின்றனர் என்பதே ‘மூன்வாக்’ படத்தின் கதை.
மேலோட்டமாகப் பார்க்கையில் விளையாட்டு, கலை என்று ஏதேனும் ஒன்றில் சாதிக்கிற மனிதர் அல்லது குழுவினரைக் காட்டுகிற படங்கள் இப்படித்தானே உள்ளடக்கத்தைக் கொண்டிருக்கும் எனத் தோன்றலாம்.
அப்படியொரு கதையைச் செயற்கை என்று கருதாமல் இருக்க நிறைய வாழ்வனுபவங்களைச் சேர்க்க வேண்டும்.
வெவ்வேறு சாதி, மத, பொருளாதாரப் பின்னணி கொண்டவர்களை நடனம் ஒன்றாகப் பிணைக்கிறபோது நிகழ்கிறவற்றை ‘யதார்த்த சாயலுடன்’ காட்டிய வகையில் வேறுபடுகிறது இந்த ‘மூன்வாக்’.
‘க்ளிஷே’ இருக்கின்றனவா?
‘மூன்வாக்’ படத்தின் சிறப்பே, ‘யதார்த்தம்’ நிறைந்த திரைக்கதை ட்ரீட்மெண்ட் கொண்ட அதன் கதை சொல்லல் தான்.
இயக்குநர் வினோத் ஏ.கே. உருவாக்கிய கதைக்கு, அவருடன் இணைந்து திரைக்கதையாக்கத்தைக் கையாண்டிருக்கும் மேத்யூ வர்கீஸ், சுனில் கோபாலகிருஷ்ணனின் பங்களிப்பு அதற்கு உறுதுணையாக உள்ளது.
இந்தப் படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவராக, ‘நண்பகல் நேரத்து மயக்கம்’ இயக்குநர் லிஜோ ஜோஸ் பெலிசேரி பெயர் இருப்பது படத்தின் மீது கூடுதல் கவனத்தைக் குவிக்க வைக்கிறது.
சில இளைஞர்கள் கஷ்டப்பட்டு ஒன்றுகூடி, ‘பிரேக் டான்ஸ்’ ஆடுகிற ஒரு குழுவை உருவாக்கியதைச் சொல்கிறது முன்பாதி.
அவர்களது நடனத்திறமை மெருகேறுகிறபோது, ஒவ்வொருவருக்குமான தனிப்பட்ட பிரச்சனைகள் குழுவின் நடனமாடும் வாய்ப்புகளைச் சேதப்படுத்துவதைச் சொல்கிறது இரண்டாம் பாதி.
அதனால், இரண்டாம் பாதி கொஞ்சம் மெதுவாக நகர்வதாகத் தோற்றம் தரலாம். ஆனால், காட்சிகளின் உள்ளடக்கத்தில் பெரிதாக லாஜிக் மீறல்களோ, யதார்த்தத்திற்குப் புறம்பான அம்சங்களோ, எரிச்சலூட்டுகிற விஷயங்களோ தென்படாது. அதுவே இப்படத்தின் சிறப்பம்சம்.
அது மட்டுமல்லாமல், நடனம் தொடர்பான ஒரு திரைப்படத்தில் ‘இதெல்லாம் க்ளிஷேவாக இடம்பெற்றிருக்கும்’ என்ற நம் கணிப்பு இப்படத்திலும் நிறைய இடங்களில் உண்மையாகிறது.
ஆனால், அவை அனைத்தும் நாம் எதிர்பார்க்காத தருணத்தில் நம்மை வந்தடைவதுதான் இப்படத்தின் யுஎஸ்பி. அந்தக் கணங்கள் நம்மை ‘கூஸ்பம்ஸ்’ ஆக்குகின்றன.
இந்தப் படத்தின் ஆகப்பெரிய சிறப்பு, பிரசாந்த் பிள்ளையின் பின்னணி இசை. அது தருகிற உற்சாகமும் வேட்கையும் வார்த்தைகளுக்குள் அடங்காதது.
‘ரெட்ரோ பீலிங்’ என்றாலும், படம் பார்க்கும் அனைவரையும் எழுந்து நின்று ஆடச் செய்யும் தன்மைக் கொண்டதாக அது அமைந்திருப்பது ‘சூப்பர்’.
