Take a fresh look at your lifestyle.

விஜய்யின் ‘வில்லத்தனம்’ காட்டிய ‘ப்ரியமுடன்’!

தமிழ் திரையுலகில் முன்னணி நாயகர்களாக இருந்த, இருக்கிற நடிகர்களில் பெரும்பாலானோர் வில்லன்களாக, ஆன்ட்டி-ஹீரோக்களாக தோன்றியதுண்டு. ஒரேமாதிரியான பாத்திர வார்ப்புகள் ரசிகர்களைச் சலிப்படைய வைத்துவிடக் கூடாது என்பதே அதன் பின்னிருந்த நோக்கம்.

அது மட்டுமல்லாமல், வழக்கத்திற்கு மாறான நடிப்பை இவரால் தர இயலும் என்று ரசிகர்கள் மார்தட்டிக்கொள்வதற்கான வாய்ப்புகளை அப்படங்கள் தரும். சிறு வயதினர் மட்டுமே அப்படியான படங்களைக் கண்டு மனம் தொய்வடைந்து போவார்கள். இதர ரசிகர்களுக்கு அது கொண்டாட்டத்தையே தரும்.

இன்னொரு பக்கம் வில்லன்களாக நடித்த பலர் நாயகர்களாக உருமாறுவதற்கான வாய்ப்புகளாக, இது போன்ற கதைகளைப் பயன்படுத்திக் கொண்டதுண்டு. ‘சாவி’ படம் வழியே சத்யராஜ் அதனைச் சாதித்தார். தொண்ணூறுகளில் ஆனந்தராஜ், சரத்குமார் போன்றவர்கள் அதனைச் சோதித்துப் பார்த்தார்கள். எழுபதுகளின் இறுதியில், வில்லனாக இருந்து நாயகனாகிப் பலருக்கு வழிகாட்டியாக மாறினார் ரஜினிகாந்த். ‘பைரவி’ போன்ற படங்களில் அவரது பாத்திரங்கள் வில்லத்தனம் கலந்த ஹீரோவாக வார்க்கப்பட்டிருக்கும்.

தொண்ணூறுகளின் இறுதியில் விஜய்யும் அஜித்தும் அந்த வார்ப்பைக் கொண்டு தமது ரசிகர்களைத் திருப்திப்படுத்த முயன்றனர்.

அஜித்துக்கு ‘வாலி’ ஒரு வெற்றிப்படம் என்றால், விஜய்க்கு அப்படியொரு வெற்றியாக அமைந்தது ‘ப்ரியமுடன்’. வின்சென்ட் செல்வா இயக்கிய இப்படத்தில் விஜய் மில்டன் ஒளிப்பதிவையும் வாசு – சலீம் படத்தொகுப்பையும் கையாண்டிருந்தனர். தேவா இசையமைத்திருந்தார்.

விஜய் உடன் கவுசல்யா, சுஜித் சாகர், ஜெய்கணேஷ், நாசர், மணிவண்ணன், மதன் பாப், கே.பி.மோகன், எஸ்.என்.சுரேந்தர், டி.பி.கஜேந்திரன் உட்படப் பலர் நடித்திருந்தனர்.

வித்தியாசமான ‘விஜய்’!

திரையில் விஜய்யை ஜாலியான, கேலியும் கிண்டலும் நிறைந்த, துடிப்புமிக்க, உறவுக்காகவும் நட்புக்காகவும் தன்னுயிரைக் கொடுக்க நினைக்கிற வாலிபராகவே பார்த்து வந்தனர் ரசிகர்கள். பூவே உனக்காக, காதலுக்கு மரியாதை படங்கள் வழியே அவரது ‘மார்க்கெட் வேல்யூ’ எகிறியது போலவே ரசிகர்களின் எண்ணிக்கையும் பல மடங்கானது.

இளைய தலைமுறையினர் தங்களுக்குப் பிடித்தமானவராக அவரைக் கொண்டாட, பெரியவர்களோ ‘இவர் நம்ம வீட்டு பையன் மாதிரி இருக்காரே’ என்று நினைத்தார்கள். அந்த பிம்பத்தை உடைத்துக்கொண்டு, ‘ப்ரியமுடன்’ படத்தில் வில்லத்தனம் கலந்த நாயகனாக வந்தார் விஜய். காதலுக்காக எதையும் செய்யத் துணிகிற ஒரு பாத்திரத்தை ஏற்றார்.

