விக்ரம் பிரபு, எல்.கே.அக்ஷய் குமார், அனிஷ்மா அனில்குமார், ஆனந்தா தம்பிராஜா, ரம்யா சுரேஷ், இசக்கி நடிப்பில், இயக்குநர் தமிழ் கதை, வசனம் எழுத,
அவரோடு சேர்ந்து திரைக்கதை எழுதி, சுரேஷ் ராஜகுமாரி இயக்கி இருக்கும் படம் ‘சிறை’. செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரித்திருக்கிறார்.
காவல்துறையின் ஒரு பிரிவான ஏ.ஆர் (A.R) எனப்படும் ஆர்ம்டு ரிசர்வ் (ARMED RESERVE) பிரிவில் ஏட்டாகப் பணியாற்றும் நபர் கதிரவன் (விக்ரம் பிரபு). அவனது மனைவி மரியமும் (ஆனந்தா தம்பிராஜா) காவல்துறையில் பணியாற்றுபவள்தான்.
விசாரணைக் கைதிகளைப் பொதுப் போக்குவரத்தில் சிறையில் இருந்து அழைத்துச் சென்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விசாரணைக்குப் பிறகு மீண்டும் கொண்டுவந்து சேர்க்கும் பணியில் கதிரவன் உடன் வரும் இரண்டு போலீஸ்காரர்களும் தண்ணி வண்டிகள். அதில் ஒருவன் கோபக்காரன்.

அழைத்துக் கொண்டு போகும் இளைஞனான கைதி அப்துல் ரவூப் (எல்.கே.அக்ஷய் குமார்) அப்பாவியாகவும் தோன்றுகிறான்.
நல்லவன் நடிக்கிறான் என்றும் தோன்றுகிறது. அதே நேரம் காவலர்களுக்கு நல்ல ஒத்துழைப்பும் கொடுக்கிறான்.
பேருந்தில் ஏறுவதற்கு முன்பு சக காவலர்கள் இருவரும் குடித்துவிட்டு உடன் வர, விக்கிரவாண்டியில் பஸ் நிற்கும்போது, மஃப்டியில் இருக்கும் கோபக்கார காவலருக்கும் பயணி ஒருவருக்கும் சண்டை வர,
காவலர் என்று தெரியாமல் அந்த பயணியின் நண்பர்கள் குடிகாரக் காவலரை அடிக்க, அதில் கவனம்போக, சில நிமிடங்களில் கைதி எங்கே என்று பார்த்தால்.. துப்பாக்கியோடு எஸ்கேப்!
சிவகங்கை மாவட்ட கிராமம் ஒன்றில் ஒரே ஒரு முஸ்லீம் வீடு மட்டும் இருக்கும் ஊரில், அப்பா இறந்த நிலையில் அம்மாவுடன் (மலையாள நடிகை ரெம்யா சுரேஷ்) வாழும் இஸ்லாமிய இளைஞன் அப்துல் ரவூப்.
அந்த ஊரைச் சேர்ந்த கலையரசிக்கும் (மலையாள நடிகை அனிஷ்மா அனில்குமார்) அவனுக்கும் காதல்.
கலையரசியின் குடிகாரத் தாய்மாமன் (இசக்கி) அப்துல் ரவூப்பிடம் அந்த நீலப்பட கேசட் கேட்க, அப்துல் இல்லை என்று சொல்ல, அப்துலை தாய்மாமன் அடிக்கிறான். பிரச்சினை பெரிதாகிறது.
கலையரசியைக் காப்பாற்ற அப்துல் ரவூப் கலையரசி வீட்டுக்குள் நுழைய, “என்ன இருந்தாலும் ஒரு முஸ்லிம் பையன் எப்படி வீட்டுக்குள் நுழையலாம்” என்று அப்துல் ரவூப் மீதுதான், கோபப்படுகிறது கலையரசியின் குடும்பம்.

