கேள்வி: சினிமா உலகில் யாருமே அடைய முடியாத உச்ச நிலையை தொட்டு வீட்டீர்கள். விரும்பிய லட்சியத்தை அடைந்து விட்டோம் என்ற பூரிப்பு உங்களுக்கு ஏற்பட்டிருக்கிறதா?
எம்.ஜி.ஆர். பதில்: ‘‘பல ஆண்டுகளுக்கு முன் சென்னை நியூ எல்பின்ஸ்டன் தியேட்டரில் ‘இரு சகோதரர்கள்’ என்ற படம் திரையிடப்பட்டது.
அந்தப் படத்தில் கதாநாயகனாக நடித்த கே.பி.கேசவனுடன் நானும் இன்னும் சில நடிகர்களும் அந்தப் படத்தைப் பார்க்க சென்றிருந்தோம்.
இடைவேளையின் போது கே.பி.கே. வந்திருப்பதை அறிந்த ரசிகர்கள் அவரைப் பார்ப்பதற்காக எழுந்து நின்று அவர் பெயரைக் கூறி கூச்சலிட ஆரம்பித்தனர்.
அந்தப் படத்தில் மிகச்சிறிய வேடத்தில் நடித்திருந்த நான், அந்தச் சம்பவத்தைப் பார்த்து திகைத்துப்போய் கே.பி.கே. அவர்களையே வைத்தக் கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தேன்.
படம் முடிவதற்குள் தியேட்டரில் இருந்து வெளியேறி விட வேண்டும் என்று நாங்கள் புறப்பட்டோம்.
அதற்குள் மக்களும் வெளியே வந்துவிட்டனர். நான் மற்றவர்களைப் பிடித்துத் தள்ளி கே.பி.கே. அவர்களை பாதுகாப்பாக அனுப்பி வைத்தேன்.
இந்தச் சம்பவம் நடந்து பல ஆண்டுகளுக்கு பின், நானும் அதே கே.பி.கே. அவர்களும் சென்னை நியூ குளோப் தியேட்டரில் ஒரு ஆங்கிலப்படம் பார்க்க சென்றிருந்தோம். அப்போது நான் நடித்த ‘மர்மயோகி’ படம் வெளியாகி சில மாதங்களே ஆகி இருந்தது.
நான் வந்திருப்பதை அறிந்த ரசிகர்கள் இடைவேளையின் போது எழுந்து நின்று கூச்சல் போட ஆரம்பித்தனர்.
படம் முடிந்து வெளியே வந்ததும், மக்கள் வெள்ளம் எங்களை சூழ்ந்து கொண்டது. அவர்களிடம் இருந்து காப்பாற்றி என்னை டாக்ஸியில் ஏற்றி அனுப்பி வைத்தார் கே.பி.கே.
கலைஞர்களுக்கு உச்ச நிலை, தாழ்ந்த நிலை என்பதெல்லாம் மக்களால் தரப்படும் நிலை அவ்வளவு தான். கலைஞனைப் பொறுத்தவரை அவனுக்கு வீழ்ச்சி கிடையாது.
சூழ்நிலைகளே அவனை உயர்த்தும், தாழ்த்தும். அது மக்களின் மனதில் தோன்றும் முடிவு’’.
நன்றி: ‘நடிகன் குரல்’ 1951, மே மாத இதழிலிருந்து…