ஒளிப்பதிவாளர் அன்சர் ஷா, கலை இயக்குநர் சாபு மோகன், படத்தொகுப்பாளர்கள் தீபு ஜோசப் மற்றும் கிரண் தாஸ் உட்படப் பல தொழில்நுட்பக் கலைஞர்கள், இப்படத்தின் காட்சியாக்கம் செறிவாக அமையத் துணை நின்றிருக்கின்றனர்.
முழுக்கப் புதுமுகங்கள் தலைகாட்டியிருக்கிற படம் இது. நடுநடுவே கொஞ்சம் ‘சீனியர்களும்’ உண்டு. அதுவே இப்படத்தின் மீது நம் கவனம் பதிவதற்கும் பதியாமல் போவதற்குமான காரணமாக உள்ளது.
சுஜித் பிரபாகர், அனுநாத், சிபி குட்டப்பன், பிரேம்சங்கர், அப்பு ஆசாரி, ரிஷி கைனிக்கரா, சித்தார்த்.பி, அர்ஜுன் மணிலால், மனோஜ் மோசஸ், சஞ்சனா தாஸ், நைனிடா மரியா என்று பலர் இதில் நடித்திருக்கின்றனர்.
தேவையான சில இளைஞர் பாத்திரங்களைக் குடும்பப் பின்னணியோடு காட்டியிருப்பதும், அதே வயதுடைய துணைப் பாத்திரங்களுக்கும் சில காட்சிகளில் முக்கியத்துவம் தந்திருப்பதும் இத்திரைக்கதையோடு ஒன்ற வைக்கிறது.
இவர்களோடு ஸ்ரீகாந்த் முரளி, வீணா நாயர், துஷாரா பிள்ளை உள்ளிட்ட சிலரும் சில காட்சிகளில் தலைகாட்டியிருக்கின்றனர்.
மிக முக்கியமாக, நடனக் காட்சிகளை வடிவமைத்திருக்கும் ஸ்ரீஜித் பி டேஸ்லர்ஸின் டான்ஸ் கொரியோகிராஃபி அபாரமான திரையனுபவத்தைத் தருகிறது.
‘நடனப் போட்டி’யில் பங்கேற்கிற பிற குழுவினர் திரையில் சில நொடிகளே வந்து போனாலும், அதற்கும் நிறைய மெனக்கெட்டிருப்பது அருமை.
இன்றைய 2கே கிட்ஸ்களுக்கு, அதற்கடுத்த தலைமுறைக்கு, ‘டான்ஸ் ஆடணும்னா கிளாஸ் போனா போதும்’ என்று தெரியும்.
அந்த நடனப்பள்ளிகளைத் தொடங்கியவர்கள், எப்படிப்பட்ட சிரமங்களுக்கு மத்தியில் தங்களது நடன வேட்கைக்குத் தீனி போட்டார்கள் என்பது தெரியாது.
‘டான்ஸ் ஆடுனா வீடு வெளங்குமா’ என்ற பேச்சுகளைத் தாண்டி, அதே வீடுகளில் ‘உன் பிள்ளைங்களுக்கு டான்ஸ் ஆடத் தெரியாதா’ என்ற கேள்வி பிறக்க நாற்பதாண்டுகளைக் கடக்க வேண்டியிருந்தது முந்தைய தலைமுறைக்கு மட்டுமே தெரியும்.

அந்தக் கஷ்ட நஷ்டங்களை, அவற்றை மீறி நடனம் தந்த உத்வேகத்தை, இன்றைய தலைமுறையினரும் உணரும்படிச் செய்திருக்கிறது ‘மூன்வாக்’.
அபிப்ராய பேதங்கள் உள்ளவர்களும் கூட ரசிக்கும்படியான வாழ்வனுபவங்களோடு இக்கதை திரையில் மலர்ந்திருக்கிறது.
‘க்ளிஷேக்கள்’ தரும் சலிப்பினைத் தாண்டி, புத்துணர்ச்சி தருகிற நிறைய காட்சிகள் இப்படத்தில் இருக்கின்றன.
‘நடனம் மீது ஈர்ப்பு கொண்ட சில இளைஞர்களை, அவர்களது உறவுகள் மற்றும் நட்புகளின் மன உணர்வுகளை, முரண்களை, வாழ்வனுபவங்களை அந்த மண்ணின் மணத்தோடு காண்போமே’ என்று விரும்புபவர்களுக்கு ‘மூன்வாக்’ நிச்சயம் பிடிக்கும்..!
– உதயசங்கரன் பாடகலிங்கம்