அடுத்தடுத்து நடக்கும் சம்பவங்களால் அப்துல் ரவூப் கைதாகிறார்.
இளகிய மனம் கொண்ட கதிரவன், அப்துல் ரவூப்புக்கு உதவ முயல, ‘விசாரணைக் கைதியை அழைத்துக் கொண்டு போய், அழைத்துக் கொண்டு வரும் வேலையை மட்டும் செய்’ என்று காவல் துறை உட்பட, அனைத்து அரசு எந்திரங்களும் கதிரவனை உருட்ட,
அப்துல் ரவூப்புக்கு என்ன நடந்தது? கலையரசியுடனான அவனது காதல் சிறையில் இருந்து விடுதலை ஆனதா இல்லையா என்பதே இந்த ‘சிறை’.
‘டாணாக்காரன்’ படத்தை இயக்கியவரும் நடிகருமான தமிழ், காவல் துறையில் பணியாற்றியவர்.
அவனது பணி அனுபவத்தில் இருந்து விசாரணைக்கு கைதிகளுக்கு ‘எஸ்கார்ட்’டாகப் போகும் காவலர்கள் மற்றும் கைதி சம்மந்தப்பட்ட நிகழ்வுகளை வைத்து எழுதிய கதை என்பதால், அந்த நடைமுறைகள், உரையாடல் வார்த்தைகள், சூழல் உருவாக்கம் யாவும் மிகச் சிறப்பாக இருக்கிறது.
கதாபாத்திரங்களுக்கு ஏற்படும் பதைபதைப்பு நம்மையும் தொற்றிக் கொள்ளும் வகையில், இயக்குநராக ஜெயிக்கிறார் சுரேஷ் ராஜகுமாரி.
மனசாட்சியின் முனகல்களுக்கு காது கொடுக்கும் கதிரவன் கதாபாத்திரத்துக்கு, சற்றே கூச்ச சுபாவமும் தயக்கமும் ஒரு சல்லாத் துணி போல மென்மையும் கொண்ட விக்ரம் பிரபுவின் நடிப்பு அற்புதமாக பொருந்துகிறது.
இதுவரை அவர் நடிப்பில் எதைக் குறை என்று சொன்னார்களோ அதையே இந்தப் படத்துக்கு பலமாகக் காட்டிய விதத்திலும் இயக்குநரின் திறமை ஜொலிக்கிறது.
முதல் படம் என்பதே தெரியாத அளவுக்கு அற்புதமாக நடித்துள்ளார் எல்.ஏ. அக்ஷய் குமார்
“சார்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்…” என்ற அவரது உயிர் நடுங்கும் ஓலக்குரல் இதயத்தை அதிர வைக்கிறது.
கலையரசி கேரக்டர் மூலம் படத்தைத் தூக்கிச் சுமக்கிறார் அனிஷ்மா அனில்குமார்.

ஆதரவு இல்லாத நிலையில் இறுகிய முகத்தோடு கண்ணீர் வடிக்கும் கல்லாக சமைந்து உட்கார்ந்திருக்கும் விதம்… அனிஷ்மா… ஸோ நைஸ் மா!
தாய்மாமனாக வரும் இசக்கி தியேட்டர் பக்கம் போனால் பாதுகாப்பாக போகவும். இதுதான் அவருக்கான பாராட்டு.
படம் ஆரம்பிப்பதற்கு முன்பு அட்டகாசமான பின்னணி இசையிலேயே படத்தைத் தூக்கிப் பிடிக்கிறார் ஜஸ்டின் பிரபாகரன்.
அடுத்து மாதேஷ் மாணிக்கத்தின் ஒளிப்பதிவு, பிலோமின் ராஜ் எடிட்டிங் இவையும் படத்துக்கு பாதுகாப்பான ஆக்கப்பூர்வமான சின்சியரான எஸ்கார்ட் ஆக கூடவே போகிறது.
இது கற்பனைக் கதை அல்ல. பேண்டஸி படம் அல்ல.
ரத்தமும் சதையும் கண்ணீரும் வியர்வையும் அலறலும் கதறலுமாய் நிகழும் யதார்த்தம். இதில் லாஜிக் முக்கியம்.
பொதுவாக ஒரு பேருந்தில் ஒரு கைதியை போலீஸ் எஸ்கார்ட் ஆக கொண்டு சொல்கிறார்கள் என்றால், அந்த பஸ்ஸின் டிரைவர், கண்டக்டருக்கு அது தெரிவிக்கப்படும். அது அவர்கள் கடமை அல்ல என்றாலும் அரசுப் பேருந்து எனில் அது அவர்களுக்கும் பொறுப்பு.
அப்படி ஒருமுறை ஒரு கைதி தப்பித்தபோது, அந்த அரசுப் பேருந்து ஓட்டுநர், நடத்துனருக்கும் கூட கேள்வி போனது என்று படித்த ஞாபகம்.
பொதுவாக, அப்படிப் பயண வழியில் வண்டியை நிறுத்தி மீண்டும் எடுக்கும்போது, எல்லோரும் ஏறி விட்டார்களா என்று பார்த்து விட்டுத்தான் வண்டியை எடுப்பார்கள். சிலர் அலட்சியமாக எடுப்பதும் உண்டு.
ஆனால், கைதிகள் கொண்டு செல்லப்படும் பஸ்களை அப்படி எடுக்க மாட்டார்கள்.
இந்தப் படத்தில் போலீஸ் ஏறுவதற்குள் ஏன் பஸ்ஸை எடுத்தீர்கள் என்று கேட்கும்போது, பஸ் டிரைவர், கண்டக்டர் பேசுவது போல எல்லாம் பேச முடியாது.
பாதிக்கப்பட்ட கைதியின் உண்மை நிலை உணரும் ஒரு நீதிபதி, ”நீ குற்றத்துக்கு மேலாக தணடனை அனுபவித்து விட்டாய். அடுத்த விசாரணையில் உன்னை விடுதலை செய்து விடுகிறேன்” என்று சொல்கிறார்.

