சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்க, சுதா கொங்கரா இயக்கியுள்ள படம் ‘பராசக்தி’. இந்த படத்தின் டைட்டிலை அறிவிக்கும்போது முதல் சிக்கல் ஆரம்பமானது. படத்தின் தலைப்புக்கு சிவாஜி ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
சிவாஜி நடித்த முதல் படத்தின் டைட்டில் ‘பராசக்தி’ என்பதால் அவரது ரசிகர்கள், போர்க்கொடி உயர்த்தினர். தயாரிப்பு நிறுவனம் கண்டு கொள்ளவிலை. சிவாஜி ரசிகர்களும் அடங்கிப்போக நேர்ந்தது.
‘பராசக்தி’ படத்தைத் தயாரிப்பவர் ஆகாஷ் பாஸ்கரன். கொஞ்ச நாட்களுக்கு முன் இவர், ஒரு வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறையின் வளையத்தில் மாட்டினார். அதிலிருந்து அவர் தற்காலிகமாக விடுதலைப் பெற்றுள்ளார்.
இந்த நிலையில், அடுத்த மாதம் 10 ஆம் தேதி பராசக்தி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள சூழலில் மீண்டும் சிக்கலில் சிக்கியுள்ளது.
‘இந்தப் படத்தின் கதை என்னுடையது’ என உரிமை கொண்டாடி, இணை இயக்குநர் ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
மனுவில் அவர் ‘இந்தித் திணிப்பை எதிர்த்து நடத்தப்பட்ட மொழிப்போரை மையமாக வைத்து ‘செம்மொழி’ என்ற பெயரில் கதை எழுதி தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் பதிவு செய்துள்ளேன்.
‘செம்மொழி’ கதையைத் திருடி ‘பராசக்தி’ என்ற பெயரில் தயாரித்துள்ளனர். எனது கதையையும், பராசக்தி கதையையும் ஒப்பிட்டுப் பார்த்து ஆய்வு செய்ய நிபுணர் குழுவை அமைக்க வேண்டும். அதுவரை ‘பராசக்தி’ படத்தை வெளியிடத் தடை விதிக்க வேண்டும் என கூறியுள்ளார்.
இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பாக விசாரணைக்கு வந்தது. அவர் பிறப்பித்த உத்தரவு :
“படத்தின் கதையும், ராஜேந்திரன் கதையும் ஒன்றுதானா என்பதை தென்னிந்திய எழுத்தாளர் சங்கம் விசாரித்து, அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
ராஜேந்திரன் தாக்கல் செய்த மனுவுக்கு ‘பராசக்தி’ தயாரிப்பு நிறுவனமும், திரைப்பட எழுத்தாளர்கள் சங்கமும் பதிலளிக்க வேண்டும்” என ஆணை பிறப்பித்த நீதிபதி, விசாரணையை வரும் 2 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
– பாப்பாங்குளம் பாரதி