திரைத் தெறிப்புகள் – 20:
*
மதச்சார்பின்மையை வலியுறுத்தி அந்தக் காலத்திலேயே பல நல்ல படங்கள் வெளிவந்திருக்கின்றன.
புத்த மதத்தைப் போற்றிய தமிழ்த் திரைப்படங்களும் வந்திருப்பது தமிழ்த் திரையுலகிற்கே உரித்தான ஓர் தனி அடையாளம் என்றுகூடச் சொல்லலாம்.
மதங்களை மீறிய மனிதப் பிணைப்பையும், குடும்ப உறவுகளின் பாசப் பிணைப்பையும் மையமாகக் கொண்டு பல படங்களை இயக்கியவர் இயக்குநர் பீம்சிங்.
பீம்சிங்கின் இயக்கத்திலும், எம்.எஸ். விஸ்வநாதன் மற்றும் ராமமூர்த்தியின் இசையமைப்பிலும் 1961-ம் ஆண்டில் வெளிவந்த ‘பாவ மன்னிப்பு’ திரைப்படம் மூன்று மதம் சார்ந்தவர்களின் ஒற்றுமையை வெளிப்படுத்திய சிறப்பான திரைப்படமாகும்.
அந்தப் படத்தில்,
“மனிதன் மாறிவிட்டான் – மதத்தில் ஏறிவிட்டான்”
– என்று துவங்கும் பாடலை இப்போது கேட்கும்போதும் அது எளிமையான கவித்துவத்தை வெளிப்படுத்துகிறது. மனிதநேயத்தையும் வெளிப்படுத்துகிறது.
“நிலை மாறினால் குணம் மாறுவான்
பொய் நீதியும் நேர்மையும் பேசுவான்
தினம் ஜாதியும் பேதமும் கூறுவான்
அதுவே தன் விதியென்று ஓதுவான்…”
– என்று தொடரும் அந்தப் பாடலில் அடுத்து இடம் பெற்றிருக்கும் இந்த வரிகள் அவ்வளவு சிறப்புடன் வெளிப்பட்டிருப்பதைப் பார்க்கலாம்.
“பறவையைக் கண்டான்
விமானம் படைத்தான்
பாயும் மீன்களில்
படகினைக் கண்டான்
எதிரொலி கேட்டான்
வானொலி படைத்தான்
எதனைக் கண்டான்?
பணம் தனைப் படைத்தான்?”
– என்று நிறைவு பெறும் இந்தப் பாடலை எழுதியிருப்பவர் கவியரசர் கண்ணதாசன்.
தலையில் தொப்பியை அணிந்து சிவாஜி நகர்ந்து செல்கிறபடி அமைந்திருக்கும் இந்தப் பாடல் காட்சியில் நடிகர் திலகம் சிவாஜியின் நடிப்பும், டி.எம்.சௌந்தர ராஜனின் அழுத்தான குரல் வளமும், பார்க்கிறவர்களுக்கு அற்புதமான அனுபவமாக அமைந்திருக்கும்.
கேட்பவர்களை மேலும் மென்மைப்படுத்தும் இப்படிப்பட்ட பாடலைத் தந்திருப்பதற்காக இயக்குநர் உள்ளிட்ட இந்தப் பாட்டின் பின்னணியில் இருந்த அனைவரையும் இப்போதும் வாழ்த்தத் தோன்றுகிறது.