ஆனால், அடுத்த விசாரணை வரும்போது நீதிபதி மாறி விடுகிறார். வந்த புதிய நீதிபதிக்கு முந்தைய நீதிபதி சொன்னதே தெரியவில்லை. விடுதலை செய்ய முடியாது என்கிறார்.
எனில், முந்தைய நீதிபதி குறிப்பு எதுவும் எழுதி வைக்க மாட்டாரா? அது புதிய நீதிபதிக்கு தெரியாதா?.
தப்பி ஓடியவனிடம், ”ஏன்டா திரும்பி வந்த?” என்று கேட்கும்போது,
“கை விலங்கோட, கையில் துப்பாக்கியோடு நான் எங்க போய் தப்பிக்க முடியும். நான்தான் முஸ்லீம் ஆச்சே…” என்கிறான். (அப்ப மத்தவன் எல்லாம் தப்பிக்க முடியுமா?)
அதே போல கதிரவனுக்கே தெரியாமல் அந்த துப்பாக்கியில் தோட்டா லோட் செய்யப்பட்டு இருக்கிறது.
காரணம், கைதி முஸ்லிம் என்பதால், கதிரவனோடு கூட வரும் போலீசுக்கு, அவனை சுட்டுவிட மறைமுகக் கட்டளைக் கொடுக்கப்பட்டு இருக்கிறதாம்.
கதை எங்கே நடக்குது? தமிழ்நாட்டில்!
ஈழத்துக்காக தீக்குளித்த முதல் தமிழ்நாட்டுத் தமிழன் ஒரு முஸ்லீம் என்பதை ஆயிரம் முறை சொல்வோம். குன்றேறி நின்று முழங்குவோம். நியாயம்.
ஆனால், ஒருவன் முஸ்லீம் என்பதற்காக அவனை அவன் குடும்பத்தைத் தள்ளி வைக்கும் கிராமம் சிவகங்கை பக்கம் எங்கேப்பா இருக்கு?
எங்கள் சாதிப் பெண்ணை முஸ்லிம் பையன் காதலிப்பது பிடிக்கவில்லை என்று சொல்லும் சமூகங்கள் உண்டு. ஆனால், முஸ்லீம் என்பதால் அவர்களை தமிழகம் தாழ்த்தப்பட்டவர்களாகப் பார்க்கிறது என்பது என்ன கதை?
வட இந்தியாவில் மிரட்டப்பட்ட காரணத்தால் பலர் முஸ்லிம்களாக மாறினார்கள். ஆனால், தமிழகத்தைப் பொறுத்தவரை முஸ்லிம்களாகவும் கிறிஸ்தவர்களாகவும் மாறிய தாழ்த்தப்பட்ட மக்கள், அதன் மூலம் சாதிய இழிவைத் துடைத்து எறிந்தார்கள் என்பதுதானே தமிழகத்தின் கம்பீர வரலாறு!
பொதுவாக, கோவை குண்டு வெடிப்புக்குப் பிறகு இஸ்லாமிய கைதிகள் மிகவும் கடுமையாக கண்காணிக்கப்பட்டார்கள். அவர்களில் விசாரணைக் கைதிகளாக இருந்தால் அவர்களின் விசாரணை சீக்கிரம் முடியாமல் இழுத்தடிக்கப்பட்டது உண்மைதான்.
ஆனால், எப்போதுமே அதே கட்டுப்பாடுதான் என்பது என்ன நியாயம்?

இப்போதும் சிக்கந்தர் மலை விவகாரம் வரை பொது மக்களும் அரசும் யாருக்கு ஆதரவாக இருக்கிறது?
எங்கோ உத்திரப்பிரதேசத்திலும் குஜராத்திலும் சொல்ல வேண்டிய கதையை தமிழ்நாட்டில் நடப்பதாகச் சொல்லி என்ன சாதிக்க விரும்புகிறீர்கள்? தைரியம் இருந்தால் அங்கே போய்ச் சொல்லுங்கள்.
தமிழ்நாட்டில் நடக்கும் தவறுகளை நியாயமாக சொல்லுங்கள். அது பாதிக்கப்படுபவனின் உரிமை.
ஆனால், தமிழ்நாட்டில் இல்லாததை எல்லாம் இருப்பதுபோல ஆக்கி, ஏன் தமிழ் நாட்டையே முதுகில் குத்திக் கொண்டு இருக்கிறீர்கள்?
‘சிறை’ – படைப்பாக பால். கருத்தியலாக விஷம்.
– சு.செந்தில் குமரன்