இந்த படத்தில் விஜய் மற்றும் அவரது நண்பராக வருபவர் பெயர்கள் ‘வசந்த்’ என்று வடிவமைக்கப்பட்டிருந்தன. அந்த பெயர் ஒற்றுமையைப் பயன்படுத்தி, முதல் பார்வையில் காதல்வயப்பட்ட பிரியாவை (கவுசல்யா) கவர முயலும் விஜய் பாத்திரம். அந்த உண்மை உடைபடுகிறபோது, சம்பந்தப்பட்டவர்களை விஜய் கொலை செய்வதாகக் கதை நகரும்.

இதே கதையை நகைச்சுவையாகவும் சொல்ல முடியும். முழுக்க ‘ட்ராமா’வாகவும் சொல்ல முடியும். ஆனால் கொலை, விசாரணை என்று ‘ஆக்‌ஷன் த்ரில்லர்’ ஆக மாற்றியிருந்தார் வின்சென்ட் செல்வா.

அமீர்கானுக்காகத் தயார் செய்யப்பட்ட ‘டர்’, ‘பாஸிகர்’ படங்களில் நடித்து பாலிவுட்டின் முன்னணி நாயகன் ஆனார் ஷாரூக்கான். பின்னாட்களில் அதே வில்லத்தனம் கலந்த நாயக பாத்திரங்களை ‘டூப்ளிகேட்’, ‘டான்’, ‘ஃபேன்’ போன்ற படங்களில் ஏற்றார்.

பாபி தியோல், கஜோல், மனீஷா கொய்ராலா நடித்த ‘குப்த்’ படம் ஒரு முக்கோணக் காதல் கதையைக் கொண்டது. அதில் கஜோல் பாத்திரம் வில்லத்தனம் மிகுந்தது என்பது கிளைமேக்ஸில் தெரிய வரும்.

கிட்டத்தட்ட அந்த படங்களின் சாயலை நிறையவே ஏந்தியிருந்தது ‘ப்ரியமுடன்’ கதை.

அதேநேரத்தில், முக்கால்வாசி படம் வரை விஜய் ரசிகர்கள் படத்தில் இருந்து விலகிவிடாமல் இருக்கும் வகையில் பாட்டு, பைட், டான்ஸ் என்று ஒரு வெற்றிகரமான கமர்ஷியல் படைப்புக்குரிய உள்ளடக்கத்தைத் தந்திருந்தார் வின்சென்ட் செல்வா.

தேவா இசையில் பாரதிக்கு கண்ணம்மா, பூஜா வா பூஜா வா, மௌரியா, ஒயிட் லக்கான் கோழி, ஆகாஷவாணி பாடல்கள் அடிக்கடி பொதுவெளியில் கேட்கும் ரகத்தில் அமைந்திருந்தன.

இந்த படத்திற்காக, விஜய் பாத்திரம் உயிர் பிழைப்பதாக ஒரு கிளைமேக்ஸை இயக்குனர் உருவாக்கியிருக்கிறார். ஆனாலும், அதைவிடத் தற்போதைய கிளைமேக்ஸே பார்வையாளர்களைக் கதையுடன் ஒன்றச் செய்யும் என்பதில் உறுதியாக இருந்திருக்கிறார். அவரது முடிவுக்கு ரசிகர்கள் வெற்றியைப் பரிசளித்தனர். சிலர் இப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெறவில்லை என்று கருத்து தெரிவித்தனர்.

அது விஜய் மனதில் பெரிய தடத்தை ஏற்படுத்தியதா என்று தெரியவில்லை. சில ஆண்டுகளுக்கு அவர் இது போன்ற கதைகளையே தேர்ந்தெடுக்கவில்லை.

பின்னர் ‘அழகிய தமிழ்மகன்’, ’கத்தி’ படங்களில் வில்லத்தனம் காட்டும் வேடங்களை ஏற்றார். அவற்றிலும் கூட, மனம் திருந்தி நாயகனாக மாறுவதாகவே அப்பாத்திரங்கள் வடிவமைக்கப்பட்டிருந்தன.

