காதலுற்ற மனம் எப்படியெல்லாம் பரிதவிக்கும், காதலுற்ற பார்வை எப்படியெல்லாம் திணறும், காதலுற்ற இரு உடல்கள் எப்படியெல்லாம் தழுவிக்கொள்ளும்! அதனைக் காட்சியாக்குவது அத்தனை சுலபமானது அல்ல.
பார்வையாளர்களுக்கு அதனை கனக்கச்சிதமாகக் கடத்தவேண்டும், இல்லையென்றால் இப்படத்தில் இடம் பெற்றிருக்கும் கூடல் காட்சிகளின் நிர்வாணங்கள் எல்லாமே அபத்தமாகிவிடும்.
அவையெல்லாம் கலையாக உயர்ந்து நிற்பதுதான் இப்படத்தின் அற்புதம்.
adale ஒரு பதின்பருவத்துப் பெண். தன்னுடைய இணைத்தேர்வு ஆணாக இருக்கவேண்டுமா அல்லது பெண்ணாக இருக்கவேண்டுமா என்பதை இன்னும் கண்டறியாமல் இருக்கின்ற பெண்.
முதலில் அவளோடு படிக்கும் மாணவன் ஒருவனோடு காதல்கொள்கிறாள். ஆனால் அதில் அவள் மனம் லயிக்கவில்லை. அவனோடான காமம் கூட அவளுக்குள் எந்தவொரு மாயங்களையும் நிகழ்த்தவில்லை. அதனால் பேசிப் பிரிந்து விடுகிறாள்.
இந்நிலையில்தான் சாலையில் தலைக்கு நீலச்சாயம் பூசின ஒரு பெண்ணைப் (Emma) பார்க்கிறாள். பார்த்த மாத்திரமே உள்ளுக்குள் அவளுக்கு பூ மலர்கிறது. அப்பெண்ணும் இவளைத் திரும்பிப் பார்க்கிறாள்.
முதல் சந்திப்பு. படத்தில் இந்தக் காட்சி சரியாக பதிமூன்றாவது நிமிடத்தில் வரும். அதுவரைக்கும் படத்திற்குள் எந்தவொரு இசையும் இருக்காது. புறவய சூழல்களின் சப்தங்களே இசையாக பயன்படுத்தப் பட்டிருக்கும்.
இவர்கள் இருவரும் சந்திக்கின்ற அக்கணத்தில் தான் இசை நிகழும். ஒருவர் சாலையில் ஒரு இசைக்கருவியை வாசித்துக் கொண்டிருப்பார்.
அறிமுகமே அற்ற இருபெண்களும் ஏதோ ஓர் உள்ளுணர்வு உந்த ஒருவரையொருவர் பார்த்தபடி எதிரெதிராகக் கடக்கும் அந்த முதல் சந்திப்பு. அதுவே சாட்சி இப்படம் எப்படியான காதலின் கூறுகளோடு இருக்கப் போகிறது என்பதற்கு!
இருவரும் மீண்டும் சந்தித்துக் கொள்கிறார்கள், பழகுகிறார்கள், காதலிக்கிறார்கள், இணைந்து வாழ்கிறார்கள், பிரிகிறார்கள். இதற்குள் என்ன நிகழ்கிறது என்பது கதை. அதனை கவித்துவத்தின் உச்சத்தில் நிகழ்த்தி இருக்கிறார் இயக்குநர் Abdellatif Kechiche.
Emmaவை adale ரசித்துப் பார்க்கின்ற ஒரு காட்சியில் அவளின் அக்குளில் இருந்து கைகள் தோள்பட்டை என ரசிப்பாள். கேமரா அவள் உடலில் க்ளோசப்பாக அலையும், பெரும்பான்மையான காட்சிகள் அப்படி உடல்களை நெருக்கமாகக் காட்டக் கூடியவைதான்.
adaleவை ஆனமட்டும் அழகாகக் காண்பிக்கத்தான் இந்தப் படத்தையே இயக்குநர் எடுத்தாரோ என்கிற சந்தேகம் வருமளவிற்கு அவளின் ஒவ்வொரு அசைவுகளையும் அழகாகப் படம்பிடித்திருப்பார்.
அவள் முன்னிரண்டு முயல்பற்கள் தெரிய உதட்டை விரியவைத்து இருக்கும் பாங்கு இருக்கிறதே! அவை முத்தம் கேட்கும் உதடுகள்.
