‘இவருக்கு ஏன் வெற்றிப்படமே அமைய மாட்டேங்குது’ என்று ரசிகர்கள் மட்டுமல்லாமல், சக நாயகர்களே வருத்தப்பட்ட நடிகர் ஒருவர் உண்டு. அவர் வேறு யாருமல்ல, அருண் விஜய் தான். தொண்ணூறுகளின் மத்தியில் ‘முறை மாப்பிள்ளை’யில் அருண்குமார் என்ற பெயரில் அறிமுகமானது முதல் ‘ப்ரியம்’, ‘கங்கா கௌரி’, ‘துள்ளித் திரிந்த காலம்’, ‘கண்ணால் பேச வா’, ‘அன்புடன்’ என்று அந்த காலகட்டத்தில் ஒரு இளம் நடிகருக்கே உரிய அறியாமையை மீறி அமைந்திருந்தன இவரது கதைத் தேர்வுகள்.
பிறகு ‘பாண்டவர் பூமி’, ‘இயற்கை’, ‘ஜனனம்’, ‘அழகாய் இருக்கிறாய் பயமாக இருக்கிறது’ என்று தனது படங்கள் ஒவ்வொன்றிலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். பாத்திரத்திற்கு ஏற்பத் தனது தோற்றத்தை மாற்றிக் காட்டுவதில் மெனக்கெடலை வெளிப்படுத்தியிருந்தார்.
‘மலை மலை’, ‘மாஞ்சா வேலு’ என்று வழக்கமான ‘கமர்ஷியல்’ கதைகளிலும் தன்னால் பரிமளிக்க முடியும் என்று தமிழ் திரையுலகைச் சேர்ந்தவர்களுக்கு உணர்த்த முயன்றார். ஆனாலும், அவற்றுக்குப் பெரிய அளவிலான பலன்கள் கிடைக்கவில்லை. அந்தச் சூழலைத் தலைகீழாக்கி, அருண்விஜய்க்கு ஒரு அடையாளத்தைத் தந்தது மகிழ் திருமேனியின் ‘தடையறத் தாக்க..’!
வேறுபட்ட கதை சொல்லல்!
’தடையறத் தாக்க’ படத்தின் கதை நிச்சயம் புதிதல்ல. அதேநேரத்தில், அப்படத்தைப் பார்க்கையில் ‘இதுதான் கதை’ என்று நாம் உணர்வதற்குள் முக்கால்வாசி படம் ஓடி முடிந்திருக்கும். அந்தக் காட்சிகளைப் பார்ப்பதில் நமக்குக் குழப்பமோ, தயக்கமோ எழாது. அந்த வேறுபட்ட கதை சொல்லல் தான் அப்படத்தின் யுஎஸ்பி.
ஒருபக்கம் சிற்றூரில் இருந்து சென்னை வைந்து, மெதுவாக உழைப்பைக் கற்றுக்கொண்டு, ஒரு காரை ஓட்டி, அதனைச் சொந்தமாக வாங்குகிற அளவுக்கு உயர்ந்த செல்வா (அருண்விஜய்) எனும் இளைஞன். தற்செயலாக அவருக்கு அறிமுகமாகி, பின்னர் அவரது வாழ்க்கைத்துணையாக மாறுகிற பிரியா (மம்தா மோகன்தாஸ்) என்கிற இளம்பெண். பெருநகரமொன்றில் உழைப்பைத் தேடி ஓடுகிற நவீனப் பெண்கள் எவரோடும் அவரைப் பொருத்திப் பார்த்துக் கொள்ள முடியும்.
இந்த ஜோடி சந்தர்ப்ப சூழ்நிலையால் ஒரு ரவுடிக் கும்பலின் வெறியாட்டத்திற்கு ஆளாக நேரிடுகிறது.
அரசியல் செல்வாக்கைக் கொண்ட இரண்டு ரவுடிகள். இருவரும் சகோதரர்கள். அதிலொருவர், மாற்றாந்தந்தைக்குப் பிறந்தவர். நிறம், உருவம் என எல்லாவற்றிலும் இருவருக்கும் வேறுபாடு உண்டு. ஆனால், சிறுவனாக இருக்கையில் உயிரைக் காப்பாற்றியவர் என்பதால் அந்த தம்பிக்கு அண்ணன் மீது ‘ரொம்பவே’ மரியாதை. அந்த ஒரு வார்த்தைக்குப் பிறகே, தன் வாழ்க்கையில் மற்றனைத்தும் என்றிருப்பவர் அந்த தம்பி.