ஆதலால், விஜய்யைத் திரையில் வித்தியாசமாகக் காட்டிய படங்களில் ஒன்று என ‘ப்ரியமுடன்’ படத்தைத் தாராளமாகச் சொல்லலாம்.

ஒரு பயிற்சி..!

இன்றிருக்கும் நாயக நடிகர்களில் பலர், பெரும்பாலான திரைப்படங்களில் ஒரேமாதிரியான பாத்திர வார்ப்புகளையே ஏற்கின்றனர். உடன் நடிப்பவர்கள், பாடல் உள்ளிட்ட உள்ளடக்கம், காட்சிகளில் மாற்றம் இருக்கிறதே தவிர அவர்களது பாத்திரங்களில் எந்த வித்தியாசமும் இல்லை.

தொடர்ந்தாற்போல ஐந்து அல்லது பத்து படங்கள் அப்படி நடித்தாலே ரசிகர்களுக்கு ‘போர்’ அடித்துவிடும். இன்றைக்கு பல தெலுங்குப் படங்கள் அப்படியான சூழலையே உருவாக்கி வருகின்றன.

பூவே உனக்காக, கோயம்புத்தூர் மாப்ளே உள்ளிட்ட ஆரம்பகாலப் படங்களிலேயே நகைச்சுவையை விஜய் முயற்சி செய்து பார்த்தாலும் ‘பகவதி’, ‘கில்லி’ படங்களுக்குப் பிறகே அத்தகைய காட்சியமைப்பில் அவர் அசத்தத் தொடங்கினார்.

அதற்கு முன்னதாக, வழக்கத்திற்கு மாறான முயற்சிகளில் இறங்குவதற்கான பயிற்சியாக ‘ப்ரியமுடன்’ போன்ற கதைகளைக் கையிலெடுத்தார்.

இன்றைக்கு கேங்க்ஸ்டர் மற்றும் மர்டர் மிஸ்ட்ரி வகைமை கதைகள் இதுபோன்ற வில்லத்தனமான பாத்திரங்களை நாயகர்களாகக் காட்டுகின்றன. அதனால், இன்றைய நாயகர்கள் அவற்றுக்கு முன்னுரிமை தருகின்றனர்.

எண்பதுகளில் ‘பேமிலி ஆடியன்ஸ்’ என்றொரு கூட்டத்தையே தனது பலமாகக் கொண்டிருந்தார் மோகன். ஆனால், அப்போதும் வில்லத்தனம் நிறைந்த பாத்திரங்களை ஏற்க அவர் தயங்கியதில்லை. ’நூறாவது நாள்’, ‘விதி’, ‘மனிதன் மாறிவிட்டான்’ போன்ற படங்களே அதற்குச் சாட்சி.

ஆனால் விஜய், அஜித் காலகட்டத்தில் அதற்கான வாய்ப்புகள் அருகிப் போயின. அவர்களே ஆண்டுக்கு ஒன்று அல்லது இரண்டு படங்கள் என்று கணக்கைச் சுருக்கியதால், அதுபோன்ற கதைகளுக்கு இடமில்லை என்ற நிலை உருவானது. அதையும் மீறி, ‘மங்காத்தா’ தந்தார் அஜித். ’அஞ்சாதே’வில் பிரசன்னா, ‘நாணயம்’மில் சிபிராஜ், ‘என்னை அறிந்தால்’ படத்தில் அருண் விஜய் போன்றோர் அது போன்ற பாத்திரங்களை ஏற்று நடித்திருந்தனர்.

தற்காலத்தில் சில நாயகர்கள் அவ்வப்போது அது போன்ற முயற்சிகளில் இறங்குகின்றனர். ஆனாலும், ரசிகர்கள் திரையைப் பார்த்து உறைகிற அளவுக்கான ‘பெர்பார்மன்ஸ்’ வெளிப்படுகிற கதைகளைத் தேர்ந்தெடுப்பதில்லை.

அந்தத் தடையை உடைத்துக்கொண்டு, புதுமாதிரியான பாத்திர வார்ப்புகளில் இளைய தலைமுறை நாயகர்கள் பொருந்திக் கொள்ள வேண்டும். அதைத் திரையுலகினருக்கும் ரசிகர்களுக்கும் ஒருசேரச் சொல்கிற படைப்புகளில் ஒன்றாக ‘ப்ரியமுடன்’ திகழ்கிறது..!

– மாபா