அதே போல உதடுவிரிய தூங்கிக் கொண்டிருப்பாள், அப்போது அவள் குழந்தை போல இருப்பாள். ஒரு பெண்ணின் இருவேறு எல்லைகளை ஒரேவித காரணியைக் கொண்டே உணர்த்தியது நற்கலை!
அத்தியாவசியத் தேவைகள் என்னென்ன? உணவு! உறக்கம்! காமம்!
adale சாப்பிடுவதை அவ்வளவு நிறுத்து நிதானமாகக் காண்பிப்பார்கள், adale தூங்கிக் கொண்டிருப்பதை அவளைத் தொந்தரவு செய்யாத நிச்சல அமைதியில் காண்பிப்பார்கள்.
adale காமத்தில் இருப்பதை அவளின் காமம் எத்தனை தீவிரமோ அத்தனை தீவிரத்தில் காண்பிப்பார்கள்!
படத்தில் இசை என்பது இருக்கும் இடம் தெரியாமல் அவ்வப்போது மட்டுமே ஒலிக்கிறது.
அதுவும் பின்னணி இசை என்ற முறையில் அல்ல. இரண்டு பெண்களும் உடலுறவு கொள்ளும்போது இசையே இன்றி அவர்களின் மூச்சுக்காற்றும் முனகக் குரல்களும் மட்டுமே சுற்றிச் சுற்றி எதிரொலிக்க காமத்தை ஒரு தியானம் போல பார்த்துக் கொண்டிருக்கிறோம். அட்டகாசம்.
இருவரும் பிரிந்த பிறகு EMMA வயதில் மூத்தபெண் என்பதால் பக்குவமாக இந்த உறவில் இருந்தே வெளியேறிவிடுகிறாள். adale சிறியபெண், அவளால் அத்தனை எளிதில் இந்த உறவில் இருந்து வெளியேற முடியாமல் தவித்துக் கொண்டிருப்பாள்.
சில வருடங்கள் கழித்து மீண்டும் சந்திக்கிறார்கள். அப்போது adale கேட்பாள், நீ எப்படி இருக்க? சந்தோசமா இருக்கியா? யாரோடு இருக்க? வாழ்க்கை எப்படி போகுது?.
எல்லாவற்றிற்கும் ரொம்ப நல்லாருக்கேன், ரொம்ப நல்லா போவுது என்றே பதில் சொல்லிக் கொண்டிருப்பாள் Emma.
அப்படின்னா உனக்கு என்னோட நினைவே இல்லியா…, நீ என்னை மிஸ் பண்ணவே இல்லையா? என்று adale விற்கு வருத்தமாக இருக்கும்.
எல்லாம் சரி உன் புது இணையரோடு காமம் எப்படி இருக்கிறது? திருப்தியாக இருக்கிறதா? – “இல்லை adale எனக்குச் சொல்லத் தெரியவில்லை. ஒன்னு மட்டும் சொல்றேன், உன்னோடு இருந்த காமம் போல அது இல்லை.” – இப்பதிலைக் கேட்டபிறகுதான் அவளுக்கு நிம்மதியே!
அவள் இந்த உறவை விட்டு வெளியேறுவதற்கான வாசலையும் இந்தப் பதில்தான் திறந்து போடும்.
நீ இப்போது உன் புதுக்காதலியோடு சந்தோசமாக இரு, உன் வெற்றிகளில் மகிழ்ந்திரு. உன் புது வாழ்க்கைக்குள் எனக்கு இடம் இல்லாமல் இருக்கட்டும் பரவாயில்லை,
என்னால் மட்டுமே பூர்த்தி செய்யக்கூடிய ஒரு போதாமை உன்னில் இருந்தால்தான் இது காதல்.
படத்தின் பெயர் – Blue Is the Warmest Colour – பிரம்மாதமான படம்.
குறிப்பு: இது ஒரு காதல் காவியம், ஆனா இருக்கற எல்லா போர்ன் வெப்சைட்லயும் இந்தப் படத்த ஏத்தி வச்சிருக்காங்க, அதனால் படத்தை எங்கு பார்ப்பது என்றெல்லாம் கேள்வி கேளாமல் தேடித் பார்த்துக் கொள்ளுங்கள்.
-நன்றி: முகநூல் பதிவு.