அப்படிப்பட்டவர் தனது அண்ணன் கொலையாகக் காரணம் செல்வா என்று நினைத்தால் என்னவாகும்? செய்யாத கொலைக்குத் தன்னை ஏன் துரத்துகின்றனர் என்ற கேள்விக்குச் செல்வா கண்டறியும் பதில் என்ன? உண்மையில் அந்த ரவுடியைக் கொன்றது யார்? என்ன காரணம்? அனைத்துக்கும் பதிலளிக்கிற இப்படத்தின் கிளைமேக்ஸை நோக்கி முக்கால்வாசி திரைக்கதை பரபரப்பதுதான் ‘தடையறத் தாக்க..’வின் சிறப்பு.
அந்த வகையில், இதுவரை தமிழ் திரையில் ரசிகர்கள் பார்த்துணராத அனுபவமொன்றைத் தந்தார் இயக்குனர் மகிழ் திருமேனி.
இப்படத்தின் வெற்றிக்குப் பிறகு, ‘அடுத்து எப்படிப்பட்ட கதையைத் தேர்ந்தெடுப்பது’ என்று நிறையவே குழப்பங்களை எதிர்கொண்டார் அருண் விஜய். நாயக வாய்ப்புகள் அருகியபோது ‘என்னை அறிந்தால்’, ‘ப்ரூஸ் லீ’, ‘சக்ரவியூஹா’ படங்களில் வில்லனாக நடித்தார். பிறகே ‘குற்றம் 23’, ‘செக்கச் சிவந்த வானம்’, ‘தடம்’ படங்களில் இடம்பிடித்தார்.
குறிப்பால் உணர்த்துதல்..!
‘முன்தினம் பார்த்தேனே’ படத்தில் இயக்குனராக அறிமுகம் ஆனவர் மகிழ் திருமேனி. அது ‘ரொம்-காம்’ வகைமையைச் சார்ந்தது.
அதற்குக் கொஞ்சமும் சம்பந்தமில்லாமல் ‘க்ரைம் ஆக்ஷன் த்ரில்லர் டிராமா’ வகைமையில் ‘தடையறத் தாக்க’வை தந்தார்.
மார்கன் ஆண்டனி என்ற பெயரில் உதவி இயக்குனராக இவரது பெயர் ‘காக்க.. காக்க..’, ‘வேட்டையாடு விளையாடு’ படங்களில் இடம்பெற்றிருக்கும். அப்படங்களில் வில்லன் பாத்திர வார்ப்புகளில் இவரது பங்களிப்பு உண்டு எனச் சொல்லப்படுகிறது.

இருண்மை நிறைந்த மனிதர்கள், இடங்கள், உணர்வுகளை வெளிப்படுத்துகிற வகையில் ’தடையறத் தாக்க..’வில் எம்.சுகுமாரின் ஒளிப்பதிவு அமைந்திருந்தது. ஒவ்வொரு பிரேமும் செறிவு நிறைகிற வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தது. எந்தவொரு காட்சியிலும் வேண்டாத ஷாட்கள் இல்லை எனும் அளவுக்குக் கனகச்சிதமாக அமைக்கப்பட்டிருந்தது பிரவீன் கே.எல்., என்.பி.ஸ்ரீகாந்தின் படத்தொகுப்பு.
தமன் இசையில் பாடல்கள் ஓகே ரகம் என்ற விமர்சனங்களைப் பெற்றாலும், பின்னணி இசை ரசிகர்களை இருக்கையின் நுனிக்கு இழுத்து வந்தது.
இது போக அருண் விஜய் – மம்தாவின் காதல் காட்சிகள், அருண் விஜய் நண்பர்களாக வருபவர்களின் காமெடி மற்றும் செண்டிமெண்ட் காட்சிகள், வம்சி கிருஷ்ணா – மகா காந்தியின் வில்லத்தனம், ‘நான் பூந்தமல்லி’ பாடலுக்கு நடனமாடிய டெபி தத்தாவின் கவர்ச்சி என்று பல விஷயங்கள் படத்தின் நிறத்தை வேறாக உணரச் செய்தன.
இத்தனைக்கும் இப்படத்தின் கதையைத் தனக்கு உடல்நலமில்லாத பொழுதில் எழுதத் தொடங்கினாராம் மகிழ் திருமேனி. படம் பார்த்து முடிக்கையில், அந்த ‘சிக்னெஸ்’ நம்மை தொற்றியதை உணர முடியும். அனைத்தையும் மீறி, திரைக்கதையில் இருக்கிற ‘டீட்டெய்லிங்’ நம்மை வியக்க வைக்கும்.
சிறிய விஷயம் என்று நினைக்கிறவை எப்படி திரைக்கதையின் திருப்புமுனைகளாகத் திகழ்கின்றன என்று உணர்த்திய வகையில் மகிழ் திருமேனி இதில் ஆச்சர்யப்படுத்தியிருப்பார்.
சண்டைக்காட்சியொன்றில் அருண் விஜய் தனது முகத்தை மூடியவாறு வில்லனின் ஆட்களைப் பந்தாடுவார். அந்த துணியைப் பின்பாதியில் அதே ரவுடிகள் காண நேர்வது ஒரு திருப்பத்திற்கு வழி வகுக்கும். போலவே, வில்லனைக் கொலை செய்த இரும்புத்தடி நாயகனின் காரில் இருக்கும்.
