தமிழக இளைஞர்கள் மத்தியில் கொரியன் சீரிஸ் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.
கொரியன் சீரிஸின் கதைகள், அதன் காதல் காட்சிகள், வசனங்கள் ஆகிய அனைத்துமே இளைஞர்களைத் தன் வசம் ஈர்க்கக் கூடியவை.
பெரும்பாலான கொரியன் சீரிஸ்கள் பணக்காரர்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டவை.
ஆனால், சமீபத்தில் வெளியான ‘When life gives you tangerine’, மற்ற கொரியன் சீரிஸ்களுடன் ஒப்பிடும்போது மாறுபட்ட ஒன்று.
இது ஒரு மீனவக் குடும்பத்தின் வாழ்வியல் எதார்த்தங்கள், காதல், பாசம், வறுமை, இழப்பின் வலி, உழைப்பு ஆகியவை நிறைந்த காவியம்.
நெட்பிளிக்ஸில் வெளியான ‘When life gives you tangerine’ சீரிஸ் வடகொரியாவில் வாழ்ந்த காதலர்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட கதை.
16 எபிசோட்களைக் கொண்ட இந்தக் காதல் தொடர், எல்லாக் காட்சிகளிலும் நிறைந்திருக்கும் காதல், பார்ப்பவர்களை நெகிழச் செய்கிறது.
மீன்பிடி குடும்பத்தில் பிறந்த ஏசுனும், மீன் விற்கும் குடும்பத்தில் பிறந்த யங் குவான் சிக்கும் சிறுவயது முதல் காதலித்து வருகின்றனர்.
தலைசிறந்த காதலனாக திகழ்கிறார் குவான்சிக். இருவருடைய காதல், திருமணம், குழந்தைகள், குழந்தைப் பராமரிப்பு, குழந்தைகளின் திருமணம் என தொடர் நகர்கிறது.
ஏசுனின் அப்பா சிறு வயதிலேயே இறந்துவிட்டார். தாய் கடலில் இறங்கி கடல் வாழ் உயிரினங்களைச் சேகரிக்கக் கூடியவர்.
கணவன் இறந்த பிறகு இவர் மறுமணம் செய்துகொள்கிறார். தாயும் இறந்த பின் ஏசுன், போதுமான அன்பும், அடைக்கலமும் கிடைக்காமல் யாருமற்றவளாக நின்றபோது குவான்சிக் அவளுக்குத் தூணாக உடன் நிற்கிறார்.
காதலன் காதலிக்கு என்ன பெரிதாக செய்துவிட முடியும்? அவளுக்கான சுயமரியாதையையும், மகிழ்ச்சியையும் உறுதிசெய்ய முடியும். காதலியை யாரிடமும் விட்டுக்கொடுக்காமல் இருக்க முடியும்.
காதலிக்காக எந்த எல்லைக்கும் செல்ல முடியும். காதலியைக் கரம் பிடிக்க, நடுக்கடலில் செல்லும் கப்பலிருந்து குதித்துக் கரை சேர முடியும்.
தன் இணையின் வெற்றியைத் தன் வெற்றியாகக் கொண்டாட முடியும். இவையெல்லாம்விட இறக்கும் தருவாயில்கூட தன் காதலியை சிரமப்படுத்துவர்களிடம் கோபிக்க முடியும்.
இறந்த பிறகும் காதலியின் தேவையை உறுதிசெய்ய முடியும். இவை அனைத்தையும் குவான்சிக் ஏசுனுக்காக செய்தார்.
காதலி தன் காதலனுக்கு என்ன செய்துவிட முடியும். காதலனின் சுயமரியாதை பாதிப்புள்ளாக்குவரிடம் சண்டையிட முடியும்.
தன் காதலன் இறந்துகொண்டிருப்பதை அறிந்தும் அவனுக்காக முகத்தில் புன்னகையுடன் வழியனுப்பி வைக்க முடியும்.
இவையெல்லாம்விட தீவிர வறுமையிலும், இழப்புகளின் போதும் தன் காதலனின் கையை இறுக்கமாகப் பற்றிக்கொள்ள முடியும். இவையனைத்தையும் ஏசுன் குவான்சிக்கிற்காக செய்தார்.

கதையில் வரும் இவ்விரு தாபாத்திரங்களும் தன் கனவுகளை நோக்கிப் பயணிக்க வேண்டிய வயதில் கணவன் – மனைவியாக,
பெற்றோராக குடும்பச் சுமைகளை சுமக்கின்றனர்.
இதனை சரியென சொல்லிவிட முடியாது.
ஆனால், அதற்குப் பின் மிகப்பெரிய நியாயம் இருந்தது.
தாயை இழந்து, இருக்க இடமற்ற ஒரு பெண் தன்னை விரும்பியவனை வீடாக, குடும்பமாக மாற்றிக் கொண்டாள்.
நாம் எல்லாரும் இங்கு சின்னச் சின்ன அன்பிற்காக தானே ஏங்குகிறோம். அப்படியிருக்க ஏசுன் செய்ததில் எந்த தவறும் இல்லை.
கடலை வாழ்வாதாரமாக நம்பி இருக்கும் மக்களின் வலிகளையும் சீரிஸ் காட்சிப்படுத்துகிறது.
ஹென்யூ என்று கொரியன் மொழியில் அழைக்கப்படும் பெண் மீன்பிடி வீராங்கணைகள் ஒவ்வொரு நாளும் தன் குடும்பத்தின் பசியை போக்குவதற்கு உயிரைப் பணயம் வைத்து கடலில் இறங்குகின்றனர்.
தன் உயிர் போகும் வரை குடும்பத்திற்காக உழைப்பேன் என்று உயிரை விட்ட ஏசுனின் அம்மா, உழைப்பின் அடையாளம். வேலை இழப்பு போராட்டம் மற்றும் மாணவர் போராட்டங்களையும் இத்தொடர் காட்சிப்படுத்துகிறது.
சமூகத்தில் நிலவும் பெண்ணடிமைத்தனத்தை காதலர்கள் இருவரும் சுக்குநூறாக உடைக்கின்றனர்.
கணவனாக, தன் மனைவியை கொடுமைப்படுத்தும் குடும்பத்தாரை எதிர்த்து நிற்கும் குவான் சிக், தன் மகளுக்கு சுயமரியாதையையும், துணிச்சலையும் ஊட்டி வளர்க்கும் ஏசுன், இவர்கள் இருவரும் காதலுக்கு மட்டும் இலக்கணமானவர்களல்ல, சமூக மாற்றத்திற்கும் இலக்கணமானவர்கள்.
நீ இதை தான் செய்ய வேண்டும் என்று கட்டாயப்படுத்தும் பெற்றோர்கள் மத்தியில் உனக்கு பிடித்ததை செய், பிடிக்காததை செய்யாதே, நாங்கள் உன்னுடன் இருப்போம் என்று சொல்லும் பெற்றோர்கள் வரம், அப்பேற்பட்ட பெற்றோர்கள் தான் ஏசுனும், குவான்சிக்கும்.
காதலர்கள் வாழ்க்கை மகிழ்ச்சியுடனும், மனநிறைவுடனும் வாழ வேண்டுமென்றால் இருவருக்கிடையில் உள்ள அன்பும் புரிதல் மட்டும் போதாது.
அவ்வாழ்க்கையை தொய்வின்றி வாழ நல்ல மனிதர்களும் தேவைப்படுகிறார்கள்.
ஏசுன் – குவான்சிக் இருவரின் வறுமையிலும் இழப்பிலும் ஆதரவு கரங்களை நீட்டும் ஹென்யூக்களும், வீட்டின் உரிமையாளர்களும் முக்கியமானவர்கள்.
தோள் கொடுக்க மனிதர்கள் இருந்தால் உலகையே வெல்ல முடியும், அவர்களின் ஆதரவினாலும் இருவரும் நிறைவான வாழ்க்கையை வாழ்ந்துள்ளனர்.
காதலன் இறந்தால் காதலியும் இறந்துவிடும், அல்லது காதலி வாழ்க்கையில் துவண்டுவிடும் காட்சிகளைப் பார்த்து பழக்கப்பட்ட கண்கள் இத்தொடரின் மூலம் வாழ்க்கையின் எதார்த்தத்தையும், எல்லையற்ற காதலையும் காண்கிறது.
தன் உயிர்க் காதலன் இறந்தபோதிலும் ஏசுன் தான் வாழ்ந்த மனநிறைவான வாழ்க்கையின் சாட்சியாகத் தொடர்ந்து வாழ்கிறார்.
தன் 70 வருட காதலையும், வாழ்க்கையையும் கவிதைகளாக தொகுத்து குவான்சிக்கை பெருமையடைய செய்துள்ளார். ஏசுனின் இந்த நகர்வு பார்ப்பவர்களை நெகிழச் செய்கிறது.
வில்லன் இல்லை, சண்டைக் காட்சிகள் இல்லை, கற்பனைக் காட்சிகள் இல்லை. ஆனாலும், இந்தத் தொடர் மனதைத் திருடிவிட்டது. இது எளிமையான காதலர்களின் கதை, அவர்களின் அன்பின் கதை, உழைப்பின் கதை.
தொடரின் 16 பாகங்களிடம் அவர்களுடன் வாழ்ந்த என்னால் இன்னும் மீளமுடியவில்லை.
மனிதர்களின் வாழ்க்கை காதலால் மட்டுமே உயிர்ப்புடன் இருக்கிறது. வாருங்கள் காதலால் உயர்வோம்.
– கு.சௌமியா