ஒரு திரைப்படத்தால் பள்ளிக்கூடங்களில் சீர்திருத்தத்தை ஏற்படுத்த முடியுமா?
முடியும் என்கிறது – மலையாளத் திரைப்படம் ஒன்று. வகுப்பறையில் புதிய மாற்றத்தை உருவாக்கிய அந்தத் திரைப்படத்தின் பெயர் – ‘ஸ்தானார்த்தி ஸ்ரீகுட்டன்’. வினேஷ் விஸ்வநாத் இயக்கிய படம்.
அதன் கதைக்களம் தான் மாற்றத்துக்கான காரணம். இந்தப் படத்தில் கேரளாவின் கிராமப்புறத்தில் உள்ள அரசுப் பள்ளியில் நடக்கும் அன்றாட நிகழ்வுகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. பள்ளித் தேர்தலை மையமாகக் கொண்டு படம் சித்தரிக்கப்பட்டுள்ளது.
மாணவர்களிடையே நடக்கும் சண்டைகள், நட்புறவின் எளிய மகிழ்ச்சிகள், அவ்வப்போது ஏற்படும் மோதல்கள் போன்றவை சுவாரஸ்யமாகச் சொல்லப்பட்டுள்ளது.
பள்ளிகளில் மாணவர்கள் வரிசை வரிசையாக உட்கார வைக்கப்படுவது வழக்கம். முதல் வரிசை, இரண்டாம் வரிசை, மூன்றாம் வரிசை எனத் தொடர்ந்து கடைசி வரிசையும் இருக்கும். கெட்டிக்கார மாணவர்கள் முன் பெஞ்சிலும், படிப்பு மூளையில் ஏறாத மாணவர்கள் கடைசி பெஞ்சிலும் இருப்பார்கள்.
இத்தகைய வரிசை முறை, இந்தப் படத்தில் மாற்றப்பட்டுள்ளது. வகுப்பறையில் அரை வட்ட வடிவில் இருக்கைகள் உள்ளன. ஆசிரியர் நடுவில் நின்று அனைத்து மாணவர்களையும் நேரடியாக பார்த்து பாடம் நடத்துகிறார்.
படத்தில் வெளியான இந்தக் காட்சியை கேரளாவில் உள்ள பள்ளிகள் நடைமுறைப்படுத்த ஆரம்பித்துள்ளன. இதுவரை கேரளாவில் 6 பள்ளிகளில் மாணவர்கள் இருக்கை முறை அரைவட்ட வடிவுக்கு மாற்றப்பட்டுள்ளது. அதாவது, கடைசி பெஞ்ச் இல்லாத நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
கொல்லம் மாவட்டத்தில் உள்ள வலக்கம் ஆர்விவி மேல்நிலைப்பள்ளி முதன்முதலாக இத்தகைய மாற்றத்தை அமல்படுத்தியது. அதைத்தொடர்ந்து 5 பள்ளிகள் செய்துள்ளன. மேலும் பல பள்ளிகள் இருக்கை முறையில், இத்தகைய மாற்றத்தைக் கொண்டுவர முடிவு செய்துள்ளன.
– பாப்பாங்குளம் பாரதி.