அனைத்துக்கும் மேலாக, கதையின் முக்கிய முடிச்சையே நமக்கு முன்பாதியில் குறிப்பால் உணர்த்தியிருப்பார் மகிழ் திருமேனி. இவர்தான் கொலையாளி என்று காட்டியிருப்பார். கிளைமேக்ஸில் அது தெரிய வரும்போது, ‘முன்னாலயே லேசா மனக்கண்ணுல நிழலாடுச்சே’ என்று யோசிக்க வைத்தது.
இவர் இயக்கிய ‘மீகாமன்’ படத்திலும் இது போன்ற ‘குறிப்பால் உணர்த்துதலை’க் கையாண்டிருப்பார் மகிழ் திருமேனி. நாயகன் வில்லனைக் கண்காணிப்பது போல, வில்லனின் ஆட்களும் நாயகனைக் கண்காணித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் என்பதை முன்பாதியிலேயே நமக்கு சூசகமாகச் சொல்லியிருப்பார்.
‘தடம்’ படத்தில் கொலையொன்றில் இரட்டைச் சகோதரர்களில் ஒருவர் ஈடுபட, அது யார் என்று கண்டறிய முடியாமல் காவல் துறையினர் தடுமாறுவதாகத் திரைக்கதை நகரும். இருவருமே கொலையாளிகள் தான் என்பதாகச் சாட்சியங்கள் கிடைக்கும்.
ஆனாலும், அந்த இருவர் வருகிற ஒவ்வொரு காட்சியின் பிரேமும் குறிப்பிட்ட வண்ணங்களில் இருப்பதாக வடிவமைத்திருப்பார் மகிழ் திருமேனி.
முன்பாதியில் வரும் கொலைக்காட்சியில் என்ன வண்ணம் நிறைந்திருந்தது என்று நாம் நினைவில் கொண்டு வருவதற்குள் படம் கிளைமேக்ஸை எட்டியிருக்கும். கிட்டத்தட்ட ஒரு விடுகதை அல்லது புதிர்போட்டியில் நம்மோடு இணைந்து விளையாடுவது போன்ற கதை சொல்லலை அப்படங்களில் கையாண்டிருந்தார் மகிழ் திருமேனி.
அவரது ‘கலகத்தலைவன்’ படம் கூட அப்படித்தான் அமைந்திருந்தது. அதில் பெருமளவில் தோற்றது ‘விடாமுயற்சி’ மட்டுமே. அதேநேரத்தில், அதன் ஆக்கத்தை நம்மால் குறை சொல்லவே முடியாது. மகிழ் திருமேனின் திரை வாழ்வில், அது தோல்வியுற்ற ஒரு முயற்சி. அவ்வளவுதான்.

‘விடாமுயற்சி’க்குப் பிறகு மகிழ் திருமேனி இயக்குகிற படம் என்னவாக இருக்கும்? எப்படிப்பட்டதாக அமையும்? இக்கேள்விகளுக்கு இப்போது வரை அவர் தரப்பில் பதில் இல்லை.
ஆனால், ‘தடையறத் தாக்க’ போன்று கவனத்தை ஈர்க்கிற திரையனுபவமாக அப்படம் நிச்சயம் அமையும்.
அந்த நம்பிக்கையைத் தரவிருக்கிறது ‘தடையறத் தாக்க’வின் மறு வெளியீடு குறித்த செய்தி. வரும் 27-ம் தேதியன்று இது தியேட்டர்களில் வெளியாகப் போகிறது.
இப்போதிருக்கிற 4கே, அட்மாஸ் தொழில்நுட்பங்களில் புதுப்பிக்கப்பட்டு வெளியாகிறது இப்படம்.
கில்லி, சச்சின், பில்லா போன்று ரீரிலீஸில் இப்படம் சாதனை படைக்குமா என்று தெரியவில்லை. ஆனால், படம் வெளியானபோது அதனைக் காணாத பல ரசிகர்கள் நிச்சயம் இப்போது தியேட்டர்களில் திரள்வார்கள். அதற்கேற்பத் தங்களுக்கென்று தனித்துவமான ரசிகர்களை அருண் விஜய், மகிழ் திருமேனி மட்டுமல்லாமல் இசையமைப்பாளர் தமன் உட்படப் படத்தோடு சம்பந்தப்பட்ட சில பிரபலங்கள் பெற்றிருக்கின்றனர்.
‘தடையறத் தாக்க’ மறுவெளியீடு சம்பந்தப்பட்ட பிரபலங்களுக்கு ஏதேனும் ஒரு வகையில் பலன் அளிக்கட்டும்..